Published on : 30 May 2023 08:09 am

‘சாம்பியன்’ தோனி படையின் கொண்டாட்ட தருணங்கள் - போட்டோ ஸ்டோரி

Published on : 30 May 2023 08:09 am

1 / 42
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
2 / 42
முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.
3 / 42
முன்னதாக, தொடக்க வீரரான ரித்திமான் சாஹா 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 20 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் தோனியின் மின்னல் வேக செயல்பாட்டினால் ஸ்டெம்பிங் ஆனார். ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
4 / 42
215 ரன்கள் இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்கியது. மொகமது ஷமி 3 பந்துகளை வீசிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சிஎஸ்கே 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்திருந்தது.
5 / 42
மழை நின்ற பின்னர் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி 12.10 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவித்தனர். மேலும் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கை மாற்றி அமைத்தனர். இலக்கை நோக்கிய விளையாடிய சிஎஸ்கே விரைவாக ரன்கள் சேர்த்தது.
6 / 42
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் டேவன் கான்வே 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் சேர்த்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தனர். இதைடுத்து களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் விளாசி மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
7 / 42
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்தது. ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்களை பறக்கவிட 15 ரன்கள் கிடைக்கப்பெற்றது. மோஹித் சர்மாவின் அடுத்த ஓவரை அம்பதி ராயுடு பதம்பார்த்தார். 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசிய அம்பதி ராயுடு 4-வது பந்தில் மோஹித் சர்மாவிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 8 பந்துகளை சந்தித்த அம்பதி ராயுடு 19 ரன்கள் சேர்த்தார்.
8 / 42
வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே ரன் எதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜடேஜா களமிறங்கினார். 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மொகமது ஷமி வீசிய 14-வது ஓவரில் 8 ரன்களே சேர்க்கப்பட்டது. மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது.
9 / 42
முதல் பந்தை ஷிவம் துபே வீணடித்தார். அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட அழுத்தம் அதிகரித்தது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது.
10 / 42
கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில், 15 ரன்களும் ஷிவம் துபே 21 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
11 / 42
கடைசி பந்து வரை த்ரில் ஆக சென்ற ஆட்டத்தால் கடைசி பந்தில் என்ன நடந்தது என்பதை தோனி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார்.
12 / 42
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே அணி. மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது.
13 / 42
வெற்றிக்குப் பின் பேசிய ரவீந்திர ஜடேஜா, “எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த மக்களில் பலர் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர். சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும்” என்றார்.
14 / 42
மேலும், “இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆம், எதுவும் நடக்கலாம். மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர். ஸ்லோ யார்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன். இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ, அதை தொடருங்கள்” என்று மகிழ்ச்சி பொங்க பேசினார்.
15 / 42
வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, “சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்” என்று பேச்சை தொடங்கினார்.
16 / 42
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, “வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து சாதாரணமாக எந்தவிதமான உணர்ச்சியும் வெளிப்படாது. இதற்கு முன் சென்னையில் ஒருமுறை உங்களிடம் பேசும்போது முதல்முறையாக ரசிகர்களை பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டதை பார்த்தேன்” எனக் கேள்வி எழுப்பினார்.
17 / 42
அதற்கு பதிலளித்த தோனி, “ஒரு உண்மை, இது எனது கரியரின் கடைசி கட்டம். இந்த சீஸனின் முதல் போட்டி இங்குதான் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் விளையாடும்போது மொத்த மைதானமும் எனது பெயரை உச்சரிக்கும் போது என் கண்களில் நீர் நிறைந்தது. என்னை அமைதிப்படுத்திக்கொள்ள டக் அவுட்டில் சிறிது நேரம் உட்கார்ந்துபோது இதை அழுத்தமாக இல்லாமல், இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இதேதான் சென்னையிலும் கடைசி போட்டியில் நடந்தது. இதெல்லாம் மீண்டும் நடக்கும், மீண்டும் போட்டிகளில் விளையாடலாம் என நினைக்கிறேன். எதுவானாலும் நடக்கலாம்” என்றார் தோனி.
18 / 42
மேலும், “நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐபிஎல் மாதிரியான ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே மைதானத்தில் விளையாடுவதை போல் உணர்கிறார்கள். அதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட தங்களை என்னுள் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் என்பதே இத்தனை அன்புக்கான காரணம் என நான் நினைக்கிறேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளவில்லை. நான் இப்படி இல்லை என்பதை இல்லாத ஒன்றை சித்தரிக்கவும் முயற்சிக்கவில்லை. அனைத்தும் எளிமையாக வைத்திருக்க பார்க்கிறேன்” என்றார் தோனி.
19 / 42
அத்துடன் “நாங்கள் வென்ற ஒவ்வொரு கோப்பையும் சிறப்பு மிகுந்ததே. ஆனால் ஐபிஎல்லின் சிறப்பு என்னவென்றால், நெருக்கடியான அனைத்து ஆட்டங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே. இன்றைய ஆட்டத்தில் சறுக்கல்கள் இருந்தன. எங்களின் பவுலிங் எடுபடவில்லை. பேட்டிங் சிறப்பாக அமைந்து, பவுலர்களின் அழுத்தத்தை குறைத்தது” என்றார் தோனி.
20 / 42
“சில நேரங்களில் நானும் எரிச்சல், விரக்தி அடைவது உண்டு. அது மனித உணர்வு. ஆனால், மற்றவர்கள் நிலையிலிருந்து என்ன மாதிரியான அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தது என யோசிக்க முயற்சிப்பேன். அதனால், பல நேரங்களில் அமைதியாக கடந்துவிடுவதுண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் அழுத்தத்தை வித்தியாசமாக கையாள்கின்றனர். ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் பலரும் அணியில் இருப்பதால் இளம் வீரர்கள் அவர்களிடம் எப்போதும் மனம் விட்டுப் பேச முடியும்” என்று உணர்ச்சி மிகுதி, ரசிகர்கள் அன்பு, அழுத்தம் தொடர்பாக விரிவாகப் பேசினார் தோனி.
21 / 42
22 / 42
23 / 42
24 / 42
25 / 42
26 / 42
27 / 42
28 / 42
29 / 42
30 / 42
31 / 42
32 / 42
33 / 42
34 / 42
35 / 42
36 / 42
37 / 42
38 / 42
39 / 42
40 / 42
41 / 42
42 / 42

Recently Added

More From This Category

x