திரைப்படங்களுக்கு முன்னோட்டம்போல, அடுத்த மே மாதம் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக நடக்கவிருக்கின்றன ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள். 11 கோடி வாக்காளர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் வரை 1.3 லட்சம் வாக்குச்சாவடிகளுக்குப் போய் 630 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள்.
இதே மாநிலங்களிலிருந்து அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 48 மக்களவை உறுப்பினர்கள் எந்தக் கட்சிகளுக்குக் கிடைப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மூன்றிலும் காங்கிரஸும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் இரண்டிலும் பாரதிய ஜனதா கட்சியும் ஆளுங்கட்சிகள். தேர்தலுக்குப் பின் இந்த நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
பாட்டியம்மா கோட்டை - டெல்லி
ஷீலா தீட்சித் 1998-லிருந்து முதல்வராக இருக்கும் மாநிலம். முதல்வராக மீண்டும் வர விரும்புகிறாரோ இல்லையோ, இப்போது 78 வயதாகும் ஷீலாவுக்கு மக்களிடையே செல்வாக்கு இன்னும் கணிசமாகவே இருக்கிறது. அன்பான பாட்டியம்மா இமேஜ் அதிகம் அடிவாங்கவில்லை.
ஷீலா முதலில் முதல்வராகப் பதவியேற்றபோது டெல்லியில் மெட்ரோ கிடையாது. மிகச் சில மேம்பாலங்களே இருந்தன. இப்போது அவையெல்லாம் பெருகியதைப் போல, ஊழல் குற்றச்சாட்டுகளும் பெருகியிருக்கின்றன. டெல்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற கூக்குரல், பேருந்தில் மாணவி பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தையொட்டி பலமாக எழுந்தது. ஆனாலும் இவையெல்லாம் ஷீலாவின் செல்வாக்கைப் பெரிதாக பாதிக்கவில்லை. காமன்வெல்த் விளையாட்டு ஊழல்கள் கல்மாடியை பாதித்தது.
“சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைக்கு டெல்லி மாநில அரசு பொறுப்பல்ல. காரணம், டெல்லி காவல் துறை மாநில அரசின் வசம் இல்லை; தலைநகர் என்பதால் மத்திய அரசின் வசம் இருக்கிறது” என்று சொல்லித் தப்பிக்கிறார் ஷீலா.
இதெல்லாம் ஷீலாவுக்குச் சாதகமான அம்சங்களானதால், அண்ணா ஹசாரேவோ அரவிந்த் கெஜ்ரிவாலோ செய்த போராட்டங்களெல்லாம் மத்திய அரசுக்கு எதிரானதாகக் கருதப்பட்டனவே ஒழிய, ஷீலாவை அதிகம் பாதிக்கவில்லை. இன்னமும் கருத்துக் கணிப்புகளின்படி மக்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்ற பட்டியலில் ஷீலாவுக்கு 42 சதவீத ஆதரவு இருக்கிறது. ஷீலாவுக்கு இருக்கும் இன்னொரு சாதகமான அம்சம், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்குள் இருக்கும் கோஷ்டித் தகராறுகள். யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற இழுபறி இப்போதைக்குத் தீர்க்கப்பட்டு, 40 வருட கால ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவிக்கப்பட்டுவிட்டபோதும் கோயல் கோஷ்டிக் குமுறல்கள் உள்ளுக்குள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஷீலாவின் இமேஜுக்கு ஈடுகொடுக்க ஹர்ஷ் வரதனால்தான் முடியும் என்று பா.ஜ.க. தலைமையும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கருதுகின்றன. ஆனால், ஹர்ஷ் வரதனைவிட பலமான இமேஜ் உள்ள இன்னொருவர் களத்தில் இருப்பதுதான் இப்போது பா.ஜ.க-வுக்குச் சிக்கல். அவர்தான் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, இப்போது ஆம் ஆத்மி கட்சியை நிறுவியிருக்கும் முன்னாள் அரசு அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் கட்சிக்கும் இதுவே முதல் தேர்தல். கெஜ்ரிவாலின் கட்சிக்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என்றும் புதிய இளம் வாக்காளர்கள் ஆதரவு அவருக்கே செல்லும் என்றும் கருதப்படுகிறது. அப்படி நடந்தால், கெஜ்ரிவாலுக்குச் செல்லும் வாக்குகள் எல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறவே பயன்படும் என்பதால், காங்கிரஸ் ஜெயிப்பது எளிதாகிவிடலாம். எனவே, டெல்லியில் பா.ஜ.க-வுக்கு உள்ள சவால், கெஜ்ரிவாலுக்குச் செல்லக் கூடிய ஓட்டுகளை பா.ஜ.க-வுக்குத் திருப்புவது எப்படி என்பதுதான்.
நரேந்திர மோடியால் அங்கே அதைச் செய்ய முடியுமா என்பதே பா.ஜ.க-வின் முன் உள்ள கேள்வி. மொத்த 70 இடங்களில் கெஜ்ரிவாலின் கட்சி 9 முதல் 18 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்ற அச்சம் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கிறது. ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினர் கெஜ்ரிவாலை ஒரு சக்தியாகக் கருதவில்லை. தாங்களே ஏற்கெனவே சுமார் 14 சதவீத வாக்குகளை டெல்லியில் வைத்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சுமார் 20 சீட்டுகளில் மற்ற கட்சிகளின் வெற்றிவாய்ப்பைச் சிதைக்கும் வலிமை அவர்களுக்கு இருக்கிறது. சென்ற முறை இரண்டு இடங்களை வென்றிருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் சூழலில், காங்கிரஸ் மறுபடியும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும். அப்படி இல்லாமல் ஒரு தொங்கு சட்டமன்றம்கூட அமையலாம். இரண்டாவதைச் சாதித்தால்கூட பா.ஜ.க-வுக்கு லாபம்தான்.
அடிவாங்கும் இளவரசர் - மத்தியப் பிரதேசம்
எட்டாண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் சிவராஜ் சிங் சௌஹானை மட்டும் பா.ஜ.க. தன் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், பிகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகளை இழக்கும் நிலை அதற்கு வந்திராது. நரேந்திர மோடிக்குக் கிடைக்கும் கவனம், விளம்பரம் எல்லாம் சௌஹானுக்குக் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அவர் வாஜ்பாயிபோல பா.ஜ.க-வுக்கு சாந்தமான ஒரு முகமூடியை நிச்சயம் வழங்கியிருக்கக் கூடியவர்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பிடித்தமான இந்துத்துவச் சட்டங்களான மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடைச் சட்டம் இரண்டையும் கடுமையாகத் தன் மாநிலத்தில் வைத்திருக்கும் சௌஹான், அதே சமயம் மாநில முஸ்லிம்களின் நண்பன் பிம்பத்தையும் உருவாக்கியிருக்கிறார். மோடியைப் போலத் தலையில் முஸ்லிம் குல்லாய் போட மறுப்பவர் அல்ல. அதை அணிந்துகொண்டு இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்பவர்.
அரசு சார்பில் நடத்தப்படும் இலவசக் கூட்டுத் திருமணங்களை இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கும் ஏற்பாடு செய்பவர். உண்மையில் சௌஹான் பா.ஜ.க-வை நம்பி இருப்பவர் என்பதைவிட, அவரை நம்பி பா.ஜ.க. அங்கே இருக்கிறது என்பதே நிஜம். கட்சி, மத, ஜாதி வேறுபாடுகளுக்கு அப்பால் சௌஹானுக்கு செல்வாக்கான ஒரு பிம்பம் மக்களிடையே இருக்கிறது. வேளாண் துறையில் அதிக கோதுமை விளைவித்த சாதனை அவர் மாநிலத்துக்குரியது.
எப்படி ஊழல் பிரச்சினைகள் ஷீலா தீட்சித்தை நேரடியாக பாதிக்கவில்லையோ அதே போல சௌஹானின் ஆட்சி பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரது தனிப்பட்ட செல்வாக்கை பாதிக்கவில்லை. காங்கிரஸ் இங்கே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு குறைவுதான். முக்கியக் காரணம் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப் பூசல்கள். திக்விஜய் சிங் ஒரு பக்கம், உள்ளூர்த் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பக்கம், முதல்வர் வேட்பாளராகக் கருதப்படும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்னொரு பக்கம். இத்தனைக்கும் சிந்தியாவுக்கு இளம் தலைவர், திறமையானவர், அரச குடும்ப வாரிசு என்கிற இமேஜ் எல்லாம் இருந்தாலும், கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு முதல் எல்லாவற்றிலும் (தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி) கோஷ்டி அடிப்படை மட்டுமே இருப்பது இங்கே காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இங்கேயும் ஒன்பது சதவீத வாக்கு பலத்துடன் இருக்கிறது.
சென்ற தேர்தலில் ஏழு இடங்களை வென்றது. பல தொகுதிகளில் அது யார் ஓட்டைப் பிரிக்கிறது என்பது மாறுபடக் கூடும். எப்படியும் சிவராஜ் சிங் சௌஹானும் பா.ஜ.க-வும் மீண்டும் இங்கே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பே அதிகம். மத்தியப் பிரதேசம்.
ராஜஸ்தான் - கையை ஒடுக்கும் ராணி
இங்கே சட்டமன்றத்தை யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கே மக்களவைத் தொகுதிகள் எல்லாம் அடுத்துக் கிடைத்துவிடும் என்று சொல்லலாம். சட்டப்பேரவையில் மொத்தம் 200 இடங்கள். மக்களவையில் 25. கடந்த 2008-ல் காங்கிரஸ் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த அடுத்த ஆறு மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் 25-ல் 21 மக்களவைத் தொகுதிகளை வென்றது. தவிர, இந்த மாநிலம் தமிழ்நாடு மாதிரி. ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் ஆட்சியை மாற்றிக்கொண்டே இருக்கும்.
இங்கே தி.மு.க., அதி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வருவதுபோல, ராஜஸ்தானில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் வந்துகொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால், இது பா.ஜ.க-வுக்கான வாய்ப்பு. முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸுக்குள் வேறு எவரும் எதிர்க்க முடியாத நிலையில் தன்னை வைத்துக்கொண்டிருந்தாலும், அண்மைக் கால நிகழ்வுகள் அவருக்குச் சிக்கலாக உள்ளன.
விலைவாசி உயர்வு, ஓய்வூதிய வெட்டு போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியவை. முந்தைய பா.ஜ.க. ஆட்சியைவிட இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்திருப்பது, தொடர்ந்து காங்கிரஸையே ஆதரித்துவரும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. பா.ஜ.க. சார்பில் களத்தில் இருப்பவர் முன்னாள் முதல்வரும் அரச குடும்ப செல்வாக்குள்ளவருமான வசுந்தரராஜ சிந்தியா. இவரும் சௌஹான் மாதிரிதான். இவருடைய தனிப்பட்ட செல்வாக்கை நம்பி பா.ஜ.க. இருக்கிறதே தவிர, பா.ஜ.க-வை நம்பி இவர் இருப்பதாகச் சொல்ல முடியாது. தவிர, சௌஹான்போலவே முற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வேண்டப்பட்டவராகவும் வசுந்தரா கருதப்படுவதில்லை.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் வசுந்தராவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. ஒரு முக்கியக் காரணம், அவர்தான் வாரத்தில் ஐந்து நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் மிகவும் இழுபறிப் போட்டியில் இருப்பவை. வாக்கு வித்தியாசம்கூடக் குறைவுதான். ( 36.8%; 34.3%). அடுத்த இடத்தில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7.6% ஓட்டுகள் இருக்கின்றன. இந்த இழுபறி ஆட்டத்தில், டெல்லியில் ஷீலா தீட்சித் தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதுபோல இங்கே அசோக் கெலாட் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை. மீறி திரும்ப ஜெயித்தால் அது சாதனைதான். ராஜஸ்தான.
மிசோரம் - மிளிரும் கை
காங்கிரஸின் லால்தன்ஹாலா இப்போது இங்கே முதலமைச்சர். 10 ஆண்டுகள் கழித்து 2008-ல்தான் காங்கிரஸ் இங்கே ஆட்சிக்கு வந்தது. மிசோரமில் பிரதானப் பிரச்சினை எப்போதுமே நிலம் சம்பந்தப்பட்டதுதான்.
ஏழை மக்களுக்கான நிலம் வழங்கல், நில உபயோகம்பற்றியெல்லாம் சட்டம் போட்டபோதும் நடைமுறையில் அவை செயல்படுத்தப்படும் விதம் மக்களின் முடிவுகளைத் தேர்தலுக்கு தேர்தல் மாற்றக் கூடியவை. மொத்த மக்கள்தொகையில் 85% பேர் கிறிஸ்தவர்கள். வாக்காளர்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம்.
ஆனால், கடந்த 41 வருடங்களில் இங்கே இதுவரை மொத்தம் ஆறே ஆறு பெண்கள்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அதிலும் மூவர் நியமிக்கப்பட்டவர்கள். இன்னொரு பக்கம், மிசோரம் மாநிலம்தான் புரட்சிகரமாக முதன்முதலில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆரம்பித்த மாநிலம்!
இங்கே இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். மிசோ மக்கள் மாநாட்டுக் கட்சி, மாராலாந்த் ஜனநாயகக் கட்சி என இதர கட்சிகள் எல்லாம் இங்குள்ள வெவேறு பழங்குடிப் பிரிவினரின் தனிக்கட்சிகள். இரட்டை இலக்க எண்ணிக்கையில்கூட சீட்டுகளை வெல்வது அரிது. மிசோரம்
சத்தீஸ்கர் - மிதக்கும் தாமரை
சத்தீஸ்கர் இப்போது முதல்வராக இருக்கும் பா.ஜ.க-வின் ரமண் சிங் தொடர்ந்து இரு முறை முதல்வரானவர். மூன்றாம் முறையும் வெல்வாரா என்பதே இப்போதைய சவால். ஏனென்றால், இங்கேயும் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஓட்டு வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான்.
மக்கள் கொஞ்சம் மாற்றி ஓட்டு போட்டாலும் ஆட்சிகள் மாற முடியும். பஸ்தார் பகுதி முற்றிலும் பழங்குடிகள் வாழும் பகுதி. இங்கே 1998-ல் மொத்தம் 12 இடங்களில் 11-ஐ காங்கிரஸ் வென்றது. 2008-ல் அடுத்த தேர்தலில் 12-ல் 11 பா.ஜ.க-வுக்கு! ரமண் சிங் இப்போதைக்கு பா.ஜ.க-வின் ஒரே முக்கியத் தலைவராக இங்கே இருக்கிறார்.
காங்கிரஸில் அப்படி இல்லை. அஜீத் ஜோகி காங்கிரஸை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், பழைய சுக்லா விசுவாசிகள் முதல் பல்வேறு கோஷ்டிகள் கட்சியில் உள்ளன. ஆனால், அஜீத் ஜோகி தனக்குக் குறிப்பிட்ட பழங்குடியினரிடம் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில், தன்னை மிஞ்சி யாரும் வரக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர். அவர்தான் இங்கே காங்கிரஸின் பலம், பலவீனம் இரண்டுமே.
ரமண் சிங்கின் ஆட்சியில் ஏழைகளுக்கான ரேஷன் அரிசித் திட்டம் பெரும் வெற்றிபெற்ற திட்டமாகக் கருதப்படுகிறது. நக்சல் போராட்டங்கள் அவர் ஆட்சிக்குத் தலைவலியானாலும், அண்மையில் பல காங்கிரஸ் தலைவர்களை நக்சல்கள் கொன்ற விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலிருந்து அவர் தப்பிவிட்டார். கொலைகளில் உட்கட்சிச் சதிகூட இருக்கலாம் என்ற கருத்து பரவியதும் ரமண் சிங் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொண்டார்.
இந்தத் தேர்தலில் சாகு ஜாதியினரின் போராட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது பிரதானமான கேள்வியாகும். இடஒதுக்கீட்டில் தங்களுக்கு 14 சதவீதத்தை 27 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எழுப்பிப் போராடுகின்றனர். மாநிலத்தின் மொத்த 90 சட்டப்பேரவை உறுப்பினர்களில் சாகு ஜாதியினர் மட்டும் 24 பேர் உள்ளனர். இப்போதைய சூழலில் ரமண் சிங்கும் பா.ஜ.க-வும் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பே அதிகம்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago