பிரதமரின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் இளவரசர் - ராகுல் மீது மோடி தாக்கு
புது டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டெல்லியில் அவர் கலந்து கொள்ளும் முதலாவது பேரணி இதுவாகும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குள்ளேயே பல அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தாயின் தலைமையில் ஓர் அரசும், மகன் மற்றும் மருமகன் தலைமையில் தனித்தனி அரசுகளும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, அந்த கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் வேறு தனித்தனியே அரசாங்கத்தை நடத்தி வருகின்றன. இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பிரதமர் பதவிக்கான கௌரவத்தை அக்கட்சியினரே சீர்குலைத்துவிட்டனர். பிரதமரை அவமதிக்கும் பாவத்தை ராகுல் காந்தி செய்துவிட்டார். இப்போதைய முக்கிய பிரச்சினை இந்த நாட்டை அரசமைப்புச் சட்டப்படி ஆள வேண்டுமா அல்லது 'இளவரசரின்' (ராகுலின்) எண்ணப்படி ஆட்சி நடைபெற வேண்டுமா என்பதுதான்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு சர்தார்ஜி ஒருவர் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது செயல்பாடுகள் (இந்தி மொழியில்) 'அசர்தாராக' உள்ளது (வலிமையாக இல்லை)" என்றார் மோடி.
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச் சட்டத்துக்கு ராகுல் காந்தி சமீபத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அது ஒரு முட்டாள்தனமான செயல் என்றும், அதை கிழித்தெறிய வேண்டும் என்றும் அவர் கூறியது நினைவுகூரத்தக்கது.
கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது: ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். அதற்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், சிறிய நாடுகளைவிட நாம் பின்தங்கியே இருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணி அரசு செயலிழந்துவிட்டது. ஆளும் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை. இந்த ஆட்சி காந்தி பக்தியில் மூழ்கியிருக்கிறது. அதாவது காந்தி படம் அச்சடிக்கப்பட்ட ரூபாயை டன் கணக்கில் வசூலிக்கும் பணியில் அந்த கூட்டணி மூழ்கியுள்ளது.
நான் எப்போதும் ஆட்சியாளனாய் நடந்து கொண்டதில்லை. உங்கள் சேவகனாகத்தான் இருப்பேன். தேசம் முதன்மையானது என்பதே எனது மதம். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த மன்மோகன் சிங், தான் ஓர் ஏழைநாட்டின் பிரதிநிதி என கூறியுள்ளார். இதை அறிந்து அவமானத்தால் தலைகுனிந்தேன். ஏழைகள் தேசம் என்பதற்கு பதிலாக, மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதம் 35 வயதுக்கு உள்பட்ட இளைய தலைமுறையினரை பெற்றுள்ள வலிமையான நாடு என அவர் ஏன் கூறவில்லை?
பத்திரிகையாளர்களிடம் கலந்துரையாடியபோது, மன்மோகன் சிங்கை கிராமத்துப் பெண் என்று கூறி இழிவுபடுத்தி யுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். இது மிகப்பெரிய அவமதிப்பாகும். நமது பிரதமரை வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இவ்வாறு இழிவுபடுத்தியிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. 120 கோடி மக்களை கொண்ட இந்தியாவின் பிரதமரை இதுபோன்று விமர்சிக்க நவாஸ் ஷெரீப்புக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பியுள்ளார் நரேந்திர மோடி.