இ
ந்த ஆண்டு பட்ஜெட் தொடரின்போது பொருளாதார ஆய்வறிக்கை முழுமையாக அளிக்கப்படவில்லை. முதல் பகுதி மட்டுமே தரப்பட்டது. ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஆய்வறிக்கையின் இரண்டாவது பகுதி வெளியாகியிருக்கிறது. 2016-17 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1%. கச்சா எண்ணெய் விலையும் பணவீக்க விகிதமும் மிதமாக இருந்தன; பருவமழை அதிகமாகப் பெய்தது, அந்நிய நேரடி முதலீடு சாதனை அளவாக இருந்தது, ரூபாயின் மாற்று மதிப்பு நிலையாக இருந்தது, அரசின் வரவு – செலவுகளில் பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தது.
இத்தனை சாதகமான அம்சங்களின் பின்னணியில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதமாவது அதிகமாகியிருக்க வேண்டும். அதிகமாகாததற்கு பணமதிப்பு நீக்கம் முக்கிய காரணம். நிதியாண்டின் இரண்டாவது பாதியில் வளர்ச்சி வீதம் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் 1.2% குறைந்துவிட்டது.
பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னதாகவே வளர்ச்சி வீதம் தொய்வடைந்தது என்கிறது ஆய்வறிக்கை. அடுத்த ஆண்டு 7%-க்கும் கீழே இருக்கும் என்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பொருளாதார வளர்ச்சி 1% வீதம், 3 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்திருப்பதால் மொத்தமாக ரூ.5 லட்சம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் மாத தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண் பூஜ்யமாகக்கூட இல்லை. அதைவிடக் குறைவாக இருக்கிறது. பொதுச் சரக்கு - சேவை வரி அமலுக்கு வருவதால் ஜூலை 1-க்கு முன்னால் எல்லா நிறுவனங்களும் கிடங்கு கையிருப்புகளை பூஜ்யமாக்கின. 23 தொழில்பிரிவுகளில் 15 இப்படி எதிர்மறை உற்பத்தி யைக் காட்டுகின்றன. தொழில் நிறுவனங்களின் விற்பனை, லாபம் குறைந்திருப்பதால் அதன் பற்றுவரவில் காணப்படும் இழப்பு, வங்கிகளுக்கு நிறுவனங்கள் தர வேண்டிய கடன் தவணை வராததால் அதன் பற்றுவரவில் அதிகரிக்கும் வாராக்கடன் அளவு என்ற இரட்டை பற்று-வரவு பிரச்சினைதான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் மதிப்பில் 10% வாராக்கடனாக இருக்கின்றன. பெரும்பாலான அரசுத் துறை வங்கிகளின் மூலதன அளவைவிட இது அதிகமாக இருக்கிறது. எனவே, நுட்பமாகப் பார்த்தால் வங்கிகளின் நிகர மதிப்பும் எதிர்மறையாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் பெரிய தொழில் நிறுவனங்களும் பற்று-வரவில் பற்றாக்குறையால், குறிப்பாக அதிக வட்டிக்குக் கடந்த காலத்தில் கடன் வாங்கியதால் நிதிச் சுமையால் அழுத்தப்படுகின்றன.
சாதகமும் பாதகமும்
இப்போது ரூபாய் நோட்டின் மாற்று மதிப்பு நிலையாகவும் வலுவாகவும் இருக்கிறது. இது இறக்குமதியாளர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. புதிய பொதுச் சரக்கு-சேவை வரி நிர்வாகத்தில், இறக்குமதியாளர்கள் தங்களுடைய பொருள் மீது செலுத்தும் ‘ஈடுசெய் வரி’ மதிப்புக்கு இணையான தொகையைத் தாங்கள் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம் என்ற சலுகை அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. எனவே, உள்நாட்டுப் பொருள் உற்பத்தியை விற்பதில் போட்டி நிலவுகிறது. ரூபாயின் செலாவணி மதிப்பு அதிகரிப்பதுகூட ஒரு வகையில் உள்நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பாதகமாகவே இருக்கிறது!
தொழில்துறை வளர்ச்சியில் இப்போது காணப்படும் பிரச்சினை அடித்தளக் கட்டமைப்பு தொடர்பானதா அல்லது தொழில் பருவ சுழற்சியால் வருவதா? பருவச் சுழற்சி என்றால் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அடித்தளக் கட்டமைப் புப் பிரச்சினைகளும் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. முதலீட்டுக்கும், உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்துவருகிறது.
தனியார் துறையில் முதலீடு மிகமிகக் குறைவு. 2016 செப்டம்பர் முதலே தொழில்துறைக்கு வங்கிகள் கடன் தருவது பூஜ்யமாகி, பிறகு எதிர்மறையாகிவிட்டது. இதை எப்படிச் சீராக்குவது? தலா ரூ.10,000 கோடி மதிப்பிலான கடன்கள், 24 தொழில் நிறுவனங்களுக்காவது தரப்பட்டால்தான் தொழில்துறைக்கு நம்பிக்கை ஏற்படும்.
பங்குச் சந்தைகளில் விற்பனைக் குறியீடு புதிய சாதனை உயரங்களை எட்டினாலும் அது தொழில் நிறுவனங்களிலோ இயந்திரங்களிலோ முதலீடாக எதிரொலிக்கவில்லை. டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரங்கள், அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் போன்ற திட்டங்கள் மிகப் பெரியவை. மத்திய அரசு இவற்றில் செய்யும் பெரு முதலீடுகள்தான் பொருளாதாரத்தை முடுக்கிவிட வேண்டும்.
நம்பிக்கைக் கீற்று
ஆய்வறிக்கை சுட்டிக்காட்டும் மூன்றாவது களம் நிதித் துறையாகும். இதில் வங்கித் துறையும் அடக்கம். தொழில்வளர்ச்சி தூண்டப்படாமல் இருப்பதற்கு வங்கிகளின் வட்டிவீதம் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்று கூறும் அறிக்கை, ரிசர்வ் வங்கியை மறைமுகமாகச் சாடுகிறது. பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் பணக் கொள்கையின் இலக்காக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகள் ஆறு காலாண்டுகளில் சரியாக இருக்கவில்லை. ரிசர்வ் வங்கி வட்டி யைக் குறைக்கத் தயங்கும் கட்டுப்பெட்டியாகவே இருக்கிறது.
இதைத்தான் அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் பலமுறை சுட்டிக்காட்டினார். அதையே அறிக்கையும் கூறுகிறது. ஆனால், இதன் மீது விவாதத்துக்கு முடிவே இல்லை. விலைவாசி அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாகக் கணித்துவருகிறது. வட்டி வீதத்தைக் குறைத்துவிட்டால் முதலீடு பெருகிவிடும் என்றும் சொல்ல முடியாது. வங்கிகளின் வாராக்கடன்கள்தான் பிரச்சினைகளுக்குக் காரணம். இதைக் குறைக்க ரிசர்வ் வங்கி கூறிய யோசனைகளிலும் குறைகள் இருப்பதால், இறுதி முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறது.
இந்த ஆய்வை நம்பிக்கை தரும் தகவல்களுடன் முடிக்க வேண்டும். இப்போது மத்திய அரசின் நிதி நிலைமை மேம்பட்டு வருகிறது. ஏற்றுமதி ஆக்கபூர்வமான வளர்ச்சியை நோக்கித் திரும்பியிருக்கிறது. நீண்ட கால வளர்ச்சிக்கான காரணிகள் அதனதன் இடங்களில் செயல்படத் தொடங்கியுள்ளன. பொதுச் சரக்கு சேவை வரி, புதிய திவால் சட்ட உதவியுடன் வாராக்கடன்களை வசூலிப்பதற்கான உத்தி, புதிய பணக்கொள்கைக்கான கட்டமைப்பு, அரசின் சேவை களுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்ற நான்கு சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கு உதவிசெய்யும்.
மொத்த உற்பத்தி மதிப்பு உடனடியாக 7% என்ற அளவைத் தாண்டாது என்றாலும், பிறகு 8% என்ற அளவில் தொடரக்கூடும். ஆய்வறிக்கையின் இறுதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் காணப்படுகின்றன.
அஜீத் ரானடே, பொருளியல் நிபுணர்
தமிழில்: சாரி, ©: ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago