எல்லை தாண்டிய பயங்கரவாத்தை நிறுத்த நவாஸிடம் மன்மோகன் வலியுறுத்தல்
சில நாள்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், போலீஸார் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். எனவே, நவாஸுடனான சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக கேட்டுக் கொண்டது. இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கை "கிராமத்துப் பெண்" என்று வர்ணித்து நவாஸ் இழிவுபடுத்தியதாக தகவல்கள் பரவியதால் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி இருநாட்டு தலைவர்களும் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக மன்மோகனைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக் காட்டிய மன்மோகன் சிங், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மண்ணில் அனுமதிக்கக் கூடாது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காஷ்மீர் விவகாரம்...
பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நவாஸ், ஐநா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை திட்டவட்டமாக மறுத்த மன்மோகன் சிங், ஐநா. தீர்மானம் இன்றைய சூழலுக்குப் பொருந்தாது, சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா விரும்புகிறது என்று தெளிவுபடுத்தினார்.
மன்மோகனுக்கு அழைப்பு...
இருதரப்பு உறவில் பதற்றத்தை தணிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக ஆலோசித்தனர். பேச்சுவார்த்தையின் இறுதியில், பிரதமர் மன்மோகன் சிங் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் வர வேண்டும் என்று நவாஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இந்திய தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் உள்ளிட்டோரும் பாகிஸ்தான் தரப்பில், நவாஸின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.