திருநெல்வேலியின் தாமிரபரணியைக் காப்பாற்றுங்கள்!

By செய்திப்பிரிவு

# பாளையங்கோட்டை கல்வி நிறுவனங்களில் ஏராளமான பட்டதாரிகள் உருவாகின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு எந்தத் திட்டங்களும் இங்கு இல்லை. கங்கைகொண்டான், நாங்குநேரி தொழில்நுட்பப் பூங்கா திட்டங்கள் பல ஆண்டுகளாகியும் அரைகுறையாக நிற்கின்றன. அடிப்படை வசதிகளைச் செய்துதராததால் இங்கு பெரிய நிறுவனங்கள் வரவில்லை; வேலைவாய்ப்பும் பெருகவில்லை.

# தாமிரபரணி ஆறு பாய்ந்தோடினாலும் மானூர், ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினை நீடிக்கிறது. நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்ட நிலையில், தங்களுக்கு வறட்சி நிவாரணம் சரியாகக் கிடைக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள். களக்காடு பகுதியில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. இங்கு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உட்பட 11 அணைக்கட்டுகள் இருக்கின்றன. பெரும்பாலான அணைக்கட்டுகளும் பாளையங்கால்வாயும் பராமரிப்பின்றி இருக்கின்றன. இதனால் விவசாயம் அழிந்துவருகிறது.

# பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு மோசமாக இருக்கிறது. பல இடங்களில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

# தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது மற்றும் மணல் அள்ளப்படும் விவகாரம் நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் அரசுத் துறைகள் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு அடிபணிந்து செல்கின்றன. திருநெல்வேலி நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணியில் கழிவுகள் கலக்கின்றன. சில பகுதிகளில் மர்ம நபர்கள் இரவில் திடக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். தாமிரபரணியின் புனிதம் காக்க யார்தான் முயற்சிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

# தாமிபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தரமாகச் செயல்படுத்தப்படவில்லை. இதனால், திருநெல்வேலி புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது.

# கூடங்குளத்தில் அணு உலைப் பூங்காவுக்கு எதிராக இடிந்தகரை மீனவர் கிராமத்தில் ஆண்டுக் கணக்கில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.500 கோடியில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசின் அறிவிப்பு செயலாக்கம் பெறவில்லை.

# மீனவர் கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுவருகின்றன. தூண்டில் வளைவுகள் அமைக்கும் திட்டம் நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ளது.

# திருநெல்வேலி தொகுதியில் சாதி மோதல்களால் உயிர், உடமை இழப்புகள், பொதுச் சொத்துகள் சேதம் என சாதி மோதல்கள் வேர்விட்டுக்கொண்டிருக்கின்றன. இங்கு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

# திருவனந்தபுரம் கோட்டம், மதுரைக் கோட்டம் என்று இரண்டு நிர்வாகங்களின் கீழ் இந்தத் தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே பகுதிகள் வருகின்றன. அதனாலேயே ரயில் வளர்ச்சித் திட்டங்களில் இரண்டும்கெட்டான் நிலைக்கு இந்தத் தொகுதி தள்ளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர் மக்கள்.

# பாபநாசம் அணை - மணிமுத்தாறு அணை இணைப்புத் திட்டம், அம்பாசமுத்திரம் - பாபநாசம் - திருவனந்தபுரம் சாலைத் திட்டம் ஆகிய பெரும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

# தொகுதியில் பரவலாகக் கழிவுநீர் மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE