Published : 28 May 2024 06:48 PM
Last Updated : 28 May 2024 06:48 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் வருகிற 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை, பிரதமர் மோடி 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு 30-ம் தேதி மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணியளவில் வருகிறார். அதன்பின்னர், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்கிறார்.
வியாழக்கிழமை மாலையில் இருந்து ஜூன் 1ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்யும் பிரதமர் மோடி அன்று மாலை 3 மணியளவில் தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.பின்பு படகு மூலமாக கரை திரும்பும் பிரதமர் மோடி, மாலை 3.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வரும் வான்வழித்தடத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
மேலும் கன்னியாகுமரி ஹெலிகாப்டர் தளம், படகு தளம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடல் வழியாகவும் இந்திய கடற்படையினர், மற்றும் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விவேகானந்தர் பாறையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடலோர காவல்படையினர் படகுகளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பிரதமர் வருகையை முன்னிட்டு 30ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT