புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதே லட்சியம்!- `மக்கள் சிந்தனைப் பேரவை’ தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன்

By ஆர்.கிருஷ்ணகுமார்

ஈரோடு என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார். அதேபோல, புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரது  நினைவுக்கு வருபவர் த.ஸ்டாலின் குணசேகரன். சிறந்த மேடைப் பேச்சாளர்களால் சிறப்பாக எழுத முடியாது. சிறந்த எழுத்தாளர்களால் , மக்களைக் கவரும் வகையில் பேச முடியாது. பேச்சு, எழுத்து இரண்டிலும் ஆற்றல் மிகுந்தவர்களால் அமைப்பை உருவாக்கி, வெற்றிகரமாய் நடத்த முடியாது. ஆனால், இத்தனை ஆற்றலும் பெற்று, தலைமைப்பண்பு, ஆளுமைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்பவர்தான் ஸ்டாலின் குணசேகரன்(59).

மிகச் சிறந்த வழக்கறிஞராக இருந்தாலும், அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி பணம் சேர்க்க முயலாமல், தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பை பரவலாக்க வேண்டும், சிறந்த பேச்சாளர்களை, தேசப்பற்று, சமூக சிந்தனை, தலைமைப் பண்புமிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன், மக்களுக்காக தன்னலமற்ற முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்  இவர். ஒழுக்கம், தேர்ந்த ஞானம், பொதுவாழ்க்கைக்கான அர்ப்பணிப்பு, எந்த விஷயத்திலும் பொதுநலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை இன்றைய இளைஞர்களின் `ரோல்மாடல்’ எனலாம். கோவை வந்திருந்த அவரை சந்தித்தோம்.

அப்பா... படிக்காத மேதை!

“ஈரோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம்தான் பூர்வீகம். நான் பிறந்தபோது அது சிறிய கிராமம். பெற்றோர் கே.தங்கமுத்து-டி.லட்சுமி. பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், பொதுவுடமைவாதியாகவும், சமூக ஆர்வலராகவும், புத்தக வாசிப்பாளராகவும் இருந்தார் அப்பா. நான் சிறு குழந்தையாக இருந்தபோதே, எனது வீட்டில் புத்தகங்கள் நிறைந்திருக்கும். ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்து, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் முடித்தேன். பின்னர் சட்டம் பயின்றேன்.

10 வயதில் தொடங்கிய மன்றம்!

எனது 10-வது வயதிலேயே, பள்ளி விடுமுறையில் மாணிக்கம்பாளையத்தில் 32 பள்ளி மாணவர்களைக் கொண்டு `மாணவர் முன்னேற்ற சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிப் பேசுவோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அமைப்புக்கு `பாரதி மாணவர் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்தோம். பள்ளிக்குச் செல்லாத மாணவர்களும், இளைஞர்களும் எங்களை அணுகி `பள்ளி மாணவர்களை மட்டும்தான் சேர்ப்பீர்களா? எங்களை சேர்க்க மாட்டீர்களா?’ என்று கேட்டனர். இதையடுத்து, அந்த மன்றத்தை  `பாரதி இளைஞர் மன்றம்’ என்று பெயர் மாற்றி, அனைவரையும் மன்றத்தில் சேர்த்தோம்.

அறிஞர்கள், சிந்தனையாளர்களை அழைத்துவந்து கூட்டங்கள் நடத்துவது, பயிலரங்குகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் நடத்துவது என தொடர்ந்து செயல்பட்டோம். நான் 7-ம் வகுப்பு படித்தபோது டால்ஸ்டாய் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ‘பாடப் புத்தகத்துடன் சேர்த்து, இதுபோன்ற புத்தகங்களையும் படி’  என்று கூறினார் அப்பா. என்னைக் கவர்ந்த அந்தப் புத்தகம், தொடர்ந்து பல புத்தகங்களைப் படிக்கத் தூண்டியது. அதேபோல, மன்ற செயல்பாடுகளிலும் முழுமூச்சுடன் செயல்பட்டேன். பொதுவாழ்வுப்  பற்றிய புரிதல் உள்ள குடும்பம் உள்ள என்பதால் இவை எதற்கும் பெற்றோர் கொஞ்சம்கூட எதிர்ப்பே தெரிவிக்கவில்லை.

இதனால், பள்ளியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் என அனைத்து அமைப்புகளிலும் சேர்ந்ததுடன், விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், தடை தாண்டி ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று, அந்த ஆண்டின் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டேன்.

பகத்சிங்கும், பாரதியும்...

பின்னர்,  ஈரோடு நகரில் பகத்சிங் இளைஞர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினேன். அப்போது எனக்கு 13, 14 வயதுதான் இருக்கும். சிறுவயதிலிருந்தே பகத்சிங், பாரதி ஆகியோர் எனக்கு இரு கண்களைப் போன்றவர்கள். இருவரது வரலாற்றையும், படைப்புகளையும் ஆசை ஆசையாகப் படித்து, பிரம்மித்துப் போனேன். அதேபோல, அப்பாவுடனும், தனியாகச் சென்றும் நிறைய கூட்டங்களுக்குப் போய், தா.பாண்டியன், கே.டி.ராஜு, அறந்தை நாராயணன், குமரி அனந்தன் ஆகியோரது சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பேன்.

பகத்சிங் இளைஞர் மன்றத்தில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். ஆண்டுதோறும் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடத்துவோம். பஞ்சாப்பில் இருக்கிறோமா, தமிழகத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் அளவுக்கு அந்தக் கூட்டங்கள் எழுச்சியுடன் அமைந்திருக்கும். இந்த நிலையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் என்ற அமைப்பில் என்னை இணைத்து, பல்லாண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். இதையடுத்து, அந்த அமைப்பிலும் என்னை இணைத்துக் கொண்டேன்.

தலைவர் பொறுப்புகள்...

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நான் 3-ம் ஆண்டு பயின்றபோது, கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். நான் அடிப்படையில் கணிதப் பிரிவு மாணவன். வழக்கமாக கலைப் பிரிவு மாணவர்கள்தான் தேர்தலில் போட்டியிட்டு, வெல்வார்கள். அந்த ஆண்டு கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு. கல்லூரி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதே ஆண்டு, பெரியார் மாவட்ட அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதற்கிடையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன், எந்த சார்பும், எந்த தலைவர் பெயரும், ஜாதி, மதம், அரசியல் என எந்தக் கலப்பும் இல்லாமல் தொடங்கியதுதான் `மக்கள் சிந்தனைப் பேரவை’.

36 ஆண்டுகளாக `பாரதி விழா’

அதற்கு முன்னதாகவே, ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் தேதி பாரதி விழா நடத்தினோம். இதுவரை 36 ஆண்டுகள் இடைவிடாமல், அதே நாளில் பிரம்மாண்டமான அளவில் பாரதி விழாவை நடத்தி வருகிறோம்.

மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கியவுடன், 10, 12-ம் வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுத் தந்த, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினோம். இவ்விழாவை 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினோம்.  அதேபோல, பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த எழுச்சியுடன் நடத்தி வருகிறோம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைத் தளபதியான கேப்டன் லட்சுமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும், அறிஞர்களையும் அழைத்து வந்து, பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள அறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் என பெரும்பாலானவர்களை அழைத்துவந்து, ஈரோட்டில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

25 ஆயிரம் உறுப்பினர்கள்!

தற்போது கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பெரியவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் சிந்தனைப் பேரவையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மக்கள் சிந்தனைப் பேரவை கிளை பரப்பியுள்ளது.

இந்த சமயத்தில்தான், மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவந்தனர். வாசிப்புதான் ஒருவரது வாழ்க்கையையே மாற்றும். ஒரு புத்தகம் சரித்திரத்தைப் புரட்டிப்போடும் தன்மை கொண்டது. எனவே, மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கில், 2005-ல் ஈரோட்டில் முதல் முறையாக புத்தகத் திருவிழாவை நடத்தினோம். அந்த சமயத்தில் சென்னையிலும், நெய்வேலியும்தான் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வந்தன.

தமிழகத்தின்  முதல் புத்தகத் திருவிழா!

முதன்முதலில் ஈரோட்டில்தான் `புத்தகத் திருவிழா’வைத் தொடங்கினோம். வெறுமனே புத்தக சந்தையாக மட்டுமின்றி, சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள், பதிப்பாளர்-வாசகர்-எழுத்தாளர் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்தியதால், இதை புத்தகத் திருவிழா என்று அழைத்தோம். ஆரம்பத்தில் ஒரு திருமண மண்டபத்தில் 75 அரங்குகளுடன் தொடங்கிய புத்தகத் திருவிழா, தற்போது 230 அரங்குகளுடன் விரிவடைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஈரோடு வந்து, அரங்குகளை அமைக்கின்றனர். புத்தகத் திருவிழாவின் முக்கிய அம்சம், நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் இல்லாததால், தரம் குறைந்ததாக இருக்குமோ என்ற எண்ணம் கொஞ்சமும் ஏற்படாத வகையில், மிகப் பிரம்மாண்டமாக, உலகத் தரமான வகையில் கண்காட்சி அரங்குகளை அமைத்துக் கொடுத்தோம்.  முழுக்க முழுக்க சமூக நோக்கம் மட்டுமே இதன் பிரதான இலக்கு.

அப்துல் கலாம் வருகை!

2009-ல் ஐந்தாம் ஆண்டுத் திருவிழாவுக்கு அப்துல் கலாமை அழைத்து வந்தோம். ஈரோட்டில் உள்ள விளையாட்டு மைதானம், வேறெந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதிக்கப்பட்டதில்லை. முதலும், கடைசியுமாக அப்துல்கலாம் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு, அப்துல் கலாம் பேச்சை ரசித்துக் கேட்டனர். 2014-ல் 10-ம் ஆண்டுத் திருவிழாவுக்கும் அப்துல் கலாம் வந்திருந்தார். கலாம் ஒரே ஊரில் நடந்த, ஒரே நிகழ்ச்சியில் இரண்டாவதாகப் பங்கேற்றது ஏறத்தாழ புத்தகத் திருவிழாவாகத்தான் இருக்கும். நடப்பாண்டு 15-ம் ஆண்டுத் திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளின் புத்தகங்களுக்காக `உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்ற தனி அரங்கு  ஒவ்வோர் ஆண்டும்  புத்தகக் கண்காட்சியில் இடம்பெறுவது சிறப்புக்குரியது. இன்று பல நகரங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பெருமிதத்துடன்  ஸ்டாலின் குணசேகரன்.மிகச் சிறந்த பேச்சாளரான இவர், பொதுநிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் என பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். குறிப்பிட்ட துறை என்றில்லாமல், இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சமூகவியல் என அத்தனை விஷயங்களையும், மணிக்கணக்கில் பேசினாலும், ஒருவர்கூட இவரது கூட்டத்திலிருந்து எழுந்து செல்ல மாட்டார் என்பதுதான் ஹைலைட். இத்தனைக்கும் நகைச்சுவையோ, சினிமாவோ இவரது பேச்சில் இருக்காது. உலக வரலாற்றுத் தகவல்கள், பல்வேறு கருத்துகளை கம்பீரமான குரலில் இவர் பேசும்போது, மெய்யுருகிக் கேட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு. பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா உரையும் நிகழ்த்தியுள்ளார். “பேச்சுக்கலை எப்படி வசமானது?” என்று ஸ்டாலின் குணசேகரனிடம் கேட்டோம்.

தண்ணீர்த் தொட்டியில் தொடங்கிய பேச்சு!

“மிகச் சிறு வயதில் பல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டுள்ளேன். நிகழ்ச்சிகளில் வரவேற்பு, நன்றியுரை என்று பேசியிருந்தாலும், முழுமையாக பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒரு நாள் எங்கள் தோட்டத்தில் உள்ள தொட்டியை சுண்ணாம்பு அடித்து, காய வைத்திருந்தார்கள். அதில் தண்ணீர் இல்லை. திடீரென நான் அந்த தொட்டியில் இறங்கி நின்றேன். அங்கிருந்த குழாயைத் திருகியபோது, அது மைக் போலக் காட்சியளித்தது. எதிரில் இருந்த மரவள்ளிக் கிழங்குச் செடிகள், மனிதர்களைப்போலக் காட்சியளித்தன. எனக்குத் தோன்றியதையெல்லாம் பேசினேன். `கூட்டத்துக்கு மத்தியில் நன்றாகப் பேச முடியும்’  என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்த சம்பவம்தான்.

தொடர்ந்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றக் கூட்டங்கள், பகத் சிங் இளைஞர் மன்றம், பாரதி மன்றக் கூட்டங்களில் பேசத் தொடங்கினேன். சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே, ஸ்ரீவாசவி கல்லூரியின் தமிழ்ப் பேரவையில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினேன். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியிருக்கிறேன். லட்சக்கணக்கானோர் கூடிய கூட்டமாக இருந்தாலும் சரி, 10 பேர் இருக்கும் கூட்டமானாலும் சரி, அதற்கு ஒரே முக்கியத்துவம் கொடுத்துத்தான் பேசுவேன்” என்றார் ஸ்டாலின் குணசேகரன்.

தலைநிமிர வைத்த தலைவர் எஸ்.ஆர்.நாதன், சுதந்திர சுடர்கள், விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர், மனிதனுக்கு மரணமில்லை,  அப்துல்கலாம் உரைகள், ஜெயகாந்தன் உரைகள், விடுதலை வேள்வியில் தமிழகம், ஈரோடு புத்தகத் திருவிழா மலர், ஜீவா முழக்கம், தேச விடுதலையும் தியாகச் சுடர்களும், வரலாறாகிவிட்ட வருகை, அன்பார்ந்த மாணவர்களே, வரலாற்றுப் பாதையில், மெய்வருத்தக் கூலி தரும், கந்தகக் காவியங்கள் என பல நூல்களையும் தொகுத்தும், எழுதியும் உள்ளார்.

விடுதலை வேள்வியில் தமிழகம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை ஆறு ஆண்டுகள் உழைத்து, முழுமையாகத் திரட்டி, விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற நூலைத் தொகுத்தும், பதிப்பிட்டும் 2001-ம் ஆண்டே வெளியிட்டார். இந்நூலின் மூன்றாம் பாகம் இப்போது தயாராவதுடன், இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, வெளிவரும் நிலையில் உள்ளது.

இளம் பேச்சாளர்கள் மாநாடு!

பன்முகங்கள் கொண்டவராக இருந்தாலும், மாணவர்கள் மீதான அக்கறைதான் இவருக்கு கொஞ்சம் அதிகம். “பல தலைவர்களின் பேச்சும், எழுத்தும்தான் என்னை ஊக்கப்படுத்தியது. அதையே நானும் இளைய தலைமுறைக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? மாணவர்களும், இளைஞர்களும்தானே எதிர்கால தேசத்தை கட்டமைக்கப் போகிறார்கள்? எனவேதான், மக்கள் சிந்தனைப் பேரவை, மாணவர்கள், இளைஞர்கள் மேம்பாட்டையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. அண்மையில் 30 வயதுக்கு உட்பட்ட, தமிழக இளம் பேச்சாளர்கள் மாநாட்டை நடத்தினோம். நாட்டுப்பற்று, சமூக உணர்வு மிக்க பேச்சாளர்களை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம். தமிழகம் எங்கும் இருந்து ஆயிரம் இளம் பேச்சாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

புத்தகத் திருவிழாவின் நோக்கமும், வாசிப்பை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மாற்றுவதுதான். புத்தகத் திருவிழா மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் வாசிப்பை மக்களிடம் கொண்டுசெல்ல பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம். இப்போது எங்கள் வாசிப்பு இயக்கம் ஈரோட்டைத் தாண்டி, தமிழகம் முழுக்க பரவியுள்ளது. தமிழ்கூறும் நல்லுலகு முழுவதும் வாசிப்பை பரவச் செய்ய, ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாநிலம் முழுவதும் வாசகர் வட்டத்தை உருவாக்கியுள்ளோம். `புத்தகத் திருவிழாவுக்கு வரவைப்பது, வாங்க வைப்பது, வாசிக்க வைப்பதுதான்’ மக்கள் சிந்தனைப் பேரவையின் முழக்கம்” என்றார் ஸ்டாலின் குணசேகரன்.

பல்லாண்டுகள் தொடர்ந்த இவரது சமூக சேவையைப் பாராட்டி கோவை கற்பகம் பல்கலைக்கழகம் 2014-ம் ஆண்டில் ஸ்டாலின் குணசேகரனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய சமூகநல அமைப்புகள் சார்பில் இவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை 60-ஐ  தாண்டிவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்