மனத்தடைகளை உடையுங்கள்!

By மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

விளையாட்டிலிருந்து வாழ்க்கைக்குக் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஏதாவது ஒரு செயல் அல்லது சாதனை வெகு நாட்களாக மனிதனால் செய்யவே இயலாது என்று நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்திருக்கும். பிறகு யாரேனும் ஒருவர் திடீரென்று அந்த சாதனையைச் செய்து உலகையே வியக்க வைப்பார். உடனே பலரும் அந்த சாதனையைச் செய்துவிடுவார்கள். சிலர் அதையே முறியடிப்பார்கள்.

இப்படித்தான் வெகுகாலமாக ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தனர். பின்னர் 1954-ல் ரோஜர் பேனிஸ்டர் என்பவர் அதைச் சாதித்துக் காட்டினார். உலகமே வியந்தது. அதிலிருந்து 46-வது நாள் வேறொருவர் அதை முறியடித்துவிட்டார். இதிலிருந்து தெரியவரும் மகத்தான உண்மை என்னவெனில் ‘எல்லாத் தடைகளும் மனத்தடைகளே’ என்பதுதான்.

படிக்கும்போதும் இதுபோன்று ஏராளமான மனத்தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தப் பாடத்தில் 200 மதிப்பெண் எடுக்கமுடியாது, இவ்வளவு குறைந்த காலத்தில் இவ்வளவு பாடங்களைப் படிக்க முடியாது என்றெல்லாம் எண்ணப்படுபவை எல்லாம் பெரும்பாலும் மனத்தடைகளேயன்றி உண்மையாக இருக்காது.

அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்குள் அடையப்பட வேண்டிய குறிக்கோள்களை எப்படி அடைவது என்பதற்கும் விளையாட்டிலிருந்தே உதாரணங்களைக் காட்ட முடியும். கிரிக்கெட்டில் 50 ஓவர்களுக்குள் 300-க்கு மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டியிருக்கும்போது பெரும்பாலானவர்கள் மனதளவில் சோர்ந்து கோட்டை விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் அவசரம் அவசரமாக ஆறும் நான்குமாக அடிக்கிறேன் என்று ஆட்டமிழந்து விடுவார்கள்.

ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன், ஸ்டீவ் வாஹ் போன்ற ஆட்டக்காரர்கள் எல்லா பந்தையும் நான்குக்கோ, ஆறுக்கோ அனுப்ப நினைப்பதில்லை. கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளில் எல்லாம் ஒன்று இரண்டு என்று ஓட்டங்கள் எடுத்து வைத்துக் கொண்டே இருந்து கடைசி நேரத்தில் அளவுக்கதிகமான சுமைகளைச் சந்திக்காமல் எளிதில் இலக்கை அடைந்துவிடுவதே அவர்களின் பாணி.

தேர்வுக்குப் படிக்கும்போதும் இதுபோன்ற ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒரு முழு அத்தியாயத்தையும் முடிக்கவேண்டும் என்று எண்ணாமல் அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். நம் திறன் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. அதே போல, சில சமயங்களில் நமக்குக் குறைந்த அளவு நேரம் கிடைத்திருக்கும். அந்தச் சிறு இடைவெளியில் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படிக்கவேண்டும். அது ஒரு வரியோ, ஒரு பத்தியோ, ஒரு பக்கமோ இருக்கலாம்.

தோனி மாதிரி நாமும் கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்து முடித்துவிடலாம் என்றிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்