Published : 03 Feb 2024 08:33 AM
Last Updated : 03 Feb 2024 08:33 AM
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதால் முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்தும், மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியில் ஊழல் ஆறாக ஓடுகிறது. இப்படி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின், முதல்வர் பதவியில் நீடிக்க தார்மிக உரிமை இல்லை. முதல்வர் பதவியை அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
பொய் புகார்: குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பொய் புகார் பதிவு செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.இனி வரும் காலங்களில் ஜனநாயக மாண்புகளை கடைபிடிக்கும் வகையில் சட்டப்பேரவை தலைவர் செயல்பட வேண்டும்.
பொங்கல் பரிசு வழங்குவதில் வரலாற்று சாதனை படைத்தது மற்றும் 5 புயல்கள், கனமழை, வறட்சி என அனைத்து பேரிடர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மனிதநேயத்துடன் சமாளித்ததற்காக பழனிசாமிக்கு பாராட்டு, வாழ்த்து, நன்றி தெரிவிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் புதிய வெற்றி சரித்திரம் படைக்க உழைக்க வேண்டும். பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்ஜிஆரை தரக்குறைவாக விமர்சித்த திமுக எம்.பி.யான ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT