பிஹார் மாநிலத்தின் முசாபர்பூரில் என்கெபலைட்டிஸ் என்ற மூளை அழற்சி நோய்க்கு இதுவரை 110 குழந்தைகளுக்கு மேல் பலியாக, சுமார் 400க்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைதலே கூறப்படுகிறது. (ஹைபோகிளைசீமியா)
மூளை அழற்சி.. என்கெபலைட்டிஸ் என்றால் என்ன?
ஒருவகையான மூளைக் குழப்பம், திக்கு திசை தெரியாமை, வலிப்பு, மயக்கம், மற்றும் கோமா ஆகிய நரம்பியல் நோய்க்கூறுகள், வைரஸ் அல்லது பாக்டீரியாவினால் உருவாகும் மெனிஞ்ஜைட்டிஸ் என்ற மூளைக்காய்ச்சல், என்செபலோபதி, மூளை மலேரியா, ஸ்கரப் டைபஸ் ஆகியவை ஒன்று சேர்ந்த கலவையே என்கெபலைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. மற்ற எல்லாவற்றையும் வைரஸ் அல்லது பாக்டீரியா தீர்மானிக்க என்செபலோபதி என்ற நோய் பயோகெமிக்கல் தொடர்புடையது, மற்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டது.
என்செபலோபதியில் பல்வேறு வகைகள் இருந்தாலும் இங்கு பிஹாரில் பெரும்பாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதினால் ஏற்படும் ஹைபோகிளைசீமிக் என்செபலோபதிதான் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
என்கெபலைட்டிஸ்- என்செபலோபதி வேறுபாடு:
ஆம் இரண்டும் வேறு வேறு. இரண்டுக்கும் இருவேறு நோய் அறிகுறிகள் உள்ளன. மூளைச் செயலின்மை ஏற்படுவதற்கு முன்பாக காய்ச்சல் ஏற்படுவது என்கெபலைட்டிஸ். ஆனால் என்செபலோபதியில் பெரும்பாலும் மூளை செயல்பாடு பழுதுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படுகிறது. எல்லா குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்படாவிட்டாலும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு காய்ச்சலே இல்லாத போது சிலருக்கோ உயர் காய்ச்சல் ஏற்படுகிறது.
என்கெபலைட்டிஸ் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு பெரும்பாலும் மாறாமல் இருக்கும், ஆனால் என்செபலோபதியில் ரத்தத்தில் சர்க்கரை அளவு பெரும்பாலும் குறைவாகி விடும். காய்ச்சல் இல்லாமல் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் சிறிது நேர்த்தில் வாந்தி, வலிப்பு, மயக்க நிலை, அதாவது மறுநாள் காலை 4 மணி முதல் 7 மணி வரை இத்தகைய நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்தச் சமயத்தில்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக காணப்படும்.
இரண்டுக்கும் உள்ள பெரிய வேறுபாடு மூளை-தண்டுவட திரவத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் இருப்பு ஆகும். என்கெபலைட்டிஸ் ஆக இருக்கும் போது இந்த திரவத்தில் ரத்த வெள்ளை அணுக்கள் அளவு அதிகமாக காணப்படும். காரணம் மூளை செல்களில் அழற்சி இருப்பதே. என்செபலோபதியில் ரத்த வெள்ளை அணுக்களில் மாற்றம் இருக்காது.
பிஹார் மரணங்களுக்குக் காரணம் என்கெபலைட்டிஸா அல்லது என்செபலோபதியா?
ஜூன் 18ம் தேதி பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அனுப்பிய செய்தியாளர்கள் அறிக்கையின் படி பிஹார் முசாபர்பூரில் பெரும்பாலான குழந்தைகள் மரணம் சர்க்கரை அளவு குறையும் என்செபலோபதிதான் என்று கூறுகிறது. ஆகவே என்கெபலைட்டிஸ் மூலம் அதிக குழந்தைகள் இறப்பு ஏற்படவில்லை.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்செபலோபதிக்கு லிச்சிப் பழங்கள் காரணமா?
2012-13- ஆம் ஆண்டில் வைரஸ் ஆய்வாளர் டாக்டர் டி.ஜேகப் ஜான் தலைமையிலான இருவர் குழு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்செபலோபதி நோய்க்கு லிச்சி பழங்கள்தான் காரணம் என கண்டுபிடித்தனர். லிச்சி பழத்தில் காணப்படும் ஒரு நச்சின் காரணமாகவே ஹைபோகிளைசீமிக் என்செபலோபதி நோய் உருவாகிறது. 2017-ம் ஆண்டு அமெரிக்க ஆய்வாளர்களும் லிச்சிப் பழ நச்சுக் காரணத்தை உறுதி செய்தனர். இந்த நச்சுக்குப் பெயர் மெத்திலின் சைக்ளோப்ரொபில் கிளைசின் [methylene cyclopropyl glycine (MCPG)].
அதிகாலையில் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைவது வழக்கம். ஏனெனில் நாம் இரவு தூங்கி எழுவதற்கு இடையில் உணவு எடுத்துக் கொள்ளாத நேரம் அதிகம் அல்லவா?அதனால் காலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இதில் பெரும்பாலும் பிஹாரில் ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினாலும் இரவில் உணவு உட்கொள்ள முடியாத காரணத்தினாலும் சர்க்கரை அளவு குறைகிறது. நம் மூளைக்கு ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு சாதாரணமாக இருப்பது அவசியம். அப்போது லிவர் தேவையான சர்க்கரையை அனுப்புவது கடினம். எனவே மாற்று வழி என்பது குளூக்கோஸ் சிந்தசிஸ் ஆகும். அதாவது கொழுப்பு அமில உயிரகமேற்றம் செயலாற்ற வேண்டும். இந்த வழியைத்தான் மெத்திலின் சைக்ளோப்ரொபில் (MCPG) தடுத்து விடுகிறது.
நல்ல ஊட்டச்சத்துடன் வாழும் குழந்தகளுக்கு இந்த லிச்சி நச்சு ஒரு தீங்கையும் விளைவிக்காது. ஆனால் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் முதல்நாளில் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு வெறும் வயிற்றுடன் செல்லும் போது ஹைபோகிளைசீமிக் என்செபலோபதி ஆபத்து ஏற்படுகிறது.
ஏன் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கு லிச்சிப் பழங்கள் ஆபத்தாகின்றன?
நல்ல ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு லிவரில் கிளைக்கோஜெனில் குளூக்கோஸ் ரிசர்வ் உள்ளது. குளூக்கோஸ் அளவு குறையும் போதெல்லாம் கிளைக்கோஜென் குளூக்கோஸாக உடைந்து ரத்தத்தில் கலந்து ஆபத்தை தவிர்க்கிறது. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு இந்தச் சாதக அம்சம் இல்லை, காரணம் கிளைக்கோஜென் குளூக்கோஸாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உடலில் இருப்பதில்லை.
நம் லிவரில் கிளைக்கோஜென் ரிசர்வ் தீர்ந்து விடும்போது கொழுப்பு அமிலங்களை குளூக்கோஸாக மாற்றும் நம் லிவர். ஆனால் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டால் அதன் நச்சு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்குமெனில் குளூக்கோஸாக மாற்றும் சக்தியை தடை செய்து விடுகிறது. ஆகவே சர்க்கரையில் ரத்தத்தின் அளவு குறைகிறது.
ஏன் இந்த நச்சு, கோமா அல்லது குழந்தைகளை மரணத்துக்கு இட்டுச் செல்கிறது?
இந்த லிச்சி நச்சு இரண்டு விதங்களில் செயல்பட்டு மூளையை பழுதாக்கி மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நச்சினால் உடலில் சர்க்கரை அளவை சரி செய்யும் தொழிற்பாடுகள் தடுக்கப்படுவதால் மூளைக்குத் தேவையான சக்தி அல்லது எரிபொருள் குறைகிறது. இதனால்தான் மயக்கம், கோமா ஏற்படுகிறது. கொழுப்பு அமிலத்தை குளூக்கோஸாக மாற்றும் தன்மையை லிச்சி நச்சு தடுத்து விடுவதால் அமினோ ஆசிட்கள் ரிலீஸ் ஆகிறது அமினோ ஆசிட்கள் மூளைக்கு தீங்கானது, நச்சு விளைவிக்கக் கூடியது. அமினோ அமிலங்களினால் மூளை செல்கள் வீங்கத் தொடங்குகின்றன. இதனையடுத்து நீண்ட கோமா, மரணம் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்துக் கோளாறுகள் உள்ள குழந்தைகளை குறைசர்க்கரை என்செபலோபதியிலிருந்து காக்க முடியுமா?
ஆம்; எளிதாக காப்பாற்றலாம். லிச்சிப் பழங்களை சாப்பிட்டு விட்டு இரவில் உணவு எடுத்துக் கொள்ளாமல் படுக்கைச் செல்வதை தடுக்க வேண்டும். டாக்டர் ஜேகப் ஜானின் இந்தப் பரிந்துரைகளை கடைபிடித்து 2015 முதல் இதன் காரணமான மரணங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு சிகிச்சை உண்டா?
ஆம், ஹைபோகிளைசீமிக் என்செபலோபதியை எளிதில் குணப்படுத்தலாம். முழு குணப்படுத்த முடியும். அதாவது இந்த நோய் தாக்கிய பிறகு 4 மணி நேரத்துக்குள் 10% டெக்ஸ்ட்ரோஸ் சலைன் ஏற்ற வேண்டும். இதைச் செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு அமினோ அமிலங்கள் உருவாவதையும் தடுக்கும்.
10% டெக்ஸ்ட்ரோஸுடன் 3% சலைன் சொல்யூஷனும் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் மூளை செல்களின் வீக்கம் தவிர்க்கப்படும்.
பொதுவாக 5% டெக்ஸ்ட்ரோஸ் அளிக்கப்படும் நடைமுறையில் சிக்கல் என்னவெனில் சர்க்கரை அளவு பராமரிக்கப் பட்டாலும் அமினோ அமிலங்களின் உற்பத்தியைத் தடுக்க முடியாமல் போகும். ஆகவே குழ்ந்தைகள் மரணம் தடுக்கப்பட்டாலும் மூளை சேதமடைவதை தடுக்க முடியாது, ஆகவே 10% டெக்ஸ்ட்ரோஸ் அவசியம்.
ஹைபோகிளைசீமிக் என்செபலோபதி நோய் தாக்கி 4 மணி நேரத்துக்குள் டெக்ஸ்ட்ரோஸ் செலுத்தப்படவில்லையெனில் மூளைச் செல்கள் செத்து விடும். இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்க்கூறுகள் தோன்றும். மூளைச் சேதம், பேச்சுக் குறைபாடு, மனநல பாதிப்பு, சதை இறுக்கம்/பலவீனம் ஆகியவை ஏற்படும், அதாவது இதற்குப் பிறகும் உயிரோடு இருக்க நேரிட்டால் மேற்கண்ட குறைபாடுடன் வாழ நேரிடும்.
மூலம் : தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ்
தமிழில்: இரா.முத்துக்குமார்
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago