Published on : 06 May 2020 22:12 pm

பேசும் படங்கள்... (06.05.2020)

Published on : 06 May 2020 22:12 pm

1 / 8
வாழ்க காவல் துறை: சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் அனைவரையும் அச்சமூட்டி வருகிறது. ஆனாலும் போலீஸாரும், மருத்துவர்களும், செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தன்னலம் மறந்து அயராது அல்லும்பகலும் நமக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் போக்குவரத்து போலீஸார் ஒருவர் உடல் முழுக்க தற்காப்பு கவச உடை அணிந்து பாதுகாப்புடன் தனது பணியினை தொடர்ந்தார். படம்: எல்.சீனிவாசன்
2 / 8
மேம்பாலப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: கரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த 45 நாட்களுக்குப் பிறகு... கடந்த மே 4-ம் தேதியில் இருந்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் இதுவரையில் தடைப்பட்டிருந்த பொதுப்பணித் துறை வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. நீண்ட காலமாக நடந்து வரும் வண்டலூர் மேம்பாலப் பணிகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளது. படம்: எம்.முத்து கணேஷ்
3 / 8
போதைக்கும் தயாராகும் ஊர்காய்: தமிழகத்தில் இன்று முதல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற ஊர்களில் ’டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. சென்னையை அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இன்று திறக்கப்படவுள்ள ’டாஸ்மாக்’ மதுபானக் கடையில் வந்திறங்கும் மது பாட்டில்களை சமூக இடைவெளி(?)யுடன் சுமந்து செல்லும் தொழிலாளர்கள். படங்கள்:எம்.முத்து கணேஷ்
4 / 8
இந்தப் படத்தை பார்க்கும் நீங்கள் - ‘பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப் பிடித்து தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக... அந்தக் கடைகளின் முன்னால் ஊழியர்கள் கட்டங்களை வரைகின்றனர்’ என்று நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அரசு உத்தரவின்படி கோவையில் நாளை முதல் (7.5.2020 ) ’டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதையொட்டி... காந்திபுரம் பகுதியில் உள்ள மதுக்கடை முன்னால் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைப் பிடித்து மது பாட்டில்கள் வாங்குவதற்குத்தான் இவ்வளவு அமர்க்களமும் படம்: ஜெ.மனோகரன்
5 / 8
சாவி வேண்டுமா சார்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க - அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவுக்கு இடையில் சில கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 45 நாட்களாக வீடடங்கியிருந்த பலர் பல்வேறு காரணங்களுக்காக - வீட்டில் இருந்து தங்கள் வாகனங்களில் வெளியேற தொடங்கியுள்ளனர். இத்தனை நாட்கள் வீடடங்கியிருந்த பலர் தங்கள் வாகனங்களின் சாவிகளைக் காணடித்திருக்கலாம்... என்பதால் அவர்களுக்கு உதவும் வகையிலும்... தன்னுடைய வாழ்வாதாரத்துக்காகவும் - கோவை விளாங்குறிச்சிப் பகுதியில் சாவிக் கடையை திறந்து வைத்திருக்கும் வியாபாரி ஒருவர். படம்: ஜெ.மனோகரன்
6 / 8
நுங்கு இங்கு: இது கோடைக்காலம். எங்கும் வெய்யிலின் தீண்டல். நாளுக்கு நாள் டாப் கியரில் வெப்பம் எகிற ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு, வீடடங்கு எல்லாம் இயற்கைக்குத் தெரியுமா என்ன? அதன் தீவிரத்தை அது காட்டிக்கொண்டே இருக்கிறது. தகிக்கும் கோடை தாகத்தையும் உஷ்ணத்தையும் தனிக்க.... சென்னை வீதியோரங்களில் நுங்கு விற்பதை தலை நீட்ட ஆரம்பித்துள்ளது. இடம்: சென்னை - கொரட்டூர். படம்: எல் .சீனிவாசன்
7 / 8
ஜெ... வீடு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடான ‘வேதா இல்லத்தை’ கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் - சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. படம்: எல்.சீனிவாசன்
8 / 8
பஸ்கி... விஸ்கி: இன்று கோலாகலமாக மீண்டும் திறக்கப்படவுள்ள மதுரை செல்லூரில் உள்ள ஒரு ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைக்கு விஜயம் செய்யவிருக்கும் அப்பாவி குடிமகன்களுக்கும், போதை மேதைகளுக்கும், வேட்டியுருவிகளுக்கும், குவார்ட்டர் குரூப்களுக்கும், பீர் பிசாசுகளுக்கும் இந்த ‘கோவிட் - 19' வைரஸ் தொற்றி அவர்களின் ’புனிதப் பயணம்’ கெட்டுவிடக் கூடாதே என்கிற அக்கறையில்... மதுரை - மாநகராட்சியின் துப்புரவுத் தோழர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x