Published on : 09 Apr 2025 15:28 pm
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
குமரி அனந்தன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்து சட்டப்பேரவை உறுப்பினர்களை மவுன அஞ்சலி செலுத்தக் கோரினார். அதன்படி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குமரி அனந்தன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசி ஆறுதல் கூறினார்.
இதனிடையே, “தமிழே தன் மூச்செனத் தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வைகோ, வி.கே.சசிகலா, தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.