செல்லப்பிராணிகளுக்கு நடந்த பல் சிகிச்சை முகாம்

தமிழ்நாட்டில் முதன் முறையாக செல்லப்பிராணிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடைகளுக்கான இலவச பல் சிகிச்சை முகாமினை கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

நாய்களை கொஞ்சும்போது அதன் பற்களில் பாதிப்பு இருந்தால் அதன் எஜமானர்களுக்கு கிருமித் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவேதான், கால்நடைகள் குறிப்பாக செல்லப் பிராணிகளின் பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த முகாம் நடத்தப்பட்டது.

சென்னையைப் போல மாவட்டங்களிலும் இந்த முகாமை நடத்த அமைச்சர் சின்னையா உத்தரவிட்டுள்ளார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு 45 வகையான நாய்கள் சிகிச்சைக்காக வருகின்றன. மஞ்சள் கறைபடிதல், பல் சொத்தை ஆகியவையே நாய்களுக்கு வரும் பொதுவான நோய்கள். மஞ்சள் கறைபடிதலை கண்டுகொள்ளாவிட்டால், ஈறு புண்ணாகி, பற்களின் வேர் அழிந்து பற்கள் விழுந்துவிடும். 5 முதல் 10 சதவீதம் நாய்களுக்கு புற்றுநோய் இருக்கிறது. நாய்களுக்கு வரும் புற்றுநோயில், தோல் புற்றுநோய், சுரப்பி புற்றுநோய்க்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் வாய்ப் புற்றுநோய் இருக்கிறது.

எனவே, நாய்க்கு மனிதனைப் போல தினமும் பல்துலக்கிவிட வேண்டும். மாடுகளுக்கு பல் சீராக இல்லா விட்டால் வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலை ஏற்படும். 15, 16 வயதான குதிரைக்கு பல் வளைந்து சதையில் குத்தும். இவைஅனைத்திற்கும் சிகிச்சை அவசியம்.

அசைவ உணவில்தான் பூனை யின் இருதயத்தை வலுவாக வைக்கும் டவ்ரைன் என்ற சத்துப்பொருள் இருக்கிறது. பூனை, உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் அதற்கு பல் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை. ஆனால், நாய் வேகவேகமாக சாப்பிட்டுவிடும் என்பதால் பல் இடுக்கில் உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பிரச்சினையாகிறது.

முயலுக்கு முன்பல் நீளமாக வளர்வதால், சதையை குத்திக் கிழிக்கிறது. வளர்ந்த முன்பற்களை வெட்டி சரிசெய்வதற்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகிறார்கள் என்கிறார் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் ஜெயப்பிரகாஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE