Published : 18 Feb 2020 02:33 PM
Last Updated : 18 Feb 2020 02:33 PM
குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது, அதனை மகாராஷ்டிராவில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி உத்தவ் தாக்கரே இன்று கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதுபோலவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் வேறானது. குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. அதனை மகாராஷ்டிராவில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அதேசமயம் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT