அமெரிக்கர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டின் வேதியியல் துறைக் கான நோபல் பரிசு, மூலக்கூறு வேதியியல் துறையில் சாதனை புரிந்த விஞ்ஞானிகள் மார்டின் கார்ப்ளஸ், மைக்கல் லெவிட், ஏரி வார்ஷல் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான வேதியியல் செயல் முறைக்கு (வேதிவினை மாற்றம்) கணினி வழியே தீர்வு கண்டதற்காக இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆய்வு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நவீன முன்னேற்றங்களை கொண்டு வரும். மார்டின் கார்ப்ளஸ் (83), அமெரிக்கா மற்றும் ஆஸ்திரிய குடியுரிமையையும் மைக்கல் லெவிட் (66), அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேலிய குடியுரிமையையும் ஏரி வார்ஷல் (72), அமெரிக்கா, இஸ்ரேலிய குடியுரிமையையும் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணி புரிகின்றனர்.

இம்மூவருக்கும் ஸ்டாக் ஹோமில் வரும் டிசம்பர் 10-ம் தேதி பரிசு வழங்கப்படும். பரிசுத் தொகையாக வழங்கப்படும் 1.25 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 7 கோடியே 70 லட்சம்) மூவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE