தமிழக அரசின் அதிரடி மசோதா முதல் ‘எல் அண்ட் டி’ தலைவர் சர்ச்சை வரை | டாப் 10 செய்திகள்
Published on : 10 Jan 2025 17:43 pm
1 / 10
‘பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை’ - சிறுமிகள் உட்பட 18 வயதுக்குட்பட்ட வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கவும், பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வகை செய்யக் கூடிய இரண்டு சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த இரு சட்டத் திருத்த மசோதா மீதும் சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும்.
2 / 10
‘சென்னையில் கடலில் மேம்பாலம்’ - மும்பையின் அடல் சேது பாலம் போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைக்கவும், திருவான்மியூர் முதல் அக்கரை வரை மேம்பாலம் அமைக்கவும் ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
3 / 10
கருணாநிதி நினைவிடம் வந்த பரந்தூர் மக்கள் கைது: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களது தொள்ளாயிரமாவது நாள் போராட்டமாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்க புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தங்களுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திடம் அவர்கள் மனு அளித்தனர்.
4 / 10
‘மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடல்’ - தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5 / 10
மின் வாரிய நஷ்டம் - அன்புமணி கேள்வி: மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6 / 10
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ‘ரங்கா... ரங்கா...’ கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
7 / 10
“அறிவிலிகளைப் புறக்கணிப்போம்” - துரைமுருகன்: தமிழ் இனத்துக்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம்.
எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்” என்று தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
8 / 10
சீமான் மீது பெ.சண்முகம் காட்டம்: “இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாக கண்டிப்பதுடன், தனது அநாகரிகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
9 / 10
‘பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவோம்’ - “தமிழகத்தில் சங்பரிவார்கள் வேரூன்றுவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் என்பதால், சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு, பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்க வேண்டுமென்னும் கிரிமினல் உத்தியை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.
ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதலை தொடுத்துள்ள சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
10 / 10
‘வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை...’ கருத்தும் சர்ச்சையும்: ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.
“ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என ஊழியர்கள் மத்தியில் பேசியபோது எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்தார்.
எல் அண்ட் டி தலைவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். எவ்வளவு நேரம்தான் மனைவியும் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? வாருங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்கள்” என்று கூறியதும் சர்ச்சையை வலுப்படுத்தியது.
அவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, “பெண் வெறுப்போடு இருப்பதோடு மட்டும் இல்லாமல், இந்தக் கூற்று இந்தியாவின் புதிய யுக அடிமைத் தனத்தை அரங்கேற்ற விரும்புவதையே குறிக்கிறது” என்று சாடியுள்ளார்.