‘வசதி வாய்ப்புகள் பெருகும்’ - தனுசு ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

By Guest Author

தனுசு சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். எந்த காரியத்தை தொட்டாலும் ஆரம்பம் நன்றாக இருந்தது, ஆனால் முடிவுகள் மோசமாக இருந்ததே என்று வருந்திய நிலை மாறும். பிள்ளைகளால் கவலைகளும், செலவுகளும் வந்த நிலை மாறி, இனி அவர்களால் மரியாதை கூடும். குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அவர்களின் சாதனைகள் மிகவும் உயர்வாகப் பேசப்படும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்போது முடியும். நல்ல மணமகன் வந்தமைவார். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்து ழைப்பால், பூர்வீக சொத்து பிரச்சினைக்கு முடிவு வரும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசிப் பழகவும். குடும்பப் பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் கூறுவதை நிறுத்தினால் நன்மை உண்டாகும். கர்ப்பிணிகள் அதிக பாரம் சுமக்கக் கூடாது. வாகன ஓட்டிகள் அதிக எச்சரிக்கையுடன் வாகனத்தில் செல்ல வேண்டும். சாலையைக் கடக்கும்போது அலைபேசியில் பேசிக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கலாம். புதிய படிப்பு படிப்பதிலும் ஆர்வம் வரும்.
வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண் டென்ஷன், விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன் - மனைவிக்குள் சந்தேகம், விவாதங்கள் வந்து போகும். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும், சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். 4-ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய் வரக்கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீடு வாங்கும் போது சொத்துக்குரிய தாய்பத்திரத்தை கேட்டு வாங்குங்கள். 10-ல் கேது அமர்வதால் வேலைச்சுமை, வீண் பழி வந்துசெல்லும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

சனிபகவான் இந்த வருடம் உங்கள் ராசிக்கு 3-வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள்.

வியாபாரிகளே! மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர், சிமெண்ட், செங்கல், உணவு வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகளால் பந்தாடப்பட்ட நிலை மாறும். செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடிய நிலை இனி மாறும். மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை சென்று வணங்குங்கள். காது கேளாதவர்கள், வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். பிணிகள் அகலும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்