கலைச்சொற்களை மொழிபெயர்ப்பது / அப்படியே பயன்படுத்துவது குறித்துப் பல விதமான பார்வைகள் உள்ளன. எல்லாவற்றையும் தமிழில் சொல்ல இயலும், இயல்வதாக வேண்டும் என்று சிலர் கருத, கார், ட்விட்டர் போன்ற சொற்களைத் தமிழில் சேர்த்துக்கொண்டு தமிழை வளப்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஒரு முறை மொழியியல் அறிஞர் பா.ரா. சுப்பிரமணியனிடம் இதுபற்றிக் கேட்டபோது, தமிழ் போன்ற வாழும் மொழியில் இதுபோன்ற மாறுபட்ட அணுகுமுறைகள் இருப்பதுதான் இயல்பு என்றார். புதிதாக வரும் எதையுமே நம் மொழிக்கு மாற்றக் கூடாது என்றால், திரைப்படம், கணிப்பொறி, மின்சுற்று, மின்னஞ்சல், செயல்முறை அயலாக்கம் (outsource) என எந்தச் சொல்லும் தமிழில் உருவாகியிருக்காது. எனவே புதிய சொல்லாக்கங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படத்தான் வேண்டும். அதே சமயம் வர்த்தகப் பெயர்களை (Brand Names) மொழிபெயர்ப்பது தவறு என்னும் வாதத்திலும் நியாயம் இருக்கிறது. ஹோண்டா சிட்டி, யமஹா போன்றவற்றை நாம் மொழிபெயர்க்க முனைவதில்லை.
இந்தத் தர்க்கம் ஃபேஸ்புக் போன்ற சொற்களுக்கும் பொருந்தும். ஆனால் ஃபேஸ்புக் நமது வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டதால், அவரவரும் அதைத் தத்தமது விருப்பம்போலப் பயன்படுத்திக்கொள்ளும் ஆவல் எழுவது இயற்கைதான். முக நூல், வதனப் புத்தகம் ஆகிய சொல்லாக்கங்கள் புழக்கத்தில் இருப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் கால ஓட்டத்தில் ஏதேனும் ஒரு சொல்லாக நிலை பெறலாம். அல்லது சினிமா - திரைப்படம், பஸ் - பேருந்து போன்று ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களாகவும் புழக்கத்தில் இருக்கலாம்.
கலைச்சொற்களை மொழிபெயர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகள் குறித்து மொழிபெயர்ப்பாளர் மு. சிவலிங்கம் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார். மூல மொழியில் உள்ள சொல் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார். "தன்மை, தோற்றம், பயன்பாடு, கண்டுபிடித்தவரின் பெயர் முதலான சில காரணிகள் இருக்கலாம். இதைக் கணக்கில் கொண்டு தமிழில் சொல்லை உருவாக்கலாம்" என்றார்.
உதாரணமாக, ரோம் (ROM) ராம் (Ram) ஆகியவை அவற்றின் தன்மை சார்ந்து பெயரிடப்பட்டிருக்கின்றன. அதே தன்மையை மையமாக வைத்து நிலையா நினைவகம் (ரோம்-) அழியா நினைவகம் (ராம்) என்று மொழிபெயர்த்தாகக் குறிப்பிட்டார்.
கலைச்சொல்லாக்கம் குறித்த முடிவை எட்ட அவசரப்பட வேண்டியதில்லை. பல்வேறு சலனங்களுக்குப் பிறகு ஏதேனும் ஒரு சொல் நிலை பெறும். அதுவே உயிருள்ள ஒரு மொழியின் இயல்பான செயல்பாடு.
அரவிந்தன் - தொடர்புக்கு: aravindanmail@gmail.com
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago