பேசும் படங்கள்... (04.05.2020)
Published on : 04 May 2020 22:20 pm
1 / 5
பாதை மூடியாச்சு:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து பொது இடங்களிலும் அரசு அலுவலங்கங்களிலும் பொது மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க பல இடங்களில் தடுப்புகள் போடப்பட்டு, பொதுமக்கள் வராமல் பாதுக்காக்கப்படுகின்றன. இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் செல்லும் பாதை முற்றிலும் போலீஸாரால் மூடப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு கோரிக்கைகளுடனும், புகார் மனுக்களுடனும் செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டதாக தெரிய வந்தது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 5
மீண்டும் என் தொட்டிலுக்கு: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் இருந்த 45 நாட்களுக்குப் பிறகு, இந்த ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.
இதனடிப்படையில் சில வியாபாரிகள் மற்றும் சில அடிப்படைத் தொழிலாளர்கள் நேற்று முதல் தங்களது வியாபாரத்தையும் தொழில்களையும் மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து நெல்லை - பாளையங்கோட்டைப் பகுதியில் 45 நாட்களுக்குப் பின்னர் தற்போது தனது வேலையை தொடங்கியுள்ளார் தச்சுத் தொழிலாளி மாரியப்பன். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்... மீண்டும் தொழிலை தொடங்கியுள்ள மாரியப்பனின் முகத்தில்தான் அப்படி ஓர் ஆனந்தம்.
படம்: மு.லெட்சுமி அருண்
3 / 5
அனுமதி கிடக்குமா: நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக எல்லா தொழிலும் முடங்கி எந்த வேலையும் இல்லாத நிலையில்... தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவந்த வட மாநிலத் தொழிலாளார்கள் சிலர், பல்வேறு காரணங்களைக் கூறி சொந்த ஊருக்கு செல்ல அனுமதிப் பெறுவதற்காக நேற்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால், அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் மற்றும் படம்: ம.பிரபு
4 / 5
ஓட்டுநர்களுக்கு பரிசோதனை: கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிக மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் - சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரி ஓட்டுநர் மற்றும் லோடுமேன்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என புதுச்சேரி மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
படம்: .எம்.சாம்ராஜ்
5 / 5
ஆனந்தம் பாதி... அச்சம் மீதி:
45 நாட்கள் தொடர்ந்து கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) முதல் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சேலம் நகரத்தில் அரசு அனுமதித்திருந்த சில கடைகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இன்று சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக பொது மக்கள் வெளியே செல்ல தொடங்கினர். எனவே, இன்று சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 45 நாட்களுக்குப் பிறகு வெளி உலகை காணும் ஆனந்தம் ஒரு பக்கமிருந்தாலும்... சமூக இடைவெளியை மதிக்காமல் இப்படி கூடும் மக்களால் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகளவில் பரவிவிடுமோ என்பதும் பெரும்பாலானோரின் அச்சமாக உள்ளது.
படம்: எஸ்.குரு பிரசாத்