Published on : 17 Dec 2022 17:48 pm

பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிராக பாஜக போராட்டம் - போட்டோ ஸ்டோரி

Published on : 17 Dec 2022 17:48 pm

1 / 16
பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: ஜி.என்.ராவ், சந்தீப் சக்சேனா, நிசார் அஹமத், சிவகுமார் புஷ்பாகர்.
2 / 16
நியூயார்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
3 / 16
பயங்கரவாதி ஒசோமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு; பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு என சாடினார். அந்த நாடு இந்தியா குறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது என்று எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
4 / 16
பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியது என்ன? - ஜெய்சங்கரின் பேச்சை அடுத்து, நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு அவை செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார்.
5 / 16
"ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததாக நீங்கள் (ஜெய்சங்கர்) கூறுகிறீர்கள். அவர் இறந்துவிட்டார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைகாரர் இன்னமும் உயிரோடு இருக்கிறார். தற்போது அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்” என்றார் பிலாவல்.
6 / 16
மேலும், “அமெரிக்காவில் நுழைய அவருக்கு (நரேந்திர மோடிக்கு) தடை விதிக்கப்பட்டது. ஹிட்லரின் பாதையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவின் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும்" என பிலாவல் பேசினார்.
7 / 16
நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் சனிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
8 / 16
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
9 / 16
முன்னதாக, பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு வெளியுறவுத் துறை சார்பில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார்” என்றார்.
10 / 16
“பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு அது. லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நாவால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான்” என்றார் அரிந்தம் பக்சி.
11 / 16
மேலும், “ஐ.நாவால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என அரிந்தம் பக்சி தனது கண்டன உரையில் அவர் குறிப்பிட்டார்.
12 / 16
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வரான இவர் மேலும் கூறும்போது, “பிலாவல் பூட்டோவின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும். நமது பிரதமரைப் பார்த்து அவ்வாறு பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாம் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், இது நமது நாட்டைப் பற்றியது; நமது பிரதமரைப் பற்றியது. நரேந்திர மோடி நமது பிரதமர்” என்று தெரிவித்துள்ளார்.
13 / 16
பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன? - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
14 / 16
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், "குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த படுகொலை குறித்த உண்மைகளை மறைக்க இந்திய அரசு முயல்கிறது. இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் நீதியிலிருந்து தப்பி, இப்போது இந்தியாவில் முக்கிய அரசுப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பதே உண்மை” என்றார்.
15 / 16
மும்தாஜ் ஜாரா பலூச் மேலும் கூறுகையில், “இந்தியாவின் ஆளும் கட்சியின் அரசியல் சித்தாந்தமான இந்துத்துவா, வெறுப்பு, பிரிவினை போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் நோக்கில் தவறு இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இது குறித்துதான் பிலாவல் பேசி உள்ளார்” என்றார்.
16 / 16
மேலும், “பிலாவலுக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இத்தகைய போராட்டங்களை இந்தியா நடத்தியுள்ளது" என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் தெரிவித்துள்ளார்.

Recently Added

More From This Category

x