இது ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் சென்னை கவின்கலை கல்லூரியில் தன் மாணவர் ஒருவருக்குச் சொன்னது. தமிழ் ஓவியம் அல்லது மெட்ராஸ் ஸ்கூல் என்ற எந்த வகைமாதிரியின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுவதாயிருந்தாலும் சந்தானராஜ் என்ற அந்த ஓவியன் அதில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி. தமிழக ஓவிய மரபின் தொடக்கப் புள்ளியும் அவரே.
அழகியல் உணர்வுள்ள ஆங்கிலேயர் ஒருவரால் இந்தியக் கைவினைப் பொருட்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கப்பெற்ற ஒரு கல்லூரி பின்னர் இந்தியாவின் கலை இயக்கத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உருவானது ஒரு வரலாறு. அந்தக் கல்லூரியில் ராய் சௌத்ரி, பணிக்கர் ஆகிய ஆளுமைகள் இந்திய நவீனக் கலை மரபை உருவாக்கியது இன்னொரு வரலாறு.
இவற்றோடு எந்த வகையிலும் குறைவான தில்லை, தனபால், சந்தானராஜ், முனுசாமி ஆகியோரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட நுட்பமான ஓவிய மரபு. அதில் சந்தானராஜ் ஒரு தனியிடம் வகிக்கிறார். சந்தானராஜின் கோடுகளில் அழிக்க முடியாத தொன்மை வாய்ந்த வரலாற்றின் ஊடும் பாவுமான ஒரு வெளி இங்கே திறக்கப்பட்டது.
சந்தானராஜின் தாக்கம்
“புள்ளிகளை இணைப்பதல்ல கோடு, புள்ளிகளுக்கு இடையே ஒரு வெளி இருக்கிறது அந்த வெளியையும் உள்ளடக்கியதுதான் கோடு” என்ற அவரின் கூற்று மிகத் தனித்தன்மையானதோர் கலைப் பண்பாட்டை, இன்றளவிற்கும் இயங்குநிலையில் உள்ள ஒரு வரிசையை, விட்டுச் சென்றிருக்கிறது. சந்தானராஜின் பாதிப்பு தமிழ்ச் சூழலில் இயங்கும் முக்கிய ஓவியர்களில் பலரிடமும் இருக்கிறது.
1932இல் திருவண்ணாமலையில் ஒரு தலித் கிறிஸ்தவராகப் பிறந்த சந்தானராஜ் தனது நான்கு வயதிலிருந்து ஓவியம் வரைதலைத் தவிர்க்க முடியாத ஒரு மன எழுச்சியாகக் கொண்டிருந்தார். அவருக்கும் அவரது ஓவியச் செயல்பாட்டுக்கும் இடையேயான உறவு தீவிரமானதாகவே இருந்தது.
ஒரு ஓவியர் தன் படைப்போடு கொள்ளும் ஆழமான உறவில் சந்தானராஜ் பல முக்கியச் சிகரங்களை எட்டினார். மிகவும் இயல் பான பரிவான மனிதராகக் காணப்பட்ட சந்தானராஜ் என்ற மனிதன் சந்தானராஜ் என்ற ஓவியனாக மாறும் தருணங்களில் எவராலும் நெருங்கமுடியாத கொதிநிலையில் காணப்படுவார். அவர் ஓவியங்களின் முக்கியக் கூறுகளான இசைத்தன்மை வாய்ந்த ஒரு மாயா விநோதத்தையும் உருவங்கள் குறைந்து எழும் சாராம்சத்தின் உண்மையையும் ஒருவர் கனமாக உணர முடியும். அவர் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடும் வேளைகளில் இந்தத் தன்மையின் ஸ்தூலமான வடிவமாகவே மாறிப் போனார்.
பணிக்கர் இந்திய ஓவிய மரபை உருவாக்க மெனக்கெட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னைக் கலைக் கல்லூரியில் இருந்த சந்தானராஜ் பணிக்கரின் கருத்துகளால் பாதிக்கப் பெற்றார். இந்தியாவின் பிரத்யேக தேசிய நவீன கலைப் பாணியை உருவாக்கப் பணிக்கர் மேற்கொண்ட செயல்பாடுகள் அன்றைய கலைஞர்கள் அனைவருக்கும் பெரும் தேடலையும் படைப்பாக்கத்தின் உள்ளே ஆழ்ந்து போகும் உந்துதலையும் அளித்தன. அந்தத் தேடலில் தனித்தன்மை வாய்ந்த அசலான ஒரு படைப்பு வெளியைக் கண்டடைந்தவர் சந்தானராஜ்.
வாழ்வனுபவத்திலிருந்து பிறந்த கலை
சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நவீன மரபு உருவான காலகட்டத்தில் பெங்கால் பாணி ரிவைவலிஸ்ட் ஓவியங்களை விட்டு நவீன ஓவியங்களை வரையும் முயற்சியில் அனைவரையும் பணிக்கர் செலுத்தினார். அந்த நவீன ஓவியம் ஐரோப்பாவின் இம்ப்ரெஷனிஸ்ட் ஓவிய இயக்கத்தின் பாதிப்புகளைக் கொண்டிருந்தது. நவீனமான ஒரு மனநிலையும் வாழ்க்கை முறையும் சிந்தனையும் கொண்டிருந்த சந்தானராஜ் உயிரோட்டமான தன் வாழ்வனுபவத்திலிருந்தும் தான் பிறந்து வளர்ந்த விவசாய நிலத்தின் வடிவங் களிலிருந்தும் வரையத் தொடங்கினார். அவை தமது உள்ளடக்கத்தில் ஐரோப்பாவின் பாதிப்பு இல்லாதவை. ஆனால் இந்திய மரபில் எடுத்தாளப்பட்டுவந்த முகலாய மினியேச்சர் ஓவியங்கள் அல்லது சற்றே மாற்றப்பட்ட அஜந்தா எல்லோரா வகைப்பட்ட வடிவங்கள் ஆகியவற்றில் இல்லாத ஒரு புது அழகாய் சந்தானராஜின் ஓவியங்கள் இருந்தன.
சந்தானராஜின் ஓவியங்கள் கோடுகளில் கட்டப்பட்டவை. ஒரு கித்தானுக்குள் முன்னும் பின்னும் என அவர் உருவாக்கும் தளங்கள் ஒன்றுடன் ஒன்று ஊடாடி ஏற்படுத்தும் வெளி பல நிலைகளில் செயலாற்றும் வல்லமை கொண்டது. வகைமாதிரிகளில் அடைபடாத கலை அவருடையது. இயற்கையின் அடியாழத்தில் மிதக்கும் மாய உணர்வுகளில் இருந்தும் உன்மத்தமாக வடித்தெடுக்கப்பட்ட கலைப்பரப்பு அது.
உண்மையின் அழகியல்
கிராமங்களின் வடிவத்தில் கனவுகளையும், சிக்கனமான கோடுகளில் பெண்களின் இருப்பு, அவர்களுள் கட்டமைக்கப்பட்ட ஆண்பார்வை இரண்டையும் வெளிக் கொணர அவருக்குப் பல தருணங்களில் சாத்தியப்பட்டிருக்கிறது. ஒரு வித்தியாசமான வெறி நிலையில் வரையும் அவரின் ஓவிய ஆளுமையைக் காட்டிலும் சில கோடுகள், சில நிலப்பரப்புகளைக் கொண்டே வேறொரு உண்மையை, அவற்றின் உள்ளடகத்தைப் பேசிய ஓவிய ஆளுமை முன் நிற்கிறது.
பல ஓவியங்களில் நாட்டார் மரபின் அலங்காரக் கூறுகளை அவர் கையாண்டிருந்தபோதிலும் அவர் அழகை முன்நிறுத்தாததவர். அவர் உருவாக்கிய அழகியல் உண்மையின் அழகியல். வடிவங்களிலும் வண்ணங்களிலும் இல்லாமல் சாரம்சத்தில் ஒரு பிரதேசத்தின் பெருங்கால வாழ்வில் இருந்து உரித்து எடுக்கப்பட்ட வரையறுக்க முடியாத கலை நினைவின் இயக்கம் கொண்ட நேரடியான அழகியல்.
அடையாள மீட்பு என்ற முக்கியமான ஆனால் சிக்கல் நிறைந்த பாதையில் செல்வதற்குக் காரணங்கள் இருந்தபோதும் கலையின் ஆக முக்கியமான நிலை முற்று முழுதான விடுதலை மனநிலையே என்ற கோட்பாட்டில் அவர் தன்னை முழுவதுமாக ஓவியச் செயல்பாட்டிலேயே நிறுத்திக்கொண்டார். அரசியலைத் தவிர்த்து அல்ல, ஆழமான அரசியலை அழகியலுடனும் தொன்மத்தின் வடிவங்களிலும் காண முடியும் என்ற நம்பிக்கையால்.
சந்தானராஜ் தொடங்கிவைத்த இந்தக் கலைமரபு பல்வேறு திசைகளில் பயணித்துப் பல நிலைகளை இன்று எட்டியுள்ளது.
“எங்கிருந்து தொடங்குவது என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது மகனே! எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்... இதோ இங்கே கிடக்குது பாரு இந்த காய்ஞ்ச இலை, இந்த சருகிலிருந்துகூடத் தொடங்கலாம்”.
இது ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் சென்னை கவின்கலை கல்லூரியில் தன் மாணவர் ஒருவருக்குச் சொன்னது. தமிழ் ஓவியம் அல்லது மெட்ராஸ் ஸ்கூல் என்ற எந்த வகைமாதிரியின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுவதாயிருந்தாலும் சந்தானராஜ் என்ற அந்த ஓவியன் அதில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி. தமிழக ஓவிய மரபின் தொடக்கப் புள்ளியும் அவரே.
முக்கிய செய்திகள்
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
4 years ago
கலை
4 years ago
கலை
5 years ago
கலை
5 years ago