பாட்டு பாடும் இன்னொரு நமீதா!

டித்துக்கொண்டிருக்கும்போதே தான் விரும்பும் துறையில் புகழ் பெறுவது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். கல்லூரி மாணவியான பாடகி நமீதா பாபுக்கும் அது வாய்த்திருக்கிறது. பள்ளி இறுதியில் ‘அலுங்குற குலுங்குற’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் காலடி பதித்த நமீதா பாபு, கல்லூரி முடியும் தருவாயில் முன்னேறும் பாடகியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்!

சித்ரா, மின்மினி, சுவர்ண லதா, வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் வரிசையில் கேரளத்திலிருந்து தமிழ் இசையுலகில் காலடி வைத்திருப்பவர் நமீதா. ‘சூப்பர் சிங்கர்ஸ்’ ஷோ மூலம் கவனம் பெற்று, சினிமா வாய்ப்பு பெற்றவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘சண்டி வீரன்’ படத்தில் அருணகிரி இசையில் ‘அலுங்குற குலுங்குற’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் ஹிட் அடிக்கவே, நமீதாவுக்குப் புகழ் வெளிச்சம் கிடைத்தது. பள்ளியில் பிளஸ் டூ படிக்கும்போதே எப்படி சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டால், “அது பெரிய கதை” என்கிறார் அவர்.

சினிமா வாய்ப்பு

“எனக்கு சொந்த ஊரு திருவனந்தபுரம். ஆனா, சென்னையில குடியேறி 10 வருஷம் ஆச்சு. சின்ன வயசிலேயே பாட ஆரம்பிச்சுட்டேன். என்னோட பாட்டு ஆர்வத்தைப் பார்த்து வீட்டுல கர்னாடக இசையைக் கத்துக்க அனுப்புனாங்க. அப்புறம் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசையையும் கத்துக்கத் தொடங்கினேன். விஜய் டி.வி. சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ல கலந்துக்கத் திட்டமிட்டப்ப, எனக்கு 15 வயசு முடிஞ்சிடுச்சு. அதனால, சீனியர் சூப்பர் சிங்கர் 4ல ஜூனியர் பெண்ணா நான் கலந்துக்கிடேன். அப்போ நான் பத்தாவதுதான் முடிச்சிருந்தேன். அந்த சீசன்ல டாப் 20 வரைதான் முன்னேறினேன். ஆனால், என்னோட குரல் பலருக்கும் பிடிச்சிருந்தது. அது எனக்குக் கிடைச்ச வரம்ணு நினைக்கிறேன்.

அப்படித்தான் என்னோட குரல் பிடிச்சு போய் இசையமைப்பாளர் அருணகிரியிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்துச்சு. ‘சண்டி வீரன்’ படத்துல ட்ராக் பாடத்தான் கூப்பிட்டிருந்தாங்க. ஆனால், கடைசியிலத்தான் ‘அலுங்குற குலுங்கற’ பாடலை நான் பாடப்போறேன்னே தெரிஞ்சுது. முதல்ல அந்தப் பாடலை வேறு ஒரு பாடகியை வைச்சுதான் ஒலிப்பதிவு செஞ்சாங்க. அதில் திருப்தி வராமல் போகவே எனக்கு அந்த வாய்ப்பு வந்துச்சு” என்று தன் இசைப் பயணத்தைச் சொல்கிறார் நமீதா.

இதுவரை ‘திருநாள்’, ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ படங்கள் உள்பட பல்வேறு படங்களில் 25 பாடல்கள்வரை பாடியிருக்கிறார் நமீதா. திரைக்கு வரத் தயாராக உள்ள ‘மகளிர் மட்டும்’ படத்திலும் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். இசை நிகழ்ச்சிகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்கும் பறக்கிறார். படிப்புக்குப் பங்கம் வராமல் படிப்பையும் தொடர்கிறார்.

படிப்பு முக்கியம்

“பாடத் தொடங்கியதிலிருந்தே படிப்புக்குப் பாதிப்பு வராத வகையில்தான் பாடப் போவேன். நான் இசைத் துறையில் இருந்தாலும் படிப்பு எனக்கு ரொம்ப முக்கியம். ஸ்டெல்லா மேரி கல்லூரியில இப்போ பி.காம் படிச்சுட்டு இருக்கேன். அடுத்து நிச்சயம் எம்.பி.ஏ. படிப்பேன். என்னைப் பொறுத்தவரை இசைத் துறைதான் என்னோட விருப்பமா இருந்தாலும் படிப்புக்கும் அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திட்டு வரேன். இன்னைக்கு இசைத் துறையில போட்டி அதிகமா இருக்கு. நிறையப் பேரு சினிமாவுல பாடுறாங்க. அதனால், முந்தைய தலைமுறைப் பாடகிகளுக்கு கிடைச்சதுபோல வாய்ப்பு கிடைக்கும்னு இப்போ சொல்ல முடியாது. சினிமாவுல பாடுறதோடு இல்லாமல் படிப்பையும் கையில் வைச்சுக்கிட்டா நல்லது. இருந்தாலும் சினிமாவுல பாடல்கள் நிறைய பாடணும்னு எனக்கு ஆசை இருக்கு” என்கிறார் நமீதா.

சினிமா தவிர இசை ஆல்பம் செய்வதிலும் ஆர்வம் இருப்பதாகக் கூறும் நமீதா, “புதிதாகப் பாட வருவோருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், அதற்காக ஏங்கத் தேவையில்லை. பாடல்களைப் பாடி யூடியூப் மூலம் பதிவேற்றி இசையமைப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம்” என்று யோசனையும் சொல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்