1 / 15
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே இரு தினங்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'காலிப் பணியிடங்களை நிரப்பவும், கோடை விடுமுறை விடுவது குறித்தும் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநில சமூக நலத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 / 15
பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கை.
3 / 15
தமிழகத்தில் தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவும் சூழலில் 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்தும் குழந்தைகளை பாதுகாக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதுபோல் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் ஒருமாத கால விடுமுறை வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
4 / 15
காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி மைய பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அங்கன்வாடி ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
5 / 15
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் என்பதை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
6 / 15
அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
7 / 15
பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 / 15
10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்களாக மாற்றி, பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 / 15
2 அல்லது மூன்று 3 மையங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி வேலை பளுவை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்குவதுபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.
10 / 15
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் இரு தினங்களாக நடந்து வந்தது.
11 / 15
பல்வேறு மாவட்டங்களிலும் திரளான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 / 15
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் எம்.பி சு. வெங்கடேசன் உரையாற்றினார்.
13 / 15
மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 / 15
இப்போராட்டத்தின் விளைவாக, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினரை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. 'காலிப் பணியிடங்களை நிரப்பவும், கோடை விடுமுறை விடுவது குறித்தும் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
15 / 15
மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த உறுதியை அடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். | படங்கள்: நா. தங்கரத்தினம், கார்த்திகேயன் ஜி, வெங்கடாஜலபதி சி, ராஜேஷ் என், லக்ஷ்மி நாராயணன் இ, படம்: எல்.பாலச்சந்தர்.