Published on : 09 Jan 2025 18:26 pm

திருப்பதி துயரம் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ வரை | டாப் 10 செய்திகள்

Published on : 09 Jan 2025 18:26 pm

1 / 10

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு, 30+ காயம்: ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் வியாழக்கிழமை காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2 / 10

உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம்: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

3 / 10

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம்: பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த அந்தத் தீர்மானத்தில், “பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல; தமிழகத்தின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

4 / 10

முதல்வரின் தனி தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு: சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “யுஜிசி வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மாநில அரசுக்கு பிப்ரவரி 5-ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நீக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். அதற்குள்ளாக தீர்மானம் கொண்டு வருவது சரியானதல்ல என்பதால் வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தார்.

5 / 10

முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை: பொங்கல் திருநாளையொட்டி 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகையை வியாழக்கிழமையே வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது.

6 / 10

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் தொடக்கம்: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதனிடையே, பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக வெள்ளிக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும், என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

7 / 10

சீமானுக்கு எதிராக மறியலால் பரபரப்பு: பெரியார் பற்றி சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி, அவரைச் சந்திக்க புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சி கொடிகளை பிய்த்து எறிந்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் வந்ததால் தகராறு ஏற்படும் சூழல் உருவானது. இரு தரப்பையும் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனிடையே, “பெரியார் பற்றி பேசியதற்கு என்னிடம் சான்று கேட்டு நிற்கும் பெரியார் இயக்கத்தினர், பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக என்ன போராட்டம் நடத்தினார்கள்? திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

8 / 10

“சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” - “தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஓர் ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

9 / 10

உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தற்போது எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என  தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

10 / 10

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ - பெரும் சேதம்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். வியாழக்கிழமை வரை 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளை இழந்துள்ளனர். பசிபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் காட்டுத் தீ முதன்முதலில் ஏற்பட்டுள்ளது.

பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு காற்றின் வேகத்தால் இந்த காட்டுத்தீ மளமளவென பரவியுள்ளது. குறிப்பாக, பலிசடேஸ், சைல்மர், ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். 24 மணி நேர உதவி மையங்களும் இதற்காக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recently Added

More From This Category

x