Published on : 20 Feb 2023 18:36 pm

சேலம் மயானக் கொள்ளை விழாவில் பக்தர்கள் பரவசம் - போட்டோ ஸ்டோரி

Published on : 20 Feb 2023 18:36 pm

1 / 20
சேலத்தில் அங்காளபரமேஸ்வரி வேடமிட்டு மண்டை ஓடு, மனித எலும்பு, நரம்புகளை கையில் ஏந்தி ஆடு, கோழி கடித்து, ரத்தம் உறிஞ்சி மயான கொள்ளை விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர். | தகவல் - வி.சீனிவாசன் | படங்கள் - எஸ்.குரு பிரசாத்
2 / 20
ஆண்டுதோறும் அங்காளம்மன் கோயில்களில், மாசி மாத சிவராத்திரி விழாவுக்கு மறுநாளான அம்மாவாசை தினத்தில் மயான கொள்ளை விழா நடப்பது வழக்கம்.
3 / 20
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அங்காளம்மன் கோயில்களில் நேற்று மயான கொள்ளை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்திரி தினத்தில் அங்காளம்மனை பூஜித்து வழிபாடு நடத்தினர்.
4 / 20
பக்தர்கள் உடல் முழுவதும் கருப்பு, நீல வண்ணங்களை பூசிக் கொண்டு, அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வேடமிட்டு வந்தனர்.
5 / 20
பக்தர்கள் காவல் தெய்வ வேடத்துடன் மண்டை ஓடு, மனித எலும்பு, நரம்புகளை கையில் ஏந்தி, மயில் தோகையை கட்டிக் கொண்டு மாயான கொள்ளை விழாவில் பங்கேற்றனர்.
6 / 20
சேலத்தில், நாராயணன் நகர், கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பச்சப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் சின்னகடை வீதி அருகே உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு, ஆக்ரோஷத்துடன் நடனமாடியபடி மயானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
7 / 20
சேலம், இரண்டாவது அக்ரஹாரம், முனியப்பன் கோயில் தெரு, மரவனேரி வழியாக காக்காயன் சுடுகாடு நோக்கி சென்றனர்.
8 / 20
அப்போது, வழி நெடுகிலும் சாலையின் இருபுறங்களில் திரளான பக்தர்கள் நின்று கொண்டு, மயான கொள்ளை விழா நிகழ்வை கண்டு, அங்காள பரமேஸ்வரி வேட மணிந்தவர்களை வணங்கி வழிபட்டனர்.
9 / 20
மக்கள் நேர்த்தி கடனாக கொடுக்கும் ஆடு, கோழியை வாயில் கடித்து, ரத்தம் உறிஞ்சியபடி ஆக்ரோஷ நடனமாடினர். வரிசையாக மக்கள் குப்புறப் படுத்துக் கொள்ள, அங்காள பரமேஸ்வரி வேடமணிந்த பக்தர்கள் ஒவ்வொருவரையாய் தாண்டியபடி சென்றனர்.
10 / 20
அம்மனே தாண்டி செல்லுவதாகவும், இதனால், பில்லி, சூனியம், ஏவல், நோய், நொடிகள் அகலும் என்பது மக்களின் நம்பிக்கை.
11 / 20
வேண்டுதல் வைத்த பக்தர்கள் உயிருடன் ஆடு, கோழிகளை கொடுக்க, வாயில் கடித்து, ரத்தம் உறிஞ்சியபடி ஊர்வலமாக மயானத்துக்கு சென்று, உடலில் சாம்பலை பூசிக் கொண்டு, உருண்டு புரண்டு சிவ கோஷம் எழுப்பி விழாவை நிறைவு செய்தனர்.
12 / 20
மயானக் கொள்ளை விழாவின் பின்னணி: படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்ததால், சிவபெருமான் என நினைத்து, பார்வதி தேவி அவரை வணங்கினார். அப்போது, பிரம்மதேவர் பார்வதி தேவியை பார்த்து சிரித்து விட்டார்.
13 / 20
உடனே, இதுகுறித்து சிவபெருமானிடம் பார்வதி தேவி முறையிட, பிரம்மதேவனின் ஒரு தலையை சிவபெருமான் கொய்து விட்டார். சிவபெருமானின் கையில், கொய்யப்பட்ட பிரம்மதேவனின் ஒற்றை தலை ஒட்டிக்கொள்ள, பிரம்மஹஸ்தி தோஷம் ஏற்பட்டது.
14 / 20
மண்டை ஓட்டையே பிச்சைப்பாத்திரமாக மாறி, சிவபெருமானையே பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றார். பிச்சை போடும் உணவானதை சிவனின் கையில் இருந்த கபாலமே உட்கொள்ள, பெரும் பசி பிடியில் சிக்கி அலைந்தார்.
15 / 20
சிவனின் நிலைகண்டு கோபமடைந்த சரஸ்வதி தேவி, கொடிய உருவத்துடன் இருக்க இடம் இல்லாமல் புற்றை வீடாகக் கொண்டு வாழ்வாய் என பார்வதி தேவிக்கு சாபமிட்டார்.
16 / 20
பூமிக்கு வந்த பார்வதிதேவி பல இடங்கள் சென்று மலையரசனுக்கு உரிமையான ஒரு நந்தவனத்தில் புற்றால் மூடிக்கொண்டு தவம் இருந்தார். மீனவ காவலாளி ஒருவர் தடுத்தும் கேட்காமல் பரமேஸ்வரி அங்கே கோயில் கொண்டார்.
17 / 20
அந்த மீனவர் புற்றை கலைக்க முற்பட்டபோது ஆற்றலை இழந்த காரணத்தால், வந்திருப்பது பரமேஸ்வரி என அறிந்தார். பின்னாளில் அந்த இடம் மலையனூராக மாறியது.
18 / 20
இந்த கோயிலுக்கு பரமேஸ்வரி காண சிவபெருமான் வந்த போது, சிவனுக்காக கொடுக்கப்பட்ட உணவை அந்த கபாலம் முழுமையாக சாப்பிட்டது.
19 / 20
பின்னர், பரந்தாமனின் துணைவியார் மகாலட்சுமி கொடுத்த அறிவுரையின்படி, கையில் இருந்த மூன்றாவது கவளத்தை கபாலத்தில் போடாமல், பரமேஸ்வரி, கீழே போட்டு விட்டார்.
20 / 20
சுவையான உணவின் மேல் ஆர்வம் கொண்ட அந்த கபாலம், உணவை உட்கொள்ள சிவனின் கைகளை விட்டு கீழே சென்ற போது, பரமேஸ்வரி கபாலத்தை காலால் பூமியில் வைத்து மிதித்து ஆழ்த்தி விட்டார். இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மயான கொள்ளை விழா நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Recently Added

More From This Category

x