பார்த்தசாரதி சுவாமி சபா 3 நூற்றாண்டுகளைக் கண்ட சபை

By ராஜேஸ்வரி ஐயர்

இந்தியக் கலை, கலாசாரம், நுண்கலைகளைப் பிரபலப்ப டுத்தவும் அவற்றைப் போற்றி பேணவும் விரும்பினார் மணி திருமலாசாரியார் என்ற கலை ஆர்வலர். இந்த விருப்பத்தின் விளைவாக 1896இல் சங்கீத வித்வத் சபை என்னும் அமைப்பு உருவானது.

1900ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி நினைவாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா என்ற பெயரில் இது பதிவு செய்யப்பட்டது. இதுவே முதன்முதலில் தோன்றியச் சபா என்று சொல்லலாம்.

நிகழ்ச்சிகள் முதல் ஐந்து ஆண்டுக் காலம் மணி திருமலாசாரியார் இல்லத்திலேயே நடந்தன. ஓய்வு பெற்ற மைசூர் திவான்களும், திருவாங்கூர் தர்பாரை அலங்கரித்தவர்களும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும், சென்னை மாகாண உறுப்பினர்களும் சபாவின் நிர்வாக உறுப்பினர்கள். ஜி.என். பாலசுப்பிரமணியமின் தந்தை ஜி.வி. நாராயணசாமி சபாவின் முதல் செயலராகப் பதவி வகித்தார்.

கர்நாடகச் சங்கீதம் மட்டுமல்லாமல் ஹரிகதை, நாடகம், நாட்டியம், ஆன்மீக உபன்யாசங்கள் ஆகியவற்றுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. ஒரு காலத்தில் ஸ்ரீகிருஷ்ண பாகவதர் ஆண்டுதோறும் இங்கே ஹரிகதை நிகழ்த்தியிருக்கிறார்.

ராவ் பகதூர் பட்டம் பெற்ற பேராசிரியர் எம். ரங்காச்சாரி வழங்கிய மத் பகவ கீதை சொற்பொழிவுகளின் தொகுப்பு மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகமாக இச்சபாவினரால் வெளியிடப்பட்டது. பண்டிட் மதன் மோகன் மாளவியாவும் இங்கு உரையாற்றியிருக்கிறார். கிருஷ்ணப்பா, பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார், புல்லாங்குழல் சரபா சாஸ்திரிகள், திருக்கோடிக்காவல் கிருஷ்ணா ஐயர், வைத்தியநாத ஐயர், மதுரை புஷ்பவனம், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை, அழகிய நம்பி, தட்சிணாமூர்த்தி, முது பெறும் கலைஞர் வீணை சேஷண்ணா ஆகியோர் இங்கு நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

அடுத்த தலைமுறைக் கலைஞர்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், சொளடையா ஆகியோர் மூலம் சபா மிகவும் பிரபலமடைந்தது. உலக யுத்தத்தின்போதுகூட இசை விழாக் காலங்களில் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவில்லை.

நாடகங்களும் இந்தச் சபாவில் அதிகம் நிகழ்த்தப்பட்டன. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை புராண நாடகங்களைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தினார். எஸ்.வி. சஹஸ்ரநாமம், சிவாஜி கணேசன், ஆர்.எஸ். மனோகர், மேஜர் சுந்தரராஜன் ஆகியோரும் இந்த அரங்கில் நாடகங்களை நிகழ்த்தினர்.

நாட்டிய மேதை பாலசரஸ்வதியின் அரங்கேற்றம் நடந்தது இந்தச் சபாவில்தான். பண்டிட் ரவி சங்கர், ஓம்கார்நாத் தாகூர், கங்குபாய், உஸ்தாத் பிஸ்மில்லா கான் ரோஷன் குமாரி போன்ற வடநாட்டு கலைஞர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள்.

“விருதுகள் வழங்குவதிலும் இசை, நாட்டிய, நாடகம் எனத் தனிப்பிரிவுகள் கொண்டு சங்கீத கலாசாரதி என்று இசைக்கும், நாட்டிய கலாசாரதி என்று நாட்டியத்திற்கும், நாடக கலா சாரதி என நாடகத்திற்கும் விருதுகள் வழங்கிவருகிறோம்” என்கிறார் பார்த்தசாரதி சபாவின் செயலர் கிருஷ்ணமூர்த்தி. கூடவே இளம் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

சபாவிற்கென்று சொந்த இடம் அமைய வேண்டும் என்பதே அவரது இதுவரை நிறைவேறாத கனவு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE