ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன் | 30.10.2023 - 19.05.2025

By Guest Author

நிகழும் சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13ஆம் தேதி திங்கள்கிழமை தட்சிணாயனப் புண்ய கால, சரத்ருதுவில் கிருஷ்ணபட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், வ்யதீபாதம் நாமயோகம், கரசை நாமகரணம் மந்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் நேத்திரம் 2 ஜீவனம் 1 நிறைந்த நன்னாளில் (30.10.2023) மாலை 4 மணி 40 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகுபகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேதுபகவானும் நுழைகின்றனர். 30.10.2023 முதல் 19.05.2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள்.

பொதுவாக இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்கு பாம்பு சென்றது என்று யாராவது சொன்னாலே, நமக்குள் ஒருவித பயம் இருக்கத்தான் செய்யும். அதே பாம்பு ஒன்றரை ஆண்டுக்கு ஒரே இடத்தில் தங்கப் போகிறது என்று தெரிந்தால், அந்தப் பாம்பு எந்த நேரத்தில் படமெடுத்து ஆடும், எந்த நேரத்தில் கொத்தும், நம் மீது வந்து விழுந்துவிடுமோ, நம்மைக் கொத்திவிடுமோ என்ற கவலை அதிகமாகவே இருக்கும்.

ராகு, கேது பாம்புகள் அடிக்கடி இடம் மாறுவதில்லை. ஆனால் ஒன்றரை வருஷத்துக்கு ஒருமுறைதான் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. தேடிப் போய் இரை தேடாமல் மலைப் பாம்புகளைப் போல தன் இருப்பிடத்தை நாடி வரும் கோள்களின் கோலங்களை மாற்றும் சக்தி படைத்தவை. குரு, சுக்ரன் போன்ற சுபக் கிரகங்கள் கைவிட்டு விட்டாலும் தங்களை மட்டும் நம்பி இருப்பவர்களை கோடி கோடியாய் சம்பாதிக்க வைத்து ஆட்சியைக் கைப்பற்றி அரியணையிலும் அமர வைத்து விடுவார்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை சனிபகவானின் பார்வையில் இருந்த ராகு இப்போது பலமாக வந்து அமர்கிறார். குருபகவான் வீட்டில் ராகு வந்திருப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். காலப் புருஷ தத்துவப்படி பனிரெண்டாம் வீட்டில் ராகு நிற்பதால் மக்களிடையே சேமிக்கும் குணம் குறையும். வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும். சந்தோஷமாய், நிம்மதியாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

குடும்பத் தொழில், பாரம்பரியத் தொழில் அபிவிருத்தி அமையும். மீன் வீட்டில் பாம்பு அமர்வதால் கைவினைப் பொருட்கள் தொழில் சூடு பிடிக்கும். சுற்றுச்சுழல், மாசுக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட கடுமையான புது சட்டங்கள் நடைமுறைக்கு வரும். மலைப் பகுதிகளில் காடு சார்ந்த இடங்களில் வீடு கட்ட தடை வரும். மிசோரம், உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்கள் பாதிப்படையும்.

ராகு மீனத்தில் அமர்வதால் உணவு உற்பத்தி குறையும். சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் வறட்சியும் நிலவும். பருவம் தவறிய மழையால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும். கடலிலிருந்து (கடல் பாசி) மருந்து கண்டுபிடிக்கப்படும். கடல் கொந்தளிப்பால் கடற்கரையோர நகரங்கள் பாதிக்கும். அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்படும். நிலப்பகுதி சிலவற்றை கடல் கைப்பற்றும். கட்டுப்பாட்டை இழந்து விமானங்கள் பறந்து விபத்துகள் நிகழும். நிலக்கரி சுரங்கங்கள் மூழ்கும். கடற்கொள்ளையர்கள், கடல் சண்டை, சுனாமிகளால் சிறு தீவுகள் பாதிப்படையும். வளைகுடா நாடுகளில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும்.

நட்புறவாடும் நாடுகளுக்குள்ளேயும் பகைமை வரும். தூதரக அதிகாரிகள் சிக்கல்களில் சிக்கிக் கொள்வர். மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், குருமார்கள் பாதிப்படைவார்கள். கோயில்களுக்கு பாதுகாப்பு தேவை. எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு வர இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறையும். கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்ற ஆராய்ச்சிகள் அதிகமாகும். கடற்படையில் புது கப்பல்கள் சேர்க்கப்படும். இந்திய ராணுவம் முற்றிலும் நவீனமயமாகும். தேர்தல் விதிமுறைகள் மாறும்.

கேதுவின் பலன்கள்: சாய்ந்து சாய்ந்து, சரிந்து பிறகு நிமிரும் வீடான துலாம் ராசியிலிருந்து கறார் ராசியான கன்னி ராசிக்குள் கேது நுழைகிறார். புதன் வீட்டில் கேது அமர்வதால் மக்களிடையே விவாத மனப்பான்மை அதிகரிக்கும். சாதாரண சண்டைக்கெல்லாம் சட்டப்பேரவையை நோக்கியும், நீதிமன்றத்தை நோக்கியும் மக்கள் படை எடுப்பார்கள். சிறுபான்மை மக்களிடையே விழிப்புணர்வு பெருகும். முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் கலகம், கலவரத்தை தூண்டும் வேலையை ஒழுங்காக செய்யும்.

மாநிலக் கல்விக் கொள்கைக்கும், மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கும் இடையே நடக்கும் ஈகோவால் மாணவர்களின் நிலை பரிதாபமாகும். மத்திய அரசின் கல்விக் கொள்கை பரவலாக பின்பற்றப்படும். தொழிற் பயிற்சிக் கல்வியில் மாணவர்கள் அதிகம் சேர்வர். ஆராய்ச்சி (பிஎச்.டி)படிப்புக்குரிய ஆர்வம் குறையும். ஆனால் (Space Research) வானியல் சார்ந்த படிப்புகளுக்கு போட்டிகள் கூடும்.

வழக்கறிஞர்களின் பட்டயச் சான்றுகள் சரி பார்க்கப்படும். அவர்களை கட்டுப்படுத்தவும் புது சட்டங்கள் நடைமுறைக்கு வரும். பயன்பாட்டில் இல்லாத சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டு புது சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்திருக்கும். ஆடிட்டர்களை கட்டுப்படுத்த புது சட்டங்கள் வரும். வருமானவரித் துறையினர் கடுமையாக நடந்து கொள்வர். பணப் பரிமாற்றம் சார்ந்த கண்காணிப்புகள் அதிகமாகும். அக்கவுண்டன்சி, காமர்ஸ், சோசியாலஜி, டேட்டா கலெக்ஷன், கிரைம், டிடெக்டிவ் சம்பந்தப்பட்ட படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவர்.

கம்யூனிகேஷன் திறன் உள்ள மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். சொல் விளையாட்டுக்குரிய கிரகமான புதன் வீட்டில் கேது அமர்வதால் உள் அரங்கு விளையாட்டுகளில் (Indoor Games) இந்தியா பதக்கம் வெல்லும். செஸ் போட்டியில் இந்தியா சாதிக்கும். மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி தன் கையே தனக்குதவி என்பதையும், பறந்து பறந்து சம்பாதிப்பதைவிட அருகே இருக்கும் பழக்கப்பட்ட தொழிலை செய்து பணம் பார்ப்போம் என்கிற மனநிலையையும் தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE