ஓவியக் கலை எல்லோருக்கும் கைவராத ஒரு கலை. இயற்கையின் மீது ஈடுபாடும் கற்பனை வளமும் வாய்க்கப்பெற்ற மனமுடையோருக்கு கைவந்த கலை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓவியர் கோவிந்தன்.
குறிப்பிடத்தக்க சமகால ஓவியர்களில் ஒருவர் கோவிந்தன். பண்ணுருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பிறந்த இவர் சிறு வயதில் கையில் கிடைத்த மண்கட்டிகளைக் கொண்டு சுவரில் கிறுக்கி பெற்றோரிடம் உதை வாங்கியபோது, எதிர்காலத்தில் ஓர் ஓவியராய் வருவார் என்பது அவரின் பெற்றோருக்கே தெரிந்திருக்காது.
பள்ளிப் பருவத்தில் ஓவிய ஆர்வம் வளர வளர, ஓவியத்தை ஒரு பாடமாக படிக்கலாம் என்பது இந்த கிராமத்து மாணவருக்கு தெரிந்திருக்கவில்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டையப் படிப்பில் சேர்ந்த பிறகுதான் ஓவியம், சிற்பம் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டதாகக் கூறுகிறார் இவர்.
ஓவியம் தீட்டுவதோடு சுடுமண் சிற்பம், சிமெண்ட் சிற்பம், மரச்சிற்பம், செப்புத் தகடுகளில் செய்யும் புடைப்புச் சிற்பம் எனப் பல வகைச் சிற்பங்கள் செய்வதில் நுட்பமான பயிற்சியைக் கல்லூரி நாட்களில் பெற்றார். கோட்டோவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்கள், கணினி ஓவியங்கள் என அத்தனை வகை ஓவியங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
கோவிந்தன் பாணி ஓவியங்களில் கோடுகளும் வண்ணங்களும் தனித்த அடையாளமுடையவை. குறைந்த கோடுகளைக் கொண்டே ஆற்றல் மிக்க ஓவியங்களை வரைவது இவருக்கு கைவந்த கலை.
சிற்றூர் கடவுள்களின் முகங்கள் மனித முகங்களோடு ஒத்திருப்பதையும் இவரின் கோட்டோவியங்களில் காணலாம். கோடுகளற்ற வண்ணங்களின் அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இவரின் தைல வண்ண ஓவியங்களில் நம் நாட்டுப்புற கோயில் வடிவங்கள் புலப்படுகின்றன.
நீர் வண்ணமாக இருப்பினும் அதில் இவரது முழுத்திறமையை வெளிப்படுத்துவார். சூரிய ஒளியை வண்ணத்தில் கொண்டுவரும் திறமையை இவரின் நீர் வண்ண ஓவியங்கள் பலவற்றில் காணலாம். இவரது கணினி ஓவியங்களிலும் மரபின் தொடர்ச்சி விடுபடாமல் உள்ளது சிறப்புக்குறியது. இவர் உருவாக்கிய சிற்பங்கள் பேராசிரியர்களால் பாராட்டப்பெற்றவை.
சிவலிங்கத்தை மலர் மொட்டு போன்ற வடிவத்தில் செம்பால் சிற்பமாக இவர் செய்துள்ளார். அச்சிற்பம் இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஓவியராகப் பணியாற்றி வரும் கோவிந்தன் ஓவிய, சிற்பக் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது, கவிதை எழுதுவது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என கலை இலக்கிய ஈடுபாட்டு உணர்வோடு இயங்கி வருகிறார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நிகழ்த்தியுள்ளார். சண்டிகரில் நடைபெற்ற உலகளாவிய வரைகலைக்கான கண்காட்சியில் முதன்முதலாகப் பங்கேற்ற தென்னிந்திய ஓவியர் கோவிந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை நாட்களில் தன் பிறந்த நடுக்குப்பத்திற்கு இன்றும் செல்வது வழக்கம். அதனால்தான் கோவிந்தன் ஓவியங்களில் இன்னமும் மண்கவுச்சி வீசிக் கொண்டிருக்கிறது!
இரத்தின புகழேந்தி - தொடர்புக்கு pugazhvdm@gmail.com
முக்கிய செய்திகள்
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
4 years ago
கலை
4 years ago
கலை
5 years ago
கலை
5 years ago