முகம் நூறு: பெண்ணுரிமைக்கு எதிரானது தலாக்

By பிருந்தா சீனிவாசன்

பெரும்பாலான முஸ்லிம்கள் கடைப்பிடித்துவரும் முத்தலாக் விவாகரத்து நடைமுறை, இனி சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு வெளியான வேளையில் ஷரிஃபா கானத்துடனான சந்திப்பு, கூடுதல் அர்த்தம் பெறுகிறது. ‘தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்’, இவரது செயல்பாடுகளின் மைல்கல். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெண்கள் இந்த ஜமாத்துடன் தொடர்பில் இருப்பதாகச் சொல்கிறார் ஷரிஃபா. பெண்களுக்காகத் தனி மசூதி கட்டும் பணியில் முனைப்புடன் இருந்தவர், உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன் பணிகளில் இருந்து சற்றே விலகியிருக்கிறார்.

சென்னை அடையாறில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றபோது, “உச்ச நீதிமன்றம் இதையே இறுதித் தீர்ப்பா சொல்லியிருக்கலாம். அதை நாடாளுமன்ற விவாதத்துக்கு விட்டிருக்க வேண்டாம்” என்று யாரிடமோ கைபேசியில் பேசியபடியே நம்மை எதிர்கொண்டார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால செயல்பாட்டின் முதிர்ச்சி அவரது பேச்சில் பிரதிபலிக்கிறது.

அம்மாவின் துணிச்சல்

குளித்தலையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஷரிஃபா கானம். தன் அம்மாவுக்கு 47 வயதானபோது பிறந்த பத்தாவது குழந்தை இவர். பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த தன் அம்மாவின் துணிச்சலும் திடமும் தன்னை எப்போதும் வழிநடத்துபவை என்கிறார் ஷரிஃபா.

“என் அப்பாவைப் பத்தின நினைவு எனக்கு அவ்வளவா இல்லை. வாழ்க்கை முழுக்க என் அம்மாதான் நிறைஞ்சிருந்தாங்க. நான் பிளஸ் டூ முடிச்சதுமே டெல்லி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துல மூணு வருஷ டிப்ளோமோ படிப்பில் சேர்ந்தேன். அப்போ அம்மா எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாங்க. ஒரு முறை அப்படி அனுப்பிய கடிதத்தில் பொதுவான நல விசாரிப்புகளுக்கு நடுவே ஒரு தேதியைக் குறிப்பிட்டு, ‘அன்று உன் தந்தை இறந்துவிட்டார்’னு ஒரு வரியை எழுதியிருந்தாங்க. அம்மாவால எப்படி இவ்வளவு உறுதியாவும் திடமாவும் இருக்க முடிஞ்சதுன்னு தோணும். எவ்வளவு பெரிய பிரச்சினையையும் அவங்க எந்த அலட்டலும் இல்லாம ரொம்ப இயல்பாதான் கடந்துவந்திருக்காங்க” என்று அம்மாவின் நினைவுகளில் மூழ்கினார் ஷரிஃபா.

 

1988-ல் பாட்னாவில் நடந்த பெண்கள் மாநாட்டுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் சென்றார் ஷரிஃபா. அந்தப் பயணம், தன் வாழ்க்கைப் பாதையை மாற்றும் என்று அவர் நினைத்திருக்கவில்லை. அந்த மாநாட்டின் சென்னை ஒருங்கிணைப்பாளராக இருந்த ரீட்டா அம்மாவையும் அவரது குழுவினரது செயல்பாடுகளையும் பார்த்தபோது ஷரிஃபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்தக் குழுவினர் கொல்கத்தா சென்று, அங்கிருந்து வேறு ரயில் மாற வேண்டும். ரயில் புறப்படுகிற நேரத்தில்தான் இவர்களுக்கான தனிப்பெட்டி இணைக்கப்படவில்லை என்று தெரியவந்தது. ஷரிஃபாவை அழைத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் இந்தியில் பேசச் சொன்னார்கள். உள்ளுக்குள் நடுங்கியபடியே அவர்கள் சொன்னதை இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார் ஷரிஃபா. ரயில் பெட்டி இல்லையென்றால் எப்படி பாட்னா செல்வது, எப்படி ஊருக்குத் திரும்புவது என்ற நடுக்கத்துடனேயே இருந்தார் ஷரிஃபா. ஆனால், பல்வேறு மகளிர் இயக்கங்களைச் சேர்ந்த தமிழகப் பெண்களோ அஞ்சாமல் கேள்விகளைக் கேட்டார்கள். ரயில் புறப்படுகிறபோது அவர்களில் பாதிப் பேர் தண்டவாளத்தில் குதித்துவிட்டார்கள். ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத், வீ ஷேல் ஓவர்கம்’ என்பது போன்ற முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிறகு தனிப்பெட்டி இருந்த இடத்துக்கே ரயில் சென்று, பெட்டி இணைக்கப்பட்டு பாட்னாவுக்குச் சென்றார்கள். இதையெல்லாம் பார்த்த ஷரிஃபா மிரண்டு போனார். வீடும் சமையலறையும் மட்டுமே பெண்களின் உலகம் அல்ல என்று அவருக்குப் புரிந்தது.

மாநாட்டு உரைகள் ஷரிஃபாவின் பார்வையை விசாலப்படுத்தின. எவையெல்லாம் குடும்ப வாழ்வின் அங்கம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தாரோ, அவையெல்லாம் வன்முறை என்பதை அந்த மாநாடு உணர்த்தியது. ஊர் திரும்பியவுடன் வெவ்வேறு பெண்கள் இயக்கங்களின் அறிமுகம் ஷரிஃபாவுக்குக் கிடைத்தது. நிறையப் படித்தார்.

“சுட்டும் விழிச் சுடர் இதழில் கற்பு குறித்து சுபத்ரா எழுதியதும், ‘புதிய குரல்’ இதழில் ஓவியா எழுதியதும் என்னைச் செழுமைப்படுத்தின. தொடந்து வ.கீதா, லூசி சேவியர் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது” என்று சொல்லும் ஷரிஃபாவின் பயணம் அதன் பிறகு பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டங்கள், கிராமப்புறப் பெண்களுக்கான விழிப்புணர்வு என நீண்டது.

அவர்கள் ஏன் வெல்ல வேண்டும்?

இலுப்பூரில் பள்ளி மாணவிகள் மத்தியில் இவர் பேசியபோது எட்டாம் வகுப்பு மாணவி ஒரு கேள்வி கேட்டார்: “எங்கள் பள்ளியில் இத்தனை மாணவிகள் படிக்கிறோம். அவர்களுக்கு மாதம் ஒரு முறை மாதவிடாய் ஏற்படும் என்று ஒரு அதிகாரிக்குக் கூடவா தெரியாது? அதற்குக் கழிப்பறையும் தண்ணீர் வசதியும் அவசியம் என்பதுகூடவா புரியாது?” என்ற அந்தக் கேள்வி ஷரிஃபாவின் பொட்டில் அறைந்தது போல் இருந்தது. பள்ளிகளில் கழிப்பறை வேண்டும், பெண்கள் தங்குவதற்கு விடுதிகள் வேண்டும் ஆகிய கோரிக்கைகளோடு ஷரிஃபா குழுவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தார்கள். நண்பர்கள் குழுவாக இல்லாமல் ஒரு அமைப்பாக இருந்தால்தான் உதவ முடியும் என்று ஆட்சியர் சொல்ல, அப்படி உருவானதுதான் இவர்களுடைய ‘ஸ்டெப்ஸ்’ அமைப்பு.

“எங்கள் அமைப்பு மூலம் பத்தாயிரம் பெண்களுக்கு அவர்கள் பெயரிலேயே பட்டா வாங்கித் தந்திருக்கிறோம். நூறு கிராமங்கள்வரை அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்திருக்கிறோம். 500 பெண்கள் சுயதொழில் செய்ய உதவியிருக்கிறோம்” என்று சொல்லும் ஷரிஃபா, தன் செயல்பாடுகளுக்காகப் பல்வேறுவிதமான நெருக்கடிகளையும் அவதூறுகளையும் சந்தித்ததாகச் சொல்கிறார்.

“ஒரு பெண்ணைச் செயல்படாமல் முடக்கிப்போட வேண்டும் என்றால், அவள் மீது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வீசினால் போதும் என்பது பலரது நினைப்பு. அதுபோன்ற குற்றச்சாட்டுகளாலும் அச்சுறுத்தல்களாலும் நான் ஒடுங்கிப்போனால், அவர்கள் வென்றதுபோல ஆகிவிடுமே” என்று புன்னகைக்கும் ஷரிஃபா, எந்த மிரட்டலுக்கும் அஞ்சியதில்லை. தன் பணிகளுக்காக மத்திய அரசின் சமூக நலத் துறை வழங்கும் துர்காபாய் தேஷ்முக் தேசிய விருதை முதன்முதலாக இவர் பெற்றிருக்கிறார்.

புரியாத பெண் உணர்வு

 

சர்வதேச ஆய்வுக்காகச் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டில் முஸ்லிம் பெண்களின் நிலைமை குறித்துக் களப்பணி மேற்கொண்டபோது, முஸ்லிம் பெண்களின் இருள் சூழ்ந்த மறுபக்கம் இவர் முன் நீண்டது.

“ஐந்தில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறார் அல்லது தலாக் சொல்லப்பட்டு விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார் அல்லது இரண்டாம் தாரமாக மணம்முடிக்கப்பட்டிருக்கிறார் அல்லது கணவனை இழந்தவராக இருக்கிறார் அல்லது புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அந்த ஆய்வு எனக்கு உணர்த்தியது. அரபி தெரிந்த ஒருவர் மூலம் குரானை மொழிபெயர்த்துச் சொல்லச் சொன்னபோது, குரானின் எந்த இடத்திலும் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் இல்லை என்பதும் புரிந்தது. மதவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஜமாத்துகளை வைத்துக்கொண்டு பெண்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்திக்கொண்டிருப்பது விளங்கியது” என்று சொல்லும் ஷரிஃபா, அதன் பிறகு முஸ்லிம் பெண்களுக்கான செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.

“குடும்பப் பிரச்சினைகள் ஜமாத்தில்தான் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அங்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு பெண்ணின் உடை, உணவு குறித்து அவளுடைய தகப்பனோ சகோதரனோ ஓரளவு பேச முடியும் ஆனால், அவளுடைய உணர்வைப் பற்றி அவள்தானே பேசவேண்டும்? ஜமாத்துக்குள் நுழைய முடியாதபோது பெண்கள் எப்படித் தங்கள் உணர்வுகளைச் சொல்வது?” என்று கேட்கும் ஷரிஃபா, அதன் பிறகு முஸ்லிம் பெண்களுக்கான மாநில மாநாட்டை நடத்தினார். தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்தைத் தொடங்கினார்.

தலாக் தவறு

“முஸ்லிம் பெண்களுக்கான மாநாட்டை நடத்தியதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பு. ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒவ்வொரு மாநாட்டிலும் கலந்துகொள்வார். எதுவும் பேசாமல் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார். மூன்றாவது மாநாட்டில் ‘அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்’ என்று பாடியபடியே அவர் ஆடினார். ‘என்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான்’ என்று தன்மானத்தை அழுத்தி உச்சரித்தபோது, அவரது முகத்தில் பிரதிபலித்த உறுதி என்னை அசைத்துவிட்டது. இவர்களைப் போன்றவர்களுக்காகவாவது என் முடிவில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று நினைத்தேன். பெண்களுக்கான தனி மசூதி கட்டும் வேலையைத் தொடங்கினேன். முக்கால்வாசிப் பணிகள் முடிந்துவிட்டன. உடல்நிலை தேறியதும் விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டியதுதான்” என்று சொல்லும் ஷரிஃபா, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இமெயில் மூலம் தலாக் சொல்வது பெண்ணுரிமைக்கு எதிரானது என்று கண்டிக்கிறார்.

“அடுத்தடுத்து மூன்று முறை தலாக் சொல்வதே தவறானது. இதில் பலர் நினைத்த நேரத்தில் தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? எத்தனையோ ஆண்டுகளின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் சிறு வெளிச்சம்தான் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. நாடாளுமன்றத்தில் பாஜகவினர் இதை ஆதரித்தாலும் அதற்கு மதச்சாயம் பூசி, தலாக்கை ஆதரிக்கிறவர்களும் இருப்பார்கள் என்பது பின்னடைவுதான். தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற பெண்களை ஜமாத்தை விட்டு விலக்கிவைப்பவர்கள், குரானில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாறாக வரதட்சிணை வாங்குகிற ஆண்களை விலக்கிவைப்பார்களா? செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால் ஜமாத்தில் ஒருவரும் இருக்க முடியாது. தலாக்கை விலக்க வேண்டும், பலதார மணத்தை ஒழிக்க வேண்டும், முஸ்லிம் பெண்களுக்குத் தனி வாரியம் வேண்டும். எங்களின் இந்த மூன்று கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும்” – ஷரிஃபா கானத்தின் குரலில் சற்றே சோர்வு இருந்தாலும் சொற்களில் வெளிப்படும் உறுதி நம்பிக்கை தருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்