கலையை வளர்ப்பதில் புரவலர்களின் பங்கு இன்றியமையாதது. கர்நாடக இசையும் சென்னை இசை விழாவும் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றன என்றால் அதற்குப் புரவலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சென்னையில் இசைக்குப் பெரும் ஆதரவளித்துவரும் புரவலர்களில் ஒருவரான நல்லி குப்புசாமி செட்டியார், இசைக்கு ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. ஆறு சபாக்களின் தலைவராக இருக்கும் இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்க ஆதரவளித்துவருகிறார். ஒவ்வோர் ஆண்டும் இசை விழாவின் விரிவான நிகழ்ச்சி நிரலை அச்சிட்டு ரசிகர்களுக்காக இலவசமாக வழங்கிவருகிறார். இசை விழா குறித்தும் இசையின் நிலை குறித்தும் தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் ‘தி இந்து’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
சென்னை இசை விழா கண்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1930களில் இசை விழா நடத்த ஐந்து சபாக்கள் மட்டுமே இருந்தன. ஐந்து நாட்கள் மட்டுமே விழா நடக்கும். இன்று 160க்கும் மேற்பட்ட சபாக்கள் இருக்கின்றன.
ஒரு மாதத்திற்கும் மேல் இசை, நாட்டிய விழா நடக்கிறது. மார்கழி இசை விழா என்று சொல்லப்பட்டுவந்த இந்த விழா, இன்று கார்த்திகை - மார்கழி விழாவாக வளர்ந்துவருகிறது. முன்பெல்லாம் கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 24 அன்று தொடங்கிப் புத்தாண்டில் முடியும். இப்போதெல்லாம் சில சபாக்களில் இசை விழா நவம்பரிலேயே தொடங்கி ஜனவரிவரை தொடர்கிறது.
எல்லா சபாக்களிலும் காலை முதல் இரவுவரை நடக்கும் எல்லா நிகழ்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கும். ஒரே சமயத்தில் முக்கியமான பல கச்சேரிகள் நடப்பதால் எந்தக் கச்சேரிக்குப் போவது என்ற குழப்பமும் சங்கடமும் ஏற்படுமளவுக்குக் கச்சேரிகள் பெருகிவிட்டன.
இசை விழா மயிலாப்பூர், தி.நகரிலேயே மையம் கொண்டிருந்த நிலை மாறியிருக்கிறது அல்லவா?
ஆமாம். சென்னைப் புற நகர்ப் பகுதிகளிலிருந்து மாலைக் கச்சேரிகளுக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்வது கடினமானது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களை உத்தேசித்து இந்தப் பகுதிகளிலேயே சபாக்களும் நிகழ்ச்சிகளும் கடந்த சில ஆண்டுகளில் உருவாகிவருகின்றன. இந்திரா நகர், திருவான்மியூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் சபாக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் ரயில்வே பாதைக்கு அந்தப் பக்கம் கச்சேரிகளே நடக்காது. மாம்பலம் ராம் சமாஜ் போன்ற ஒன்றிரண்டு மையங்கள்தான் இருந்தன. இப்போது கோடம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் சபாக்கள் உள்ளன. இசை விழா இங்கும் நடக்கிறது.
இசை விழா வட சென்னையில் அதிகம் நடப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?
அந்தக் காலத்தில் இருந்த ஐந்து சபாக்களில் பெரம்பூர் பக்த ஜன சபா டிரஸ்ட் என்ற சபாவும் ஒன்று. ஆர்மீனியன் தெருவில் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி என்னும் சபா இயங்கிவந்தது. இந்த சபாக்கள் இன்னமும் செயல்பட்டுவருகின்றன. இயல் இசை நாடக மன்றமும் வட சென்னையில்தான் இருக்கிறது. ஆனால், பெரம்பூரைத் தாண்டி வட சென்னையில் இசை விழா பரவவில்லை என்பது உண்மைதான்.
இசைவிழாவில் தமிழிசை பற்றி?
தமிழிசைச் சங்கம் போன்ற சில அமைப்புகள் தமிழிசையை வளர்க்கப் பெரு முயற்சி எடுத்துவருகின்றன. மற்ற பல சபாக்களும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. இன்றைய பாடகர்கள் நிறைய தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். தமிழிசைக்கான முக்கியத்துவம் கிடைத்துவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சபாக்களும் பாடகர்களும் நிகழ்ச்சிகளும் பெருகியதற்கு ஏற்ப ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்களா?
ஒரு கூட்டத்தில் பேசும்போது செம்மங்குடி நிவாச ஐயர் வேடிக்கையாக இப்படிக் குறிப்பிட்டார். சபாவின் ஒரு பக்கத்தில் இருப்பவர்கள் (பாடகர்களும் பக்க வாத்தியக் கலைஞர்களும்) அதிகமாகியிருக்கிறார்கள். மறு பக்கத்தில் இருப்பவர்கள் (ரசிகர்கள்) அதிகரிக்க வேண்டும் என்றார். அதிகரித்துத்தான் இருக்கிறார்கள். இப்போதுகூடச் சில கச்சேரிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு சில கச்சேரிகளுக்கு எக்கச்சக்கமாகக் கூட்டம் வருகிறது. ஆனால், தொடர்ந்து ரசிகர்கள் பெருகுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். முத்ரா பாஸ்கரன் மாணவர்களிடமும் இளையவர்களிடமும் இசையை எடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இசை மழலைகள் என்னும் பெயரில் இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவித்து வளர்க்கும் முயற்சியை அபஸ்வரம் ராம்ஜி செய்கிறார். இப்படிப் பல முயற்சிகள் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. பள்ளிகளில் இசை வகுப்பு எடுக்க வேண்டும் என்னும் யோசனையைச் சிலர் முன்வைக்கிறார்கள். பள்ளிகளில் இசை படிக்கும் அத்தனை பேரும் தேர்ந்த கலைஞர்களாகிவிட மாட்டார்கள். ஆனால், அவர்கள் இசையை ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள்தான் வருங்காலத்தில் இசையைப் போஷிப்பார்கள்.
தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றால் இசை விழாவுக்கு பாதிப்பு இருக்கிறதா?
அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவை இசைக்கு மகத்தான சேவை செய்துவருகின்றன. இவை இசை விழா, சபாக்கள் ஆகியவற்றைத் தாண்டிப் பல கலைஞர்களைப் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. இதர தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை இசைச் சூழலுக்கு அவை உதவிகரமாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன். இப்போது பல தொலைக்காட்சிகளில் இசை விழா நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இதனால் இசை விழா மேலும் பலரைச் சென்றடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
உங்களைக் கவர்ந்த இளம் கலைஞர்கள்?
பலர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பேரைச் சொல்லலாம். அபிலாஷ் என்னும் 14 வயதுச் சிறுவன் பாடியதைக் கேட்டு அசந்துவிட்டேன்.
மறக்க முடியாத இசை விழா அனுபவம்?
இசை விழா அனுபவம் என்றில்லை. ஒரு முறை பல இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினேன். அடுத்த பிறவியில் இசைக்கலைஞனாகப் பிறந்து, உங்களைப் போலப் பரிசு வாங்க வேண்டும் என்பது என் ஆசை என்றேன்.
அடுத்துப் பேசிய செம்மங்குடி, நீங்கள் அடுத்த பிறவியிலும் வியாபாரியாகவே பிறந்து, எங்களைப் போன்ற கலைஞர்களை ஆதரியுங்கள் என்றார். புரவலர்கள் இல்லாமல் கலை இல்லை என்று விளக்கினார். அவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.
காட்சி ஊடகங்களின் பெருக்கம், உலகமயமாதல் ஆகியவற்றால் பல கலைகள் மங்கிவருகின்றன. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள். இசை மட்டும் எப்படித் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது?
நாட்டுப்புற, கிராமியக் கலைகள் பலவும் ஒரு குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட பிரிவினர் ஆகியவற்றைத் தாண்டி வளரவில்லை. ஆனால் இசை அப்படி அல்ல. இதுபோன்ற கலைகளைக் காப்பாற்றி வளர்க்க அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இயல் இசை நாடக மன்றம் போன்ற அமைப்புகள் இவ்விஷயத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன. தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சிகளில் கிராமியக் கலைகளை நிகழ்த்த அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதுபோன்ற முயற்சிகள் மேலும் அதிகரிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago