லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு

By ராஜேஸ்வரி ஐயர்

இசைப் பின்புலம் ஏதுமின்றி மெல்லிசைக் குழுவை அமைத்து, புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது லஷ்மன் ஸ்ருதி. கர்நாடக இசையையும் நாட்டியத்தையும் போற்றும் வகையில் 'சென்னையில் திருவையாறு' என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளையும் இக்குழு நடத்துகிறது. சென்னை அசோக் நகரில் இசைக் கருவிகள் விற்கும் ஷோ ரூமையும் நடத்திவருகிறார்கள். வெற்றிகரமாக இயங்கிவரும் இந்தக் கடை அந்த இடத்துக்கே அடையாளமாக விளங்குகிறது. இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் இரட்டையர்களான ராமனும் லஷ்மணனும். வெற்றிகரமான இந்தப் பயணத்தின் அனுபவங்களை ராமன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தத் துறைக்கு எப்பொழுது வந்தீர்கள்?

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, எல்லோரையும் போல நானும் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தேன். கலை நிகழ்ச்சியில் என் கூடவே அரட்டை அடிச்சு சிரிச்சு பொழுது போக்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், கைத்தட்டலும் பரிசும் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். ஒருத்தன் கிடார் வாசிக் கிறான், ஒருத்தன் புல்லாங்குழல் வாசிக்கிறான், வேறொருத்தன் பாட்டு பாடுகிறான். இதைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. நாமும் ஏதேனும் பரிசு வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பாட்டு கற்றுக்கொண்டால் கெட்டுவிடுவான் என்று என்னை எங்கப்பா அனுமதிக்கவில்லை. டான்ஸ் கற்றுக்கொண்டதால் கல்லூரிகளுக்கு இடையேயான டான்ஸ் போட்டியில் எனக்கு முதல் பரிசு. நான் கற்றுக்கொண்ட பிரேக் டான்ஸுக்காக அல்ல. கமல்ஹாசன் சலங்கை ஒலியில் ஆடிய பரத நாட்டியத்தைப் போல் ஆடியதால். பிரேக் டான்ஸ்களுக்கு நடுவில் வித்தியாசமாக பரதம் ஆடியதால் பரிசு கிடைத்தது. வித்தியாசமான சிந்தனையே வெற்றியடைய வைக்கும் என்பதை உணர்த்திய தருணம் அது.

நீங்கள் இருவருமே பரதம் கற்றீர்களா?

ஆரம்பத்தில் இருவருமே பரதம் கற்றோம். பின்னர் லஷ்மண் சினிமா சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், நடிகர்களுக்கு டூப் போடவும் சென்றுவிட்டார். இதற்கு நடுவில் மிமிக்ரியில் பிரபலமடைந் திருந்தோம். பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது நண்பர்களுடன் சேர்ந்து இசைக் குழுவை அமைத்தோம்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளர் லஷ்மன். நேரமின்மை காரணமாக, எங்கள் குழு உறுப்பினர்களே பிரிந்து பல குழுக்களானோம். ஸ்ருதி இன்னிசை மழை என்ற எங்கள் குழுவின் பெயரே என் தம்பி லஷ்மணன் பெயரையும் இணைத்துக் கொண்டு லஷ்மன் ஸ்ருதியானது.

இதன் பயணத்தில் திருப்புமுனை?

உங்க குழுவைவிட மற்ற குழுக்களில் பாடல் இசை துல்லியமாக இருக்கிறது என்று ஒரு ரசிகர் சொன்னர். பிற குழுக்கள் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தோம். அவர்கள் டிராக் போடுகிறார்கள் என்று கண்டுபிடித்தோம்.

இதற்கு வீட்டிலேயே டேப் போட்டுக் கேட்டுவிட்டுப் போகலாமே, இசைக் கச்சேரிக்கு எதற்கு வர வேண்டும்? சின்னச் சின்ன தவறுகளும், சிறப்புகளுமே இசைக் கச்சேரிகளுக்கு உயிர் கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம். உடனே எங்கள் கச்சேரி விளம்பரங்களில் ‘100% மேனுவல்’ என்று போடத் தொடங்கிவிட்டோம். ரசிகர் சொன்ன குறையையே எங்கள் வலுவாக மாற்றிக்கொண்டோம்.

லஷ்மன் ஸ்ருதியின் தனித்தன்மை என்ன?

தீம்தான். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ், காதல் தோல்விப் பாடல்கள் முதலானவை எங்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

மறக்க முடியாத நிகழ்ச்சி?

கின்னஸ் சாதனைக்காக 36 மணிநேர நிகழ்ச்சியில் 308 பாடல்கள் என்று முயற்சியில் இறங்கினோம். 36 மணிநேரம் டிரம்ஸ் வாசித்த நரசிம்மன் கடைசி அரை மணி நேரத்தில தூக்கத்தில் சொக்கி சொக்கி விழுகிறார். வேறு கை மாத்தி வாசிக்கவும் ஆளில்லை. இந்நிகழ்ச்சி நடந்தது என்று சொல்ல, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் வந்திருந்தனர். டிரம்மரை உற்சாகப் படுத்தி கின்னஸ் சாதனை புரிந்தோம்.

இசைக் கருவிகள் விற்பனை செய்யும் எண்ணம் எப்படி வந்தது?

இப்போது பிஸியாக இருக்கோம். இன்னும் பத்து பதினைந்து வருடம் கழித்தும் இப்படியே இருப்போமா என்று தெரியாது. நிரந்தரமாக உட்கார ஓரு இடம் வேண்டும் என்று யோசித்தபோது தோன்றிய ஐடியா இது. ஆர்கெஸ்ட்ரா வைத்து இருந்தோமே தவிர, இந்த வியாபாரம் அப்போது எங்களுக்குப் புதிது. இருந்தாலும், இசைக் கருவிகள் விற்குமா விற்காதா என்றே தெரியாத நிலையில் சைனா போய் இசைக்கருவிகளை வர வழைத்து விற்பனைக்கு வைத்தோம். இந்த பத்து வருஷத்துல டர்ன் ஓவர் ஏழு கோடியை எட்டியிருக்கோம். சிறிய அளவுல மியூசிக் ஸ்கூல்கூட இருக்கு. எல்லா விதமான வசதியுடன் ரிகர்சல் ஹாலும் இருக்கு.

சில சமயம் ஒரே வாரத்துல நாற்பது பேர் கச்சேரிக்கு டேட் கேட்பாங்க. எல்லோருக்கும் டேட் கொடுக்க முடியாது. ஆனால் கடை வெச்சா கிடார் கொடுங்கன்னு நூறு பேர் கேட்டாலும் கொடுக்க முடியும்.

மெல்லிசையில் புகழ்பெற்ற நீங்கள் கர்நாடக இசை தொடர்பான சென்னையில் திருவையாறுவை நடத்த ஆரம்பித்தது எப்படி?

இது ஒரு இனிய விபத்துதான். ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் அமெரிக்க மியூசிக் டூர் போவோம். அப்ப அங்கு நிகழ்ச்சிகளை பிரமாதமாக ஏற்பாடு செய்வாங்க ஒரு மியூசிக் டீச்சர். இங்க வந்தபொழுது ஒவ்வொரு சபாவா போன்ல கூப்பிட்டு வாய்ப்பு கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அப்புறம் மூன்று நாள் கச்சேரி பண்ண எவ்வளவு செலவாகும்னு என்னைக் கேட்டாங்க. நாமளே இதை பண்ணினா என்ன என்று முடிவு பண்ணி ஒரு ஸ்லாட் அவங்களுக்கு ஓதுக்கி மியூசிக் ஃபெஸ்ட் தொடங்கினோம். எங்களுக்கு பெரிய லெவல்ல பண்ணியே பழக்கம். அதுனால் மத்த ஸ்லாட்டுக்கெல்லாம் பெரிய வித்வான்கள்கிட்ட போய் கேட்டோம். உடனே எல்லா ஸ்லாட்டும் புக் ஆகிவிட்டது. இது நாங்களே எதிர்பாராத ஓன்று. கர்நாடக இசைக் கலைஞர்களின் ஆதரவுடன் இது மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

2 years ago

கலை

3 years ago

கலை

3 years ago

கலை

3 years ago

கலை

4 years ago

கலை

4 years ago

கலை

5 years ago

கலை

5 years ago

மேலும்