Published : 09 Dec 2023 06:53 PM
Last Updated : 09 Dec 2023 06:53 PM

சென்னை மீண்டும் மீண்டும் மழை வெள்ளத்தில் மூழ்குவது ஏன்?!

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சில நாட்கள் தவித்தனர். இந்நிலையில், 2015-க்குப் பின்னர் இப்போது விரிவான வடிகால் பணிகள் மேற்கொண்டும் ஏன் சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. சென்னையில் 2015-ல் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். தற்போது இதுவரை 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2015 மழையையும், 2023 நிலவரத்தையும் ஒப்பிட்டு வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், “கடந்த 2015-ல் நுங்கம்பாக்கத்தில் டிச.1 - 5 காலகட்டத்தில் பெய்த மழையளவுடன் ஒப்பிடுகையில் 2023-ல் இதே காலகட்டத்தில் பெய்த மழையளவு 43 சதவீதம் அதிகம். 2023 டிச.1 முதல் 5 வரை 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 2015-ல் 40 செ.மீ தான் மழை பதிவாகியிருந்தது. மேலும் மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் 16 மணி நேரம் நிலை கொண்டிருந்தது. மேலும், மணிக்கு 8 முதல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இதுவே, சென்னையில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்யக் காரணமாயிற்று. 2015-க்குப் பின்னர் இந்திய வானிலை ஆய்வு மையமானது ரேடார்கள் உள்ளிட்ட அனைத்துக் கருவிகளையும் அதிநவீனமாக மேம்படுத்தி வானிலை கணிப்பை எளிதாக்கியுள்ளது” என்றார்.

இருப்பினும் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியதற்கு வரலாறு காணாத மழையளவு மட்டுமே காரணம் எனக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்களும், வானிலை ஆராய்ச்சியாளர்களும். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறுகையில், “2015-க்கு முன்னரும் கூட சென்னையில் இதுபோன்று பெருமழை பெய்துள்ளது. 1976 நவம்பர் 25-ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 45 செ.மீ மழை பதிவானது. மீனம்பாக்கத்தில் 35 செ.மீ மழை பதிவானது. 1985-ல் நவம்பர் 11 முதல் 13 வரையிலான ஒட்டுமொத்த மழையளவு 73 செ.மீ. சென்னையில் அந்த இரண்டு ஆண்டுகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஆகையால் இப்போதையே மழை வெள்ளத்தை முன் எப்போது நிகழ்ந்திராத நிகழ்வு என்று நாம் கூறிவிட முடியாது” என்றார்.

2015 சென்னை வெள்ள பாதிப்பு

தனியார் காலநிலை ஆராய்ச்சி மையமான க்ளைமேட் ட்ரெண்ட்ஸ் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கடல் வெப்பமயமாதலால் கடம் மேற்பரப்பின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் புயல் மையத்தில் இருந்து 300 கிமீ தொலைவு வரையிலும் கனமழை பெய்கிறது எனக் கூறியது.

2015 பெருமழை வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரி திருப்புகழ் குழு பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த பருவமழையை எதிர்கொள்ள மழை நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 1069.40 கிமீ அளவுக்கான வடிகால் பணிகள் முடிந்துள்ளன. போரூர் ஏரியைச் சுற்றிய பகுதிகளில் 2ஆம் கட்ட வடிகால் பணிகள் நிறைவுபெறாத நிலையில் இந்தப் பெருமழை பெய்துள்ளது.

இந்நிலையில், மழைநீர் வடிகால் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மழைநீர் வடிகால்களானது 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை 10 செமீ மழையளவு பதிவானால் தங்குதடையின்றி நீரை வெளியேற்றும். ஆனால் இடைவிடாமல் பெய்து 50 செமீ மழை பதிவானால் அப்போது நீர் வடிகால்களில் வெளியேறுவது சாத்தியமில்லை. 35 ஆயிரம் தெருக்களில் இருந்து வரும் மழை நீரை வெளியேற்ற 4 கால்வாய்கள் உள்ளன. இந்த ஏற்பாடு மட்டும் செய்யப்படாமல் இருந்தால் சென்னையில் 70 முதல் 75 சதவீத அளவிலான தண்ணீர் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.

நகரின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்படி சென்னையில் நிறைய தாழ்வான பகுதிகள் உள்ளன. அவையெல்லாம் காலங்காலமாக மக்கள் வசிப்பிடமாக இருப்பவை. நீர்நிலைகளுக்கு அருகிலும் இருப்பவை. அதனால் பெருமழையின்போது தண்ணீர் இயல்பாகவே இந்தப் பகுதிகளில் ஊடுருவிவிடுகிறது. வழக்கமான மழை நீர் வெளியேற்றத்தை கால்வாய்கள் இயல்பாகக் கடத்துகின்றன. ஆனால் பெருமழை, பேரிடர் காலத்தில் இந்தப் பகுதிகள் மழைநீர் தேங்கும் இடமாக மாறிவிடுகின்றன. பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் நிற்க நாராயணபுரம், பள்ளிக்கரணை ஏரிகள் உடைந்து உபரி வெளியேறியதே காரணம். மழைக்காலம் முடிந்த பின்னர் இவற்றை சரி செய்யலாம்” என்றார்.

இனி வரும் காலங்களில் அதிகமாக வெள்ளங்களை எதிர்பார்க்கலாம் என்ற நிலையில் அரசாங்கம் வெள்ளத் தடுப்பு மேலாண்மை உத்தியை வகுத்து, பெருங் கால்வாய்களை மேம்படுத்தி ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதே சென்னை மீண்டும் இதுபோன்ற வெள்ளங்களில் சிக்காமல் இருக்க வாய்ப்பாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் கார்மேகம் கூறுகையில், “வியாசர்பாடி பகுதியில் இருந்த 16 ஏரிகள் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. வேளச்சேரி, ஆதம்பாக்கத்தில் உள்ள ஏரிகளில் அதன் முழு பரப்பளவில் வெறும் 30 சதவீதம் மட்டுமே இப்போது இருக்கின்றன. கொரட்டூர், அம்பத்தூர், ரெட்டேரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் பரப்பளவு சுருங்கிவிட்டது. சென்னையில் இனி இதுபோன்ற வெள்ளம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இந்த நீர்நிலைகள் எல்லாம் புத்துயிர் பெற வேண்டும். இவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

ஆபத்து சென்னைக்கு மட்டுமல்ல! - மிக்ஜாம் புயலால் சென்னை பேரிடரை சந்தித்துள்ள நிலையில் கடலோர மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தாவும் இனிவருங்காலங்களில் காலநிலையால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வறிக்கை.

கடல் மட்டம் உயர்வு, வெப்பமண்டல புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆறு, குளங்கள் நிரம்புதல் என நிறைய சீற்றங்களை பெருநகரங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. மக்கள் தொகை அடர்த்தி அதிகமான மெட்ரோ நகரங்கள் ஏற்கெனவே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டன. மழையளவு அதிகமாதலும், வெள்ளம் ஏற்படுவதும், வறட்சி ஆபத்து ஏற்படுவதும் அங்கே தொடங்கிவிட்டன என போஸ்ட்டேம் இஸ்ண்டிட்யூட் ஆஃப் க்ளைமேட் இம்பாக்ட் ரிசேர்ச் அண்ட் க்ளைமேட் அனலிடிக்ஸ் எச்சரிக்கின்றது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக கடற்கரை நகரிகளில் கடல் அரிப்பு அதிகமாதலும் அதனால் விவசாயம் பாதிக்கப்படுவதும், நிலத்தடி நீர் தரம் குறைவது, நீரினால் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகரிப்பதும் ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.

2021-ல் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு -Intergovernmental Panel on Climate Change (IPCC) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்ற எச்சரிக்கை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக கடல் நீர் மட்ட உயர்வால் 12 கடற்கரை நகரங்கள் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் மூழ்கும் சூழல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

கட்டுரை உறுதுணை: ஆர்.ஐஸ்வர்யா, செரீனா ஜோஸ்ஃபின்.எம். | தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x