ரஞ்சகமான குரல் வளத்துடன் தீர்மானாமாய்ச் சிந்தித்துப் படைக்கப்பட்ட கச்சேரியாய் அமைந்தது ஆர்கே கன்வென்ஷன் ஹாலில் ரஞ்சனி அளித்த கச்சேரி. சாவேரியில் ‘ஸரஸூட’ வர்ணத்துடன் நிதானமாய்த் தொடங்கி, விறுவிறுப்பாய் இரண்டு கண்டம், ஒரு ரூபகம் என்று சந்தத் தாளத்தில் அமைந்த ‘உம்பர் தரு’ என்ற திருப்புகழைப் பாடினார். முத்துஸ்வாமி தீட்சிதரின் ‘ஸ்வாமிநாத பரிபாலயமாம்’ கிருதியைப் பாடி, தொடர்ந்து அதில் மத்யம காலச் சாகித்யமான ‘பூமி ஜலக்னி வாயு ககன கிரண’ என்ற இடத்தில் பின்னிப் புனைந்து ஸ்வரப் பிரஸ்தாரம் செய்தார்.
தீட்சிதரின் சம்பிரதாயப்படி காந்தாரமும், தைவதமும் ஆரோகணத்தில் இடம் பெறும் ஒரு பாடாந்தரமும் உண்டு.
‘பேகட மீகட’ என்ற சங்கீதப் பழமொழி உண்டு. அதாவது பேகட ராகம் பாலேடு போன்று சுவையானது. அதீதச் சுவையுடன் பேகடா ராகத்தை வழங்கினார். சங்கராபரணச் சாயல் இல்லாமல் இந்த ராகத்தைப் பாட ஒரு முதிர்ச்சி வேண்டும். பக்குவமாய்க் கையாண்டார். ராமஸ்வாமி சிவனின் தமிழ் கீர்த்தனையான ‘கடை கண் வைத்தென்னை ஆளம்மா’ கீர்த்தனையைப் பாடினார். இக்கட்டான இடமான ‘அகம் தெளிந்திகம் தன்னில் சுகம் பெற’ என்ற இடத்தில் கல்பனா ஸ்வரங்களைக் கச்சிதமாய்த் தொடுத்தார்.
அடுத்து வசந்தமாய் வந்தது கல்யாண வசந்தா ராகத்தில் தியாகய்யரின் ‘நீ தய ராதா’ கிருதி.
ராகம் தானம் பல்லவி ரஞ்சனியின் ஞானத்திற்குச் சவாலாய் இருந்தது. அது அவரே அவருக்கு அமைத்துக்கொண்ட சவால். பல்லவி அவரின் சொந்த அமைப்பு. ‘அமுதாகிய பாட்டுடன் செய் துதி - வாணியின் மலரினை நாடி’ என்று வார்த்தைகளுக்குப் பொருத்தமாய்ச் சரஸ்வதி ராகத்தில் ஆதி தாளத்தில் மூன்று அட்சரம் தள்ளி வழங்கினார்.
சரஸ்வதி ராகத்தை அனுபவித்து, சிறிய மொட்டாய் ஆரம்பித்து முழுவதும் விரிந்த மலராய் அளித்தார். வார்த்தைகள் புரியும்படி ஒதுக்கிச் செதுக்கி நிரவல் செய்தார்.
ஸ்தோதோவாக யதி என்பது நதியைப்போலச் சிறுத்துத் தொடங்கி விஸ்தரிக்கும். தீட்சிதர் அவருடைய கிருதிகளில் இதைக் கையாண்டுள்ளார். அதே வகையில் ‘வல்லி – கலாவல்லி சகலகலாவல்லி’ என்பதைக் கோர்வையாய் அமைத்துக் கல்பனா ஸ்வரத்தை முடித்தார்.
கபீர் தாசின் ‘கமல முக’ என்ற பஜன் மாலைத் தென்றலாய் வீசியது. வயலினில் பப்பு க்யான் தேவ், மிருதங்கத்தில் புர்ரா ஸ்ரீராம், கடத்தில் கிருஷ்ணா என்று அருமையாய் வாசித்து ஒரு நிறைவான கச்சேரியை அளித்த இளைஞர் பட்டாளத்திற்கு ஓராயிரம் சபாஷ்!! ஒளிமயமான எதிர்காலம் தொட்டுவிடும் தூரத்தில்!!
பாட்டு – ரஞ்சனி
வயலின் - பப்பு க்யான் தேவ்
மிருதங்கம் - புர்ரா ஸ்ரீராம்
கடம் - கிருஷ்ணா
இடம் - ஆர்கே கன்வென்ஷன் ஹால்
முக்கிய செய்திகள்
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
4 years ago
கலை
4 years ago
கலை
5 years ago
கலை
5 years ago