1 / 20
விழுப்புரம்: திருநங்கைகளின் இஷ்ட தெய்வமாகக் கருதப்படும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சுமார் 50 ஆயிரம் திருநங்கைகள் திரண்டு கூத்தாண்டவர் கோயில் பூசாரிகளிடம் தாலிக் கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். | தகவல் - ந.முருகவேல் | படங்கள்: எம்.சாம்ராஜ்
2 / 20
மகாபாரதப் போரில் அரவான்(கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
3 / 20
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் விழப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டையிலும் நடைபெற்றது. இதையடுத்து திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கியது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த திருநங்கைகள், மணப்பெண் அலங்காரத்தில் வந்து கூத்தாண்டவர் கோயில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர்.
4 / 20
பின்னர் விடிய விடிய கோயில் வளாகத்தில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.மேலும் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.திருநங்கைகளின் வருகையையொட்டியும், கிராம மக்களின் வருகையையொட்டியும் 1300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
5 / 20
இதையடுத்து இன்று காலை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அரவான் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு பலியிடப்படுவார். இதைக் கண்டு திருநங்கைகள் அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தி, தாலிகளை அறுத்து விதவைக் கோலம் பூண்டு சோகத்துடன் ஊர் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும்.
6 / 20
நான்கு கிராம பங்களிப்பில் உருவாக்கப்படும் அரவான்: திருநங்கைகளை மணமுடிக்கும் அரவான் உருவம், கூவாகத்தைச் சுற்றியுள்ள அயன்வேலூர் கிராமத்திலிருந்து மரத்திலான தொடைப் பகுதியும், கீரிமேடு கிராமத்திலிருந்து மார்பு பகுதியும், நத்தம் கிராமத்திலிருந்து தோள்பட்டையும், சிவிலியல் குளம் கிராமத்திலிருந்து கையும், முகம் கூவாகத்திலிருந்து கொண்டுவந்த அரவான் உருவம் உருவாக்கி பலியிடப்படுவது வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.
7 / 20
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலிக் கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் ரூ.50 முதல் தாலியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதாவது, தாலிக் கட்டிக் கொள்ளும் போது ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகள் ரூ. 50 காணிக்கை செலுத்தி, தாலிக் கட்டிக் கொள்வர். சற்று வருமானம் உள்ள திருநங்கைகள் 1 கிராம் முதல் 1 பவுன் வரை தாலி செய்து, அவற்றை பூசாரி கையால் கட்டிக் கொண்டு, மறு நாள் அரவான் பலி பீடத்தில் அறுத்தெறிந்து விட்டுச் செல்வது. அவ்வாறு அறுத்தெறியப்படும் மஞ்சள் கயிற்றில் உள்ள தங்கத் தாலிகள், கோயில் நிர்வாகம் தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்.
8 / 20
இது தொடர்பாக திருநங்கை அமைப்பினர் பேசும்போது, “ஒவ்வொரு முறையில் லட்சக் கணக்கான மதிப்பில் தங்கத்திலான தாலிகளை காணிக்கையாக செலுத்திவருகிறோம். ஆனால் திருவிழா நடைபெறும் சமயத்தில் அடிப்படை வசதிகளை கூட கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என்றக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். கோவையைச் சேர்ந்த நளினி என்பவர் கூறுகையில், “கடந்த 41 ஆண்டுகளாக கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து செல்கிறேன். 21 முறை தங்கத் தாலியும், 20 முறை வெள்ளித் தாலியும் அணிந்து காணிக்கை செலுத்தியுள்ளேன். எனவே இந்து சமய அறநிலையத்துறையினர் இதற்கு சரியான விளக்கம் அளிக்கவேண்டும்” என்றார்.
9 / 20
இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் மதனாவிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் திருநங்கைகள் உட்பட் சுமார் 3 லட்சம் பொதுமக்கள் கோயிலுக்கு வந்து செல்வர் என எதிர்பார்க்கிறோம். திருநங்கைகள் செலுத்திய காணிக்கை விபரங்கள், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. அவற்றை கணக்கீடு செய்து வருகிறோம். விரைவில் அதன் விபரம் வெளியிடப்படும்” என்றார். | தகவல் - ந.முருகவேல் | படங்கள்: எம்.சாம்ராஜ்
10 / 20
11 / 20
12 / 20
13 / 20
14 / 20
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
19 / 20
20 / 20