1 / 15
டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் என பல வட இந்திய பகுதிகளில் அதி கனமழை நீடித்து வருகிறது. அங்கு மூன்றாவது நாளாக மழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை பல இடங்களில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலில் மட்டும் 17 பேர் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக இதுவரை 28 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 / 15
இமாச்சலப் பிரதேசம்: பருவமழையினால் கடந்த சில நாட்களில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அமைந்துள்ள சாலைகள், மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் மற்றும் நீர் விநியோக திட்டங்கள் என பெரிய அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தோராயமாக ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையில் இந்த சேதம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
3 / 15
இமாச்சலின் குலு மாவட்டத்தின் லஹுல் - ஸ்பித்தி பகுதியில் சிக்கியுள்ள 300 பேரை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சீரான வானிலை நிலவினால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஸ்ரீகாந்த் மகாதேவ் யாத்திரையின் எஞ்சியுள்ள நடப்பு சீசன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
4 / 15
பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 113 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மண்டி நிர்வாகம் மாற்றியுள்ளது. மணாலியில் சிக்கித் தவித்த சுமார் 29 பேர் காலை 8 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 8 பேரை தேடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 / 15
கடந்த ஜூன் 24 முதல் நடப்பு ஆண்டுக்கான பருவமழையினால் சுமார் 54 பேர் மழை பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். அதோடு கால்நடைகள், சாலைகள், வாகனங்கள், வீடு மற்றும் வணிக கூடங்களும் சேதமடைந்துள்ளன. இமாச்சலில் அதி தீவிர மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாத காலம் பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 / 15
அந்த மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ள காரணத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பாயும் மூன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவில் யமுனை மற்றும் கக்கர் ஆறுகளில் தண்ணீர் அபாய கட்டத்தை கடந்து செல்கிறது.
7 / 15
பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகள், ரயில் தடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக மொகாலி, அனந்த்பூர் சாஹிப், பதன்கோட், ரூப்நகர், நாவன்ஷார் பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. இந்த இடங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்.
8 / 15
ராணுவ உதவியை நாடும் பஞ்சாப், ஹரியாணா: மழை வெள்ளத்தில் சிக்கிய சுமார் 50 பேரும், தனியார் பல்கலைக்கழகத்தின் 910 மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபெரோஸ்பூர் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
9 / 15
மூத்த அதிகாரிகளுடன் ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அம்பாலா மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் 493 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதனால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாண்டவாலா பகுதியில் பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் ஆறுகளில் நீர் அபாய கட்டத்தை கடந்து பாய்கிறது. மீட்பு பணிகளுக்கு ராணுவத்தின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
10 / 15
டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை: வார விடுமுறையின் போது பதிவான மழை காரணமாக தலைநகர் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அவசியம் இல்லாமல் வெளியேற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் நீர் சூழந்த காரணத்தால் சிலர் ரப்பர் படகுகளில் செல்வதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
11 / 15
பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளம்: இந்த மூன்று மாநிலங்களின் வீதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12 / 15
பருவமழையின் போது பதிவாகும் சராசரி மழை அளவை காட்டிலும் டெல்லியில் 112 சதவீதம், பஞ்சாப் மாநிலத்தில் 100 சதவீதம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 70 சதவீதமும் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 / 15
ராஜஸ்தானின் அஜ்மீரை சூழ்ந்த மழைநீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் மழை தொடரும் காரணத்தால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் அதிகளவில் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிகர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதியன்று திறந்த நிலையில் இருந்த வடிகாலில் விழுந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. ‘மழை வெப்பத்தை போக்கியது. இருந்தாலும் மழைநீர் தேங்கும் காரணத்தால் செய்வதறியாது தவிக்கிறோம்’ என அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
14 / 15
கடந்த 7-ம் தேதி அன்று அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு வட இந்தியாவில் கனமழை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதோடு மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
15 / 15
பிரதமர் ஆய்வு: வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு, நிலைமையை ஆய்வு செய்தார். இது குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில், “நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகங்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் அணிகள் பணியாற்றுகின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.