Published : 05 Dec 2023 03:58 AM
Last Updated : 05 Dec 2023 03:58 AM
வேலூர்: வேலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான விக்டோரியா மகாராணி பொன்விழா ஆண்டு நினைவுத் தூணில் செடிகள் முளைந்து சேதமடைந்து வருகிறது. வேலூர் மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக நினைவுத்தூணை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உலகின் சூரியன் மறையா நாடு என்ற புகழ்பெற்ற பிரிட்டன் பேரரசின் நீண்ட கால ஆட்சியில் இருந்தவர் விக்டோரியா மகாராணி. ஏறக்குறைய 63 ஆண்டுகள் 7 மாதங்கள் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருந்த அவரது ஆட்சிக் காலத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனி மூலம் உலகின் பல்வேறு கண்டங்களில் காலனி நாடுகள் ஏற்படுத்தப்பட்டன. உலகின் பெரும் பகுதியை ஆண்ட அரசியாக விக்டோரியா மகாராணி இருந்தார் என்றே கூறலாம். இவரது ஆட்சிக்காலம்தான் பிரிட்டன் பேரரசின் பொற்காலம் என்று கூறலாம். அதாவது,தொழிற்புரட்சியின் உச்சக்கட்டம் எனலாம். மேலும், இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சிகள் அதிகம் மேம்பட்டன. ஏறக்குறைய அக்காலகட்டத்தில் உலகின் சக்தி வாய்ந்த வல்லரசு நாடாக பிரிட்டன் பேரரசு இருந்தது.
இவர், பிரிட்டன் பேரரசின் மகாராணியாக பொறுப்பேற்று 50-வது ஆண்டு கொண்டாட்டம் கடந்த 1887-ம் ஆண்டு ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டை உலகின் உள்ள அனைத்து காலனி நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நினைவுத்தூண் நிறுவப்பட்டுள்ளன. அதில், வேலூர் கோட்டைக்கு அருகில் (அண்ணா கலையரங்கம் அருகே) விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. இந்த நினைவுத்தூண் வேலூர் மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
ஏறக்குறைய 135 ஆண்டுகள் பழமையான விக்டோரியா மகாராணியின் நினைவுத்தூண் மையத்தை தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நினைவுத்தூண் அருகில் செயற்கை நீரூற்றுடன் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு நேரத்தில் அழகாக காட்சியளித்து வந்தது. ஒரு கட்டத்தில் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் பராமரிப்பு நின்று போனதால் தற்போது சீரழிந்து வருகிறது. மேலும், நினைவுத்தூண் பகுதியில் அரசமர செடி வளர்ந்து சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விக்டோரியா மகாராணியின் பொன்விழா நினைவுத்தூண் வளாகம் சேதமடைந்த வருவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நினைவுத்தூண் வளாகத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த இடத்தில் ரூ.14.90 லட்சம் மதிப்பில் நம்ம வேலூர் என்ற செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட உள்ளது. அந்த நேரத்தில் அனைத்து குறைகளும் சரியாகும்’’ என்றனர். விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டை உலகின் உள்ள அனைத்து காலனி நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நினைவுத்தூண் நிறுவப்பட்டது. அதில், வேலூர் கோட்டைக்கு அருகில் விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டு நினைவுத்தூண் நிறுவப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT