திருநங்கைகள் என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். வக்கிரப் பார்வை, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல், சமூக புறக்கணிப்பு என அத்தனை அவலங்களையும் சகித்துக்கொண்டு, இன்றைக்கு பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி சாதித்தவர்களில் பாரதி கண்ணம்மாவும் பிரியா பாபுவும் நல்ல உதாரணங்கள்.
மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இவர்களின் ஆயத்த ஆடை (ரெடிமேட் கார்மென்ட்ஸ்) தயாரிப்பு மையம். அங்கே பாரதி கண்ணம்மாவையும் பிரியா பாபுவையும் சந்தித்தோம். முதலில் பாரதி கண்ணம்மா பேசினார்.
‘‘இந்த வருஷம் ஒன்பதாம் மாசம், ஒன்பதாம் தேதி இந்த கார்மென்ட்ஸ் சென்டரை ஆரம்பிச்சோம். என்ன.. எல்லாமே ஒன்பதா வருதேன்னு பார்க்குறீங்களா? தப்பா நெனச்சுடாதீங்க. அன்னைக்கு விநாயகர் சதுர்த்திங்கிறதால தொடங்கினோம்’’ இந்தச் சமூகம் தங்களுக்குச் சூட்டி வைத்திருக்கும் இழிவான பட்டப்பெயரை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டதை உணர முடிந்தது. பாரதி கண்ணம்மா தொடர்ந்தார்..
எல்லாரும் திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்க மாதிரி பேசுவாங்க. ஆனா வேலை கேட்டுப் போனா, யாரும் தர மாட்டாங்க. ‘உங்கள வேலைக்கு வச்சா, மத்தவங்க வரத் தயங்குவாங்க. உள்ள பொழப்பும் கெட்டுப் போயிரும்மா’ன்னு சொல்லி 500 ரூபாயை கையில குடுத்து அனுப்பி வைச்சிடுறாங்க.
சமுதாயம் நம்மள ஏத்துக்கணும்னா அவங்க விரும்புற துறையை நாம தேர்வு செய்யணும். அதனால தான் கார்மென்ட் தொழில்ல இறங்கிப் பார்க்கலாங்கிற ஐடியா தோணுச்சு. சில நல்ல உள்ளங்களோட உதவியால, கோவையில இருக்கற தைலா நிறுவனம் எங்களுக்கு தொழில் வாய்ப்பு தர முன் வந்தாங்க. இதுவரை கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் வரைக்கும் செலவு செஞ்சு இந்த ஆடை தயாரிப்பு மையத்தை உருவாக்கி இருக்கோம்.
ஆர்டர் பிடிக்கிறது, வரவு செலவு பார்க்கிறதுன்னு எல்லா வேலையும் திருநங்கைகள்தான் பண்றோம். டைலரிங் வேலைக்கு மட்டும் வெளியில இருந்து சில பெண்கள் வர்றாங்க. ஏன்னா.. ‘ஒரு வீதி சுத்திட்டு வந்தாலே ஐநூறூ ரூபா கிடைக்கும். ஆனா.. டைலரிங் வேலைய நாள் முழுசும் பார்த்தாலே முந்நூறு கூட சம்பாதிக்க முடியாது’ன்னு சொல்லி பல திருநங்கைகள் இந்த வேலைக்கு வரத் தயங்குறாங்க. எது கவுரமான வேலைன்னு அவங்களுக்கு இன்னும் தெரியாமலே இருக்கு.. என ஆதங்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிரியாபாபு, ‘‘முதல் மாசம், எதிர்பார்த்தபடி எங்க இலக்கை எட்டிட்டோம். அதனால இங்க வேலை பார்த்தவங்களுக்கு வாரச் சம்பளத்தோட, தீபாவளி போனஸ்கூட போட்டிருக்கோம். ரெண்டாவது மாசத்துக்கு கூடுதலா மெட்டீரியல் கேட்டிருக்கோம். திருநங்கைகள் முயற்சித்தால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை இந்த கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றி மூலம் சமுதாயத்துக்கு சொல்லி ஆகணும். அதுக்காவே கடுமையா உழைச்சிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரமே இதை பெரிய நிறுவனமா வளர்த்துக் காட்டுவோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago