இளம் இந்திய அணி - பணிய வைத்த சாதனை

By அரவிந்தன்

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் சமனில் முடிவடைந்தது. எந்த முடிவுமே ஏதேனும் ஒரு அணிக்கு ஏமாற்றத்தையும் மற்றொரு அணிக்கு மகிழ்ச்சியையும் தரும். ஆனால் இந்த முடிவு இரு அணிகளுக்கும் ஏமாற்றத்தையும் ஆறுதலையும் கிட்டத்தட்ட சமமான அளவில் தந்தது.

ஐந்து நாட்களும் கடும் போராட்டமும் உயர் தரமான ஆட்டமும் வெளிப்பட்ட இந்த டெஸ்டின் கடைசி ஓவர் வரை யார் கை ஓங்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவில் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி தொடங்கும்போது இந்திய அணியின் மீது யாருக்கும் அதிக நம்பிக்கை இல்லை. மூத்த வீரர்கள் யாரும் இல்லை. துணைக்கண்டத்துக்கு வெளியே டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள் மிகக் குறைவாக உள்ள அணி இது. வேகப்பந்துக்குத் தோதான களங்களில் தென்னாப்பிரிக்கப் பந்து வீச்சாளர்களுக்கு இணையாகப் போடக்கூடிய பந்து வீச்சாளர்களும் இல்லை. போதாக்குறைக்கு ஒரு நாள் போட்டிகளில் பலத்த அடி வாங்கியிருந்தது.

இத்தனை எதிர்மறை அம்சங்களுடன் களம் இறங்கிய இந்திய அணி எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் விதத்தில் அடியது. முதல் நாள் முடிவில் ஆல் அவுட் ஆகாமல் இருந்ததே பெரிய விஷயம். விராட் கோலி சதம் அடித்தார். சதீஸ்வர் புஜாரா வேகப்பந்துகளைத் தடுமாற்றம் இல்லாமல் எதிர்கொண்டார். முரளி விஜயும் வேகப்பந்தை ஓரளவு சமாளித்து நின்றார். அஜிங்க்ய ரஹானே 137 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் அடித்தார். கடை நிலை ஆட்டக்காரர்கள் விரைவில் விழுந்ததால் 280 ரன்களுக்குள் இந்தியா சுருண்டது.

இதற்கு முன்பும் இந்திய மட்டையாளர்கள் அந்நிய மண்ணில் 300-400 ரன்கள் அடித்திருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு ஆடும் எதிரணி 500 ரன்கள் அடித்துவிடும். இதனால் இரண்டாம் இன்னிங்ஸில் மட்டையாளர்களின்மேல் கூடுதல் சுமை விழும். 2001இல் வீரேந்திர சேவாக் அறிமுகமான போட்டியில் அப்படித்தான் நடந்தது. முதல் இன்னிங்ஸில் 400க்கு மேல் அடித்தும் இந்தியா போட்டியில் தோற்றது.

அப்படி எதுவும் இந்த முறை நடக்கவில்லை. இந்தியப் பந்து வீச்சாளர்கள் தென்னாப்பிரிக்கக் களத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். 244 ரன்களுக்குள் எதிரணியைச் சுருட்டினார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய மட்டையாளர்கள் மேலும் தன்னம்பிக்கையோடு ஆடினார்கள். புஜாரா சதமடித்தார். கோலி மயிரிழையில் சதத்தைத் தவறவிட்டார். இந்தியா 421 ரன் குவித்தது. 458 என்னும் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியைக் காப்பாற்றிக்கொள்ளுமா என்னும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா தேறுமா என்னும்கேள்வி நான்கே நாட்களில் தென்னாப்பிரிக்கா தப்பிக்குமா என்பதாக மாறியது. இதுவே இளம் இந்திய அணியின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். தென்னாப்பிரிக்கா அசாத் தியமான உறுதியைக் காட்டியது. ஏபி டிவிலியர்ஸும் ட்யூப்ளஸியும் வெல்லும் நிலைக்கு அணியைக் கொண்டு சென்றார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை. கையில் ஆறு விக்கெட்கள் இருந்தன. ஓவருக்குச் சுமார் 4 ரன்கள் அடிக்க வேண்டும்.

இருவரும் சீராக ஆடிக்கொண்டிருந்தார்கள். வெற்றி தென்னாப்பிரிக்காவைப் பார்த்துச் சிரித்த சமயத்தில் டிவில்லியர்ஸின் மட்டையில் பட்ட பந்து ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. அடுத்துவந்த ஜே.பி. டுமினி வீராவேசத்துடன் மட்டையை வீசினார். பவுண்டரிகள் வந்தன. ஆனால் ஒரு யார்க்கர் அவர் ஸ்டெம்பைச் சாய்த்தது. அது போதாதென்று ட்யூப்ளஸி ரன் அவுட் ஆனார். சில நிமிடங்களில் நிலைமை மாறிவிட்டது.

அதன் பிறகு பிலாந்தர் அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து இறங்க வேண்டிய மோர்ன் மோர்க்கலுக்கு அடிபட்டிருந்ததால் விக்கெட் விழாமல் ஆட வேண்டும் என்பதில் பிலாந்தர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வெற்றி இலக்கை எட்டும் நோக்கத்தைக் கைவிட்டு சமன் செய்யும் நோக்கில் ஆடி ஆட்டத்தை முடித்துக்கொண்டது தென்னாப்பிரிக்கா.

தேநீர் இடைவேளைக்குள் 2 விக்கெட்களை எடுத்திருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கலாம். டிவில்லியர்ஸ் அல்லது ட்யூப்ளஸி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிருக்கலாம். இரண்டும் நடக்கவில்லை. ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளும் கடுமையாகப் போராடியதன் விளைவே இந்த முடிவு. இரு அணிகளும் இதில் மகிழ்ச்சி கொள்ளலாம் என்றாலும் இந்தியா கூடுதல் மகிழ்ச்சி கொள்ளலாம்.

இரண்டாவது இன்னிங்ஸில் 400 ரன்களுக்குமேல் அடித்ததும் கடைசி நாளில் எதிரணியின் முன்னேற்றம் கண்டு அசராமல் இந்திய பௌலர்கள் முகமது சமி, ஜாகீர் கான் இஷாந்த் சர்மா ஆகியோர் தொடர்ந்து போராடியதும் பாராட்டத்தக்க அம்சங்கள். தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா நினைத்ததில் தவறில்லை. ஆனால் இரண்டு ஓவர்களில் 16 ரன் என்னும்போது பிலாந்தர் வேகம் காட்டியிருக்கலாம்.

இந்தக் கோபம் தென்னாப்பிரிக்க ரசிகர்களின் எதிர்வினையில் தெரிந்தது. களத்திலிருந்து வெளியேறிய பிலாந்தரையும் டேல் ஸ்டெயினையும் பார்த்துக் கோபமாகக் கூச்சல் போட்டார்கள். பாதுகாப்பே முக்கியம் என்ற முடிவு களத்தில் இருந்தவர்கள் எடுத்தது என்று தென்னாப்பிரிக்க அணித் தலைவர் க்ரீம் ஸ்மித் சொல்லிவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா கடைசி நேரத்தில் இப்படிப் பணிந்துபோகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அப்படிப் பணிய வைத்ததே இந்தியாவின் வெற்றிதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்