“செம்மறி ஆடே… செம்மறி ஆடே… செய்வது சரியா சொல்…” என்ற மனோஜ் கியானின் இசையில் ஒலித்த பாடலைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடலின் காட்சியில், வயலின் ஒலிக்கும் இடத்தில், கிராமத்துச் சிறுவன் ஒருவன் வாசிப்பதுதான், இந்தக் கொட்டாங்கச்சி வாத்தியம். கடற்கரையிலும் திருவிழாக்களிலும் நாம் பார்த்த இந்த வாத்தியம்தான் ஒருவரின் வாழ்வாதாரமே என்றால் அது ஆச்சரியம்தானே! சீர்காழியைச் சேர்ந்த அவரின் பெயர் – கொட்டாங்கச்சி ராமு.
இதிலேயே ஸ்ருதி சேர்த்துப் பழைய திரைப்பாடல்களை வாசிக்கிறார். கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்கள்… என்று தொடங்கிய இவரின் இசைப்பயணம் இன்றைக்குப் பிரபலமான நிகழ்ச்சிகளின் இசை மேடைகளிலும் ரீங்காரிக்கின்றது!
இசை எங்கிருக்கிறது…வாத்தியத்துக்கு உள்ளா வாசிப்பவனிடத்திலா?
- என்றொரு கேள்வியை, தன்னுடைய ஒரு கவிதையில் எழுப்பியிருப்பார் வைரமுத்து. அந்தக் கேள்விக்குப் பதிலாய் நமக்குத் தெரிந்தார் கொட்டாங்கச்சி ராமு. அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…
“நான் பள்ளிக்கூடம் போய்ப் படிக்காதவன். குருவிடம் இசையைக் கற்றுக்கொள்ளாதவன். எனக்கு ராகத்தின் பெயர் தெரியாது. தாளத்தின் பெயர் தெரியாது. இப்போது என்னுடைய குடும்ப அட்டையில் உள்ளபடி, எனக்கு 61 வயது ஆகிறது. இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமும் ஆசையும் எனக்கு வந்ததே ஒரு சுவையான சம்பவம்.
அப்போது எனக்கு 5 வயது இருக்கும். விளையாடுவதற்காக ஒரு சிறிய இசைக் கருவியை என் அப்பா வாங்கித் தந்தார். அதை சில நாள்கள் வாசித்துவந்தேன். சில நாள்களில் அதன் இசை, என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருநாள் அந்த இசை கருவி உடைந்துவிட்டது. சில மாதங்கள் கழித்து, மீண்டும் அதே இசைக் கருவியை ஒருவர் விற்றுவந்தார். அதை பார்த்ததும் எனக்குப் பழைய ஞாபகம் மீண்டும் வந்தது. மீண்டும் அந்த இசைக் கருவியை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். வெறும் சப்தம் மட்டும்தான் வந்தது. அந்தக் கருவியை விற்பனை செய்பவரிடம், “நீங்கள் வாசித்தால் மட்டும் பாட்டு வருகிறதே… நான் வாசித்தால் பாட்டு வரவில்லையே…” என்று கேட்டேன்.
“விரல்களை மாற்றி மாற்றி அழுத்தியபடி தொடர்ந்து வாசித்தால், நீ கேட்ட பாட்டு வரும்” என்று சொன்னார்.
அந்த இசை கருவி எதுவென்றால், “பாட்டுக்கு நான் அடிமை” படத்தில் கதாநாயகன் கையில் ஒலிக்கும் கருவி. அதை தொடர்ந்து நான் வாசித்துக்கொண்டே வந்தேன். நாளடைவில் சப்தங்களை ஒன்றுக்கொன்று கோவை செய்து வாசிக்க ஆரம்பித்தேன்.
ஒருபாட்டில் ஒருசில வார்த்தைகள் வரும். ஒருசில வார்த்தைகள் வராது. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, வழக்கம்போல் ஒருநாள் வாசிக்கப் பழகிக் கொண்டிருந்தேன்.
அப்போது அந்த வழியாகச் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கர், சப்தம் கேட்டு, சைக்கிளை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தார்.
“எங்கே இப்போது வாசிச்சியே… திரும்பவும் ஒருமுறை அதை வாசி” என்றார்.
“நான் இப்போதுதான் வாசித்துப் பழகுறேன்… எனக்கு வாசிக்கத் தெரியாது” என்று கூறினேன்.
உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது.
“இப்போ நீ வாசிச்சுக் கேட்டேன்.. திருப்பி வாசிக்கச் சொன்னா, தெரியாதுன்றீயா” என்று கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தார்.
நான் பயந்துகொண்டே வாசிக்க ஆரம்பித்தேன்.
அவர் “மீண்டும் வாசி… மீண்டும் வாசி..” என்று கேட்டபடியே இருந்தார். நானும் சளைக்காமல் வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருகட்டத்தில், “ஆகா.. ஓகோ” என்று பாராட்டினார். அதோடு நிற்கவில்லை, தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தார். எனக்கு அந்த ஐந்து ரூபாய் வாங்கிவுடன், இனம்புரியாத ஓர் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
அவர் உற்சாகப்படுத்தியதன் விளைவு, இந்த வாத்தியத்தை விடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதிகக் கவனத்துடன் இதை வாசிக்கவேண்டும் என்பதை வைராக்கியமாக எடுத்துக்கொண்டு, இரவும் பகலும் பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் பிளாட்பாரத்தில் வாசித்துப் பிழைத்துவந்தேன். சிலகாலம் பள்ளிக்கூடங்களில் வாசித்தேன். இப்போது மேடைகளில் வாசித்துவருகிறேன். இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் பல மேடைகளில் நிகழ்த்திவிட்டேன்.
2005 ஆகஸ்ட் 15 அன்று, நாகை மாவட்ட ஆட்சியரால் கலைநன்மணி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டேன். உ.வே.சா. அமைப்பில் இருந்து “இசைப் பேரரசர்” என்று நற்சான்றிதழ் வழங்கினர்.
குறைந்த செலவில் எளியமுறையில் இந்தக் கருவியை வேண்டுபவர்களுக்கு செய்துதருகிறேன். இதை வாசிப்பதற்கும் பயிற்சியளிக்கிறேன். “ஸபஸ” ஸ்ருதி சேர்த்துத்தான் பாடல்களை வாசிக்கிறேன். ஸ்ருதிக்கு ஏது பேதம்? என்னுடைய கொட்டாங்கச்சி வயலினிலும் ஸ்ருதி சேராமல் இல்லை!” என்றார் ராமு.
முக்கிய செய்திகள்
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
4 years ago
கலை
4 years ago
கலை
5 years ago
கலை
5 years ago