Published on : 19 Dec 2022 19:26 pm

பரந்தூரில் வலுக்கும் 13 கிராம மக்களின் போராட்டம் - போட்டோ ஸ்டோரி

Published on : 19 Dec 2022 19:26 pm

1 / 11
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. | படங்கள்: வேளாங்கன்னி ராஜ்
2 / 11
சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலைய திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடந்த 145 நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 / 11
ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 13 கிராம மக்கள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பினர் நடைபயண பேரணியை திங்கள்கிழமை (டிச.19) மேற்கொண்டனர். இந்த பேரணியின்போது கிராம மக்கள் கையில் கருப்புக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றனர்.
4 / 11
போலீஸ் பாதுகாப்பு: இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியின்போது மாவட்ட எஸ்பி சுதாகர், கோட்டாட்சியர் சரவண கண்ணன், டிஎஸ்பி சுனில் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், நாளை (டிச.20) காலை அமைச்சர்களை சந்தித்துப் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.
5 / 11
போராட்டக்குழு உறுப்பினர் கதிரேசன் என்பவர் கூறியது: "முதல்வரைச் சந்தித்து எங்கள் ஊரை இந்த திட்டத்தில் இருந்து விடுவிக்க கோரியும், இந்த இடத்தில் விமான நிலையம் வேண்டாம் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. ஏற்கெனவே அமைச்சர்களிடம் இதுகுறித்து கூறிவிட்டோம்.”
6 / 11
“இருந்தாலும் மறுபடியும் அழைப்பு விடுக்கும்போது போய்த்தானே ஆக வேண்டும். ஏனென்றால், ஏகனாதபுரம் கிராமம் தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. எங்கள் போராட்டத்திற்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, இயக்கங்களோ பின்னணியில் இல்லை. இது மக்களின் போராட்டம். இந்தப் போராட்டம் மேலும் வலு பெறும்” என்றார் போராட்டக்குழு உறுப்பினர் கதிரேசன்.
7 / 11
கோவைக்கு என்ன வேறு முதல்வரா? - “அன்னூருக்கு என்ன முடிவோ, அந்த முடிவு பரந்தூருக்கும் வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை கோரிக்கைதான். அவ்வாறு முடிவு இல்லாதபட்சத்தில் எங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே நாங்கள் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு செல்வோம், எங்களது கோரிக்கையை இன்னும் வலுவாக சொல்வோம்" என்று போராட்டக்குழு உறுப்பினர் கதிரேசன் தெரிவித்தார்.
8 / 11
வலுக்கும் போராட்டத்தின் எதிரொலியாக, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நாளை (டிச.20) ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
9 / 11
அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழுவினர், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு இந்தப் பிரச்சினை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
10 / 11
இதனிடையே, "அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 / 11
"பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும்" என்று சீமான் சாடியுள்ளார்.

Recently Added

More From This Category

x