1 / 23
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.
2 / 23
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று - 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.
3 / 23
தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே நிலையான தொடக்கம் கொடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்ததார். அஜிங்க்ய ரஹானே 10 பந்துகளில், 17 ரன்கள் எடுத்தார். நிதானமாக பேட் செய்த டேவன் கான்வே 34 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு 9 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன், 22 ரன்கள் எடுத்தார்.
4 / 23
கேப்டன் தோனி 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். மொயின் அலி 4 பந்துகளில் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
5 / 23
173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ரித்திமான் சாஹா 12 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னில் தீக்சனா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தசன் ஷனகா (17), டேவிட் மில்லர் (4) ஆகியோரை ஜடேஜா வெளியேற்றினார். நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையை நோக்கிய விளாசிய போது டேவன் கான்வேயிடம் கேட்ச் ஆனது.
6 / 23
ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. 36 பந்துகளில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா களத்தில் இருந்தனர். தீக்சனா வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் டெவாட்டியா (3), ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து ரஷித் கான் களமிறங்கினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன. பதிரனா வீசிய அடுத்த ஓவரில் ரஷித் கான் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்ட 13 ரன்கள் கிடைத்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 17-வது ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸரையும் ரஷித் கான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும் விளாச குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைக்கப்பெற்றன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது.
7 / 23
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவையாக இருந்தன. பதிரனா விசிய 18வது ஓவரின் 3-வது பந்தில் விஜய் சங்கர் (14) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் தர்ஷன் நல்கண்டே (0) ரன் அவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 4 ரன்களை மட்டுமே வழங்கினார். இது திருப்புமுனையாக அமைந்தது.
8 / 23
12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்பதால் குஜராத் அணிக்கு அழுத்தம் அதிகமானது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித் கான் 3வது பந்தை டீப் பாயிண்ட் திசையில் அடித்த போது டேவன் கான்வேயிடம் கேட்ச் ஆனது. ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஷமி பவுண்டரி அடிக்க இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன.
9 / 23
பதிரான வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்கப்ப்டட நிலையில் கடைசி பந்தில் மொகமது ஷமி (5) ஆட்டமிழந்தார். முடிவில் 20 ஓவர்களில் குஜராத் அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. நூர் அகமது 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
10 / 23
15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் அணி வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2வது ஆட்டத்தில் பங்கேற்கும். இதில் வெற்றி பெற்றால் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே தரப்பில் தீபக் சாஹர், தீக்சனா, ஜடேஜா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
11 / 23
5-வது கோப்பையை நோக்கி... சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 10-வது முறையாகும். இதற்கு முன்னர் 9 முறை இறுதிப் போட்டியில் பங்கேற்று 4 முறை வாகை சூடியிருந்தது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. தற்போது 5-வது கோப்பையை நோக்கி சிஎஸ்கே பயணிக்க தொடங்கியுள்ளது.
12 / 23
பதிரனாவால் நின்ற ஆட்டம்: 16வது ஓவரை மதீஷா பதிரனா வீச வந்த போது நடுவர், அவரை தடுத்து நிறுத்தினார். அவர், 9 நிமிடங்கள் களத்திற்கு வெளியே சென்றுவிட்டு உடனடியாக பந்து வீச வந்ததாகவும் அதே நிமிடங்களில் அவர், களத்தில் செலவிட்ட பின்னர்தான் பந்து வீச முடியும் என நடுவர் தெரிவித்தார். இதுதொடர்பாக தோனி, நடுவரிடம் பேசினார். இதனால் சுமார் 5 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஒரு வழியாக பதிரனாவை பந்து வீச நடுவர் அனுமதித்தார்.
13 / 23
ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள்.. - ஐபிஎல் பிளே ஆஃப் ஆட்டங்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியன. இந்த ஆட்டத்தையொட்டி பசுமை விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக பிசிசிஐ சிறப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இதன்படி பிளே ஆஃப் சுற்றில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும். இந்த வகையில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 84 டாட் பந்துகள் வீசப்பட்டிருந்தன. குஜராத் அணி 34 டாட் பந்துகளையும், சிஎஸ்கே 50 டாட் பந்துகளையும் வீசியிருந்தது. இந்த ஆட்டத்தின் வாயிலாக 42,000 ஆயிரம் மரக்கன்றுகள் பிசிசிஐ சார்பில் நடப்படும்.
14 / 23
தப்பித்த ருதுராஜ்: ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்களில் இருந்த போது தர்ஷன் நல்கண்டே பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்தார். குஜராத் அணியினர் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்குள் இது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் ருதுராஜ் சிக்ஸரையும் அடுத்த பந்தில் பவுண்டரியையும் விரட்டி நல்ல ரிதமுக்கு வந்தார்.
15 / 23
ஜடேஜா 150: நேற்றைய ஆட்டத்தில் தசன் ஷனகாவின் விக்கெட்டை சிஎஸ்கேவின் ஜடேஜா கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் ஜடேஜாவுக்கு இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. மேலும் பேட்டிங்கில் ஆயிரம் ரன்களுக்கு மேலும், பந்து வீச்சில் 150 விக்கெட்களையும் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜடேஜா. பேட்டிங்கில் ஜடேஜா 2,677 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் டுவைன் பிராவோ 1,560 ரன்களையும் 183 விக்கெட்களையும் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். சுனில் நரேன் 1,046 ரன்கள், 163 விக்கெட்களை எடுத்துள்ளார்.
16 / 23
முதன்முறையாக நல்கண்டே... - இந்த சீசனில் முதன்முறையாக குஜராத் அணிக்காக களமிறங்கிய மிதவேகப்பந்து வீச்சாளர் தர்ஷன் நல்கண்டே, மொகமது ஷமியுடன் புதிய பந்தை பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் வரலாற்றின் பிளே ஆஃப் சுற்றில் இதுபோன்று நிகழ்வது 4-வது முறையாகும்.
17 / 23
வெற்றிக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, "இது மற்றொரு இறுதிப் போட்டி என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஐபிஎல் இப்போது மிகப்பெரிய தொடர். முன்புகூட 8 அணிகள், இப்போது 10 அணிகள். எனவே இதை சாதாரணமாக இன்னொரு இறுதிப் போட்டி என்று நான் சொல்லமாட்டேன். 2 மாத கடின உழைப்பு இதில் உண்டு. அனைவருக்கும் பங்களிப்பு உண்டு” என்றார்.
18 / 23
“குஜராத் டைட்டன்ஸ் ஒரு அற்புதமான அணி. அவர்களும் நன்றாகவே சேஸ் செய்தார்கள். மைதானத்தின் சூழல்கள் நன்றாக இருந்தால் ஜடேஜாவுக்கு உதவும் என்று நினைத்தேன். அப்படியான சூழல் வாய்க்கும் பட்சத்தில் ஜடேஜாவின் பந்துகளை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அதேபோல் நடந்தது. அவரின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது” என்றார் தோனி.
19 / 23
மேலும், “வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றும் முயற்சித்தோம். முடிந்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை கண்டுபிடிக்க ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். தங்கள் பந்துவீச்சின் செறிவைத் தொடர்ந்து தேடுங்கள் என்பதே இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை. பிராவோ போன்ற உதவியாளர்கள் இந்த விஷயத்தில் பக்க பலமாக உள்ளனர்” என்றார் தோனி.
20 / 23
“பீல்டிங் செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டன்தான் என்று நினைக்கிறேன். என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டே நான் செயல்படுகிறேன். பீல்டிங் செய்பவர்கள் என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன். கேட்சை தவறவிட்டால் என்னிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. அப்போதும் பீல்டர்கள் என் மீது ஒரு கண் வைத்து கொள்ள சொல்வேன்" என்று தோனி கூறினார்.
21 / 23
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று தோனியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, "அது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதை முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை எடுக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும்சொல்கிறேன். மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன்" என்று தோனி உறுதிபட கூறினார். | படங்கள்: ஆர்.ரகு
22 / 23
23 / 23