ராகு கேது பெயர்ச்சி பொதுப்பலன் - அக்.8, 2023 முதல் ஏப்.26, 2025 வரை | ஒரு பார்வை

By Guest Author

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீசோபக்ருத் வருஷம் - தக்ஷிணாயனம் - வர்ஷ ரிது - கன்னியா ரவி - புரட்டாசி மாதம் 21ம் தேதி (08.10.2023) - அன்றைய தினம் தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை - க்ருஷ்ணபக்ஷ தசமியும் - பூச நக்ஷத்ரமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 23:59க்கு (மாலை மணி 03:40 க்கு) கும்ப லக்னத்தில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீசோபக்ருத் வருஷம் - தக்ஷிணாயனம் - வர்ஷ ரிது - கன்னியா ரவி - புரட்டாசி மாதம் 21ம் தேதி (08.10.2023) - அன்றைய தினம் தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை - க்ருஷ்ணபக்ஷ தசமியும் - பூச நக்‌ஷத்ரமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 23:59க்கு (மாலை மணி 03:40க்கு) கும்ப லக்னத்தில் கேது பகவான் துலா ராசியில் இருந்து கன்னியா ராசிக்கு மாறுகிறார்.

மாறக்கூடிய ராகு பகவான் விசுவாவசு வருஷம் - உத்தராயணம் - வஸந்த ரிது - சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) - வெள்ளிக்கிழமை வரை மீனத்தில் இருந்து அருளாட்சி வழங்குவார். மாறக்கூடிய கேது பகவான் விசுவாவசு வருஷம் - உத்தராயணம் - வஸந்த ரிது - சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) - வெள்ளிக்கிழமை வரை கன்னியில் இருந்து அருளாட்சி வழங்குவார். பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.

ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

பொது பலன்கள்: அறிவியல் பூர்வமாக நமது DNA தான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு - கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

கன்னியா ராசி மற்றும் மீன ராசி என்பது உபய ராசியாகும். இதில் மீன ராசி பஞ்ச பூத தத்துவத்தில் நீரையும் - கன்னியா ராசி என்பது பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தையும் குறிக்கும். ராகு என்பது மிகப் பெரிய என்ற விஷயங்களையும் கேது என்பது குறுகிய விஷயங்களையும் குறிக்கும். இந்த பெயர்ச்சியினால் வறட்சி குறையும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். ஏரி குளம் போன்றவை நிரம்பும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். புதிய ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தண்ணீர் சார்ந்த இடங்களில் அதிகளவு விபத்து - அகால மரணங்கள் போன்றவை ஏற்படும். விமானம் - கப்பல் போன்றவற்றில் அடிக்கடி பழுதாவதும் அதை சரி செய்வதுமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். அமெரிக்க தேசத்தில் இருந்து வரும் சுணக்க நிலை மாறும். இஸ்லாமிய தேசங்களில் ஒற்றுமையுணர்வு ஓங்கும். இந்திய தேசத்தைப் பொறுத்தமட்டில் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் ஏற்றம் பெறும். ராணுவ ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.

ராகு: தன்மை - பெண் | வடிவம் - நெடியர் | நிறம் - கறுப்பு | குணம் - தாமஸம் | பிணி - பித்தம் | திக்கு - தென்மேற்கு | ரத்தினம் - கோமேதகம் | தான்யம் - உளுந்து | புஷ்பம் - மந்தாரை | சமித்து - அறுகு | வாகனம் - ஆடு | சுவை - கைப்பு | உலோகம் - கருங்கல் | ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருட காலம் | வஸ்திரம் - கறுப்பு | தேவதை - காளியம்மன் | உச்ச ராசி - விருச்சிகம் | நீச ராசி - ரிஷபம் | நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம் | மூலத் திரிகோணம் - கும்பம் | நக்ஷத்ரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் | திசை வருடம் - 18 வருடங்கள் | நட்பு கிரகம் - சுக்கிரன், சனி | பகை கிரகம் - சந்திரன், செவ்வாய், சூரியன் | பார்வை - 7-வது பார்வை | காரகன் - பிதாமககாரகன் | உறுப்பு - கணுக்கால், முழங்கால்

கேது: தன்மை - அலி | வடிவம் - நெடியர் | நிறம் - சிவப்பு | குணம் - தாமஸம் | பிணி - பித்தம் | திக்கு - வடமேற்கு | ரத்தினம் - வைடூரியம் | தான்யம் - கொள்ளு | புஷ்பம் - செவ்வல்லி | சமித்து - செம்மரம் | வாகனம் - சிங்கம் | சுவை - உரைப்பு | உலோகம் - துருக்கல் | ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருட காலம் | வஸ்திரம் - பலவண்ணங்கள் | தேவதை - வினாயகர் | உச்ச ராசி - கும்பம் | நீச ராசி - சிம்மம் | நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் | மூலத் திரிகோணம் - சிம்மம் | நக்ஷத்ரங்கள் - அஸ்வினி, மகம், மூலம் | திசை வருடம் - 7 வருடங்கள் | நட்பு கிரகம் - சுக்கிரன், சனி | பகை கிரகம் - சந்திரன், செவ்வாய், சூரியன் | பார்வை - 7-வது பார்வை | காரகன் - மாதாமகாரகன் | உறுப்பு - கை, தோள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE