Published on : 31 Jan 2025 18:34 pm
இந்தியாவில் உள்ள பாலூட்டிகளிலேயே மிகவும் மர்மமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது மலபார் புனுகுப் பூனையாகத்தான் இருக்க முடியும்.
உடல் எடை 5 முதல் 20 கிலோ வரை உள்ள பாலூட்டிகளைச் சிறிய பாலூட்டிகள் என்று அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
விவரிடே (Viverridae) என்கிற குடும்பத்தைச் சேர்ந்தவைதான் புனுகுப் பூனையும் மரநாயும். இந்தியாவில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பாலூட்டிகள் உள்ளன.
பூனையும் இல்லை நாயும் இல்லை: இவற்றின் பொதுப்பெயர்கள் புனுகுப்பூனை, மரநாய் என்று வழங்கப்பட்டாலும் இவை பூனை (Cats), நாய் (Canids) வகைகளைச் சேர்ந்தவை அல்ல.
இவை இராவாடிகள். பூச்சி, புழுக்கள், சிறிய பறவைகள், முட்டை, எலி முதலியவற்றை உணவாகக் கொண்டாலும் பழங்களையும் இவை விரும்பி உண்கின்றன.
நாம் மரநாய் என்று சொல்லும் உயிரினம் ஆங்கிலத்தில் Common Palm Civet அல்லது Toddy Cat என்பர். அடர் பழுப்பு நிற உடலிலும், முகத்திலும் வெள்ளைத் திட்டுகள் இருக்கும்.
நன்றாக மரம் ஏறும். இது இந்தியாவின் பல இடங்களில் பரவிக் காணப்படுகிறது. மேற்கு மலைத் தொடர்களின் உயரமான பகுதிகளில் இவை தென்படுவதில்லை.
இங்கே Brown Palm Civet எனும் பழுப்பு மரநாய்கள் தென்படுகின்றன. இவை அடர்ந்த மழைக் காடுகளின் மர உச்சிப் பகுதிகளிலேயே அதிகமாக இரை தேடும்.
இவை மேற்குத் மலைத் தொடர்களில் மட்டுமே இருக்கும் ஓரிடவாழ்வி. புனுகுப்பூனை (Small Indian Civet) இந்தியாவின் பல இடங்களில், பல வகையான வாழிடங்களில் தென்படுகின்றன.
மலபார் புனுகுப்பூனை மேற்கு மலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் மட்டுமே இருந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன.
மலபார் புனுகுப்பூனையை இதுவரை நம்பத்தகுந்த வகையில் யாரும் பார்த்ததில்லை. இவற்றின் பதனிடப்பட்ட தோல்கள் மூலமாகத்தான் இன்றுவரை அறியப்பட்டு வருகிறது.
இவற்றைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லாத பட்சத்தில் இவற்றின் முக்கியமான வாழிடம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பகுதிகள்கூட தவறான ஒன்றாக இருக்கலாம்.
இப்படி எந்த முடிவுக்குமே வர முடியாத நிலையில், இப்படி ஓர் இனமே இல்லை என அதிரடியாகத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புனுகுப் பூனை பற்றி அவர்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. | தொகுப்பு: காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன்