சுஷ்மா சோமசேகர்: வளமான எதிர்காலம்

ஏராளமான தன்னம்பிக்கை, கச்சேரி மேடையில் பக்கவாத்தியக்காரர்களை அரவணைத்துச் செல்லும் திறன், ரசிகர்களை ஈர்க்கும் நல்ல குரல் வளம் இவை எல்லாம் நிறைந்திருந்தது சுஷ்மா சோமசேகர் பிரம்மக் கானச் சபாவிற்காகப் பாடிய கச்சேரியில்.

ஆதாரச் சுருதிக்கும் கீழேயும், மேல் ஷட்ஜத்திற்கும் மேலேயும் மிகவும் அநாயாசமாய் அவர் குரல் பயணம் செய்தது. முத்துஸ்வாமி தீட்சிதரின் ஸரஸீருஹாசன ப்ரியே என்ற நாட்டை ராகக் கீர்த்தனையுடன் கச்சேரி களைகட்டத் தொடங்கியது. ஜனரஞ்சகமாய்க் கமாஸ் ராகத்தைக் கோடி காண்பித்துப் பாடிவிட்டு, மைசூர் வாசுதேவாசாரியாரின் 'ப்ரோசேவா' கிருதியைப் பாடினார். சிட்டை ஸ்வரத்தைத் திரிகாலமாய்ப் பாடியது அவரின் லய ஞானத்திற்குச் சான்றாய் இருந்தது. விஸ்தாரமாய் ஹிந்தோள ராகத்தைப் பாடினார். ஒவ்வொரு சஞ்சாரமும் வித்தியாசமாய் இருந்தது.

சில இடங்களில் அதிக உற்சாகத்தினாலோ என்னவோ பிருகாக்கள் வழுக்கின. அது கவனிக்கப்பட்டால் கச்சேரி இன்னும் பரிமளிக்கும்.

விறுவிறுப்பாய் ஜனரஞ்சனி ராகத்தில் தியாகய்யரின் 'விடஜாலதுரா' என்ற கீர்த்தனை பாடி, கல்யாணி ராக ஆலாபனையை மூன்று ஸ்தாயியையும் முழுமையாய்ப் பயன்படுத்தி ரஞ்சகமாகப் பாடினார். 'பஜரேரேச்சித்த பலாம்பிகாம்’, என்ற முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதியைப் பாடி 'தேவீம் சக்தி பீஜோத்பவ’ என்ற இடத்தில் இரண்டு காலத்திலும் கச்சிதமாய் நிரவல் செய்து, அழகாக ஸ்வரபிரஸ்தாரம் செய்தார்.

ராஜீவின் வயலின் வாசிப்பில் நல்ல முதிர்ச்சி. கல்யாணியையும் ஹிந்தோளத்தையும் அநாயாசமாய் வாசித்தார். பிரவீண் குமார் மிருதங்க வாசிப்பில் தேர்ந்த கலைஞரின் கை வண்ணம் தெரிந்தது. துக்கடாவிற்கு நேரமின்றி அஷ்டபதியுடன் கச்சேரி நிறைவடைந்தது.

சுஷ்மாவின் கச்சேரியில் வித்தியாசமான முயற்சிகள் நிறைய இருந்தன. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் எல்லா முயற்சிகளையும் மேடையில் சோதித்துப் பார்ப்பதைத் தவிர்த்தால் கச்சேரி மேலும் பரிமளிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE