1 / 7
தஞ்சாவூரில் 89-வது ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. | தகவல்கள்: வி.சுந்தர்ராஜ் | படங்கள்: ஆர். வெங்கடேஷ்
2 / 7
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் தொடர்ந்து 89-ஆம் ஆண்டாக இந்த விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில், வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடைபெற்றது.
3 / 7
இதைத்தொடர்ந்து, 24 கருட சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 24 கோயில் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி அந்தந்த கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு, கொடி மரத்து மூலைக்கு 7 மணியளவில் சென்றடைந்தனர்.
4 / 7
அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், அதைத் தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்ம பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கொண்டிராஜபாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், அய்யன்கடைத் தெரு பஜார் ராமசுவாமி...
5 / 7
எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், மேல வீதி விஜயராம பெருமாள், நவநீத கிருஷ்ணன், சகாநாயக்கன் தெரு ஸ்ரீ பூலோககிருஷ்ணன்...
6 / 7
மகர்நோன்புசாவடி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், நவநீதகிருஷ்ணசாமி, கொள்ளுபேட்டைத் தெரு வேணுகோபால சுவாமி, பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணப் பெருமாள், கரந்தை வாணியத் தெரு படித்துறை வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் வரிசையாகக் கருட வாகனங்களிலும் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வலம் சென்றனர்.
7 / 7
ஒரே இடத்தில் எழுந்தருளிய 24 கோயில் பெருமாள்களை ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். பின்னர், கொடி மரத்து மூலைக்குச் சென்று, அந்தந்த கோயில்களுக்குச் சென்றடைந்தனர்.
மூன்றாவது நாளான சனிக்கிழமை (ஜூன் 10) காலை 6 மணிக்கு நவநீத சேவை விழா நடைபெறவுள்ளது. இதில், 15 கோயில் பெருமாள்கள் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் செல்லும் வைபவம் நடைபெறும். இந்த விழா ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் நிறைவடைகிறது.