சென்னை டீயை விரும்பும் மெட்ரோ ரயில் ரஷியர்கள்

By வி.சாரதா

கடல் கடந்து போய் அன்னிய நாட்டில் தங்களது உழைப்பை தமிழர்கள் கொடுத்தது தெரிந்ததே. அதுபோல, நமது மண்ணைத் தேடியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தொழிலாளர் கூடங்களில் தங்குகின்றனர். சென்னை சிந்தாதிரிபேட்டை அருகே உள்ள மே தின பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் 26 ரஷியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.அவர்களின் சென்னை அனுபவத்தை "தி இந்து" வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

அலெக்சாண்டர் கிரிபனோவ் மாஸ்கோவிலிருந்து வந்திருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கபாதைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏழு மாதங்களாக சென்னையில் இருக்கிறார். “எனக்கு சென்னை பிடித்திருக்கிறது. ஆனால் இங்கு வெயில் அதிகமாக உள்ளது. எங்கள் ஊரில் இவ்வளவு வெயில் இருக்காது. நாங்கள் வெளியில் போவதென்றால் மெரினா கடற்கரைக்கு செல்வோம். அது மிக ரம்மியமானது. அங்கு சென்று சற்று இளைப்பாறி வந்தால் அடுத்த சில நாட்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்” என்கிறார்.

“சாதமும், இந்தியன் ப்ரெட் சீஸும் பிடிக்கும் நாங்கள் தங்கும் இடத்திலேயே ரஷ்ய உணவை சமைப்பதால் சாப்பாடு பற்றி கவலையில்லை” என்று புன்னகைக்கிறார். இந்திய உணவை சாப்பிட்டு பார்க்கவே இல்லையா என்று கேட்டதற்கு சாதமும், கார்லிக் இந்தியன் ப்ரெட் சீஸும் பிடிக்கும் என்கிறார். தங்கும் இடத்தில் இந்தியர்களும் இருப்பதால் இந்திய உணவும் அங்கு கிடைக்கிறது என்றார். அது தவிர சென்னையில் உள்ள ஒரு சில இத்தாலியன் உணவகங்களுக்கு மட்டுமே சென்றதாக கிரிபனோவ் கூறுகிறார்.

சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்த மெட்ரோ ரயில் வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நம்புகிறேன். நான் எனது குடும்பம், குழந்தைகளை பிரிந்து இருப்பது தான் கவலையாக உள்ளது. ஆனால் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

விட்டோலி ஒரு வருடமாக சென்னையில் இருக்கிறார். ரஷியாவின் ரோஸ்டோவ் பகுதியிலிருந்து வந்திருக்கி றார். அவர் இங்குள்ள பல வகையான “டீ”யை விரும்பி ருசிக்கிறார்.

இது வரை ரஷ்யாவை விட்டு வேறெங்கும் வெளியில் சென்றதில்லை. இந்தியாவுக்கு வரும்போது அதைப் பற்றிய பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட சென்னை நன்றாக இருக்கிறது.

நாங்கள் இந்தியர்களுக்கு ரஷிய மொழி கற்றுக் கொடுப்போம். அவர்கள் எங்களுக்கு ஹிந்தி சொல்லித் தருவார்கள். காலையில் எங்களை பார்க்கும்போது அவர்கள் “தவாய் தவாய்” என்பார்கள். “தவாய்” என்றால் ரஷ்ய மொழியில் வணக்கம் என்று அர்த்தம். நாங்கள் அவர்களிடம் “நமஸ்தே” கூறுவோம்.

இந்தியாவில் டீ-யும், யானையும் தான் பிரபலமாக இருக்கும் என்று நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். எங்கள் ஊரிலும் டீ உண்டு. ஆனால் இங்கு கிடைக்கும் டீ ருசியாக உள்ளது. இங்கு வரும் ஒவ்வொரு ரஷிய நாட்டவரும் 5 அல்லது 10 கிலோ டீ தூள் வாங்கி செல்வார்கள். எனது இந்திய நண்பர்கள் எந்த கடையில் டீ நன்றாக இருக்கும் என்று எனக்கு “ஐடியா” கொடுப்பார்கள் . கிரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ என்று எல்லா வகைகளையும் ருசித்திருக்கிறேன்.

இந்திய உணவு எங்களுக்கு மிகவும் காரமாக உள்ளது. ஆனாலும் அது பிடித்திருக்கிறது. தங்கும் இடத்தில் கிடைக்கும் மீனும், சீவிய உருளை கிழங்கும் மிகவும் பிடிக்கும். ஓய்வு நேரத்தில் எழும்பூர் அருங்காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் செல்வோம்.

நான் முன்னதாக ரஷ்யாவின் சொச்சி நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தேன். ரஷ்யாவில் வேலை செய்வதற்கும் இங்கு வேலை செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனைவரும் மக்கள்தானே. கலாச்சாரம், உடலின் நிறம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரும் சகோதரர்கள் போல் பழகி வருகிறோம்.

அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது என் மனைவிக்கு கொடுப்பதற்கு சல்வார் வாங்கி வைத்துள்ளேன். அதை அவருக்கு எதிர்பாராத பரிசாக கொடுக்கப் போகிறேன்.

மாஸ்கோவிலிருந்து சென்னைக்கு வந்து 12 வாரங்களே ஆன சேர்கே மெட்ரோ ரயில் பணிகளில் ஊழியராக இருக்கிறார். அவர் சென்னையில் நிறைய பூங்காக்கள் இருப்பதால் சென்னை அழகாக இருக்கிறது என்கிறார்.

நான் இங்கிருந்து என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொண்டு செல்ல அன்பளிப்புகள் வாங்கியிருக்கிறேன். எனது ஏழு வயது மகனுக்கு யானை பொம்மை வாங்கியிருக்கிறேன். எப்படி ரஷியா கரடிகளின் நாடு என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்களோ, அது போல் இந்தியா யானைகளின் நாடு என்று ரஷியர்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்